“பிள்ளைகளுக்கு கதை கேட்பதில் எத்தனை இன்பம். கதை சொல்லுவதில் பாட்டிக்குத் தனி இன்பம். பாட்டி தான் கண்டதையும் கேட்டதையும் தன்னைப்பற்றியும் தன் குடும்பம் தன் பந்துக்கள், தன் கிராமம், தன் ஊர், தன் இன்ப துன்பம் இவைகளைப்பற்றியும் கதை கதையாகச்சொல்லுவாள். பேரன் பாட்டியை கதைசொல்லும்படி கேட்டபோது, அவள் நான் பிறந்த கதைசொல்லுவேனா? நான் பட்ட கதைசொல்லுவேனா? என்ற கேள்வியைச்சொல்லி கதையை ஆரம்பித்தாளாம். பலவருடங்களுக்குப்பின் மலைநாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட்டியிடம் கதைசொல்லும்படி கேட்டால், அநேகமாய் பழைய பாட்டி சொன்ன பதிலையே சொல்லுவாள். அது நாம் பிறந்த கதையாகவும் பட்ட கதையாகவும்தான் இருக்கமுடியும். இந்தக்கதை நாடற்றவர், வீடற்றவர் கதை.” இவ்வாறு தொடங்குகிறது அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை. இதன் முதல் பதிப்பு 1987 இல் தமிழகத்தில்தான் வெளிவருகிறது. அவருடைய வாரிசுகளில் ஒருவரான இர. சிவலிங்கம் அதனை தமிழகத்தில் வெளியிடுகிறார்.
உலகின் பலபாகங்களில் இன்றும் நாடற்றவர்கள், வீடற்றவர்கள் பரதேசிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயக்குநர் பாலாவும் பரதேசி என்ற பெயரிலே அவர்களின் கதையை படமாக்கினார். பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லக்கூடிய பாட்டிமாரின் நேரத்தை தற்காலத்தில் மெகா சீரியல்கள, தொலைக்காட்சிகள் ஊடாக ஆக்கிரமித்துள்ளன. அதனால் கதைசொல்வதற்கு பாட்டிகளும் இல்லை. கேட்பதற்கு பேரர்களும் இல்லை. பாட்டிகள் வேறு உலகத்திலும் பேரர்கள் வேறு உலகத்திலும் இருக்கும் இக்காலத்தில் இலங்கையில் வெள்ளையர்களினால் இழுத்துவரப்பட்டு மலையக காடுகளை பசுமையாக்கிய கறிவேப்பிலைகளாக தூக்கியெறியப்பட்டு ஒப்பாரிக்கோச்சிகளில் ஏற்றப்பட்டவர்களின் கதையை சி.வி. வேலுப்பிள்ளையின் நூலிலிருந்து தெரிந்துகொள்கின்றோம். கறிவேப்பிலைகள், ஒப்பாரிக்கோச்சி என்ற தலைப்புகளிலும் இலங்கை மலையக எழுத்தாளர்கள் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.
சி.வி. என்று இலக்கியஉலகில் அறியப்பட்ட வேலுப்பிள்ளை அவர்கள் மலையகத்தில் தலவாக்கொல்லையில் மடக்கொம்பரை என்ற கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தவர். அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்த நிலையில் அவர் பற்றி எழுதுகின்றேன். இவரை கொழும்பில் ஒரே ஒரு தடவைதான் சந்தித்துபேசியிருந்தாலும் அன்றைய தினத்தை என்னால் மறக்கமுடியாது. 1982 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெள்ளவத்தையில் இலக்கிய ஆர்வலர் நண்பர் ரங்கநாதன் அவர்களின் இல்லத்தில் ஒரு இனிய மாலைப்பொழுதில் நடந்த சந்திப்பில்தான் அவரை முதல் முதலில் கண்டேன். அவ்வேளையில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடக்கிவைத்திருந்தது. தமிழகத்திலிருந்து எழுத்தாளரும் அவ்வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளரும் கட்சியின் ஏடு ஜனசக்தியின் ஆசிரியருமான தோழர் த. பாண்டியனை அழைத்திருந்தது.
அவர் தமிழகம் திரும்புவதற்கு முதல் நாள் ரங்கநாதன் இல்லத்தில் நடந்த சந்திப்பு தேநீர் விருந்துபசாரத்திற்கு சி. வி. வேலுப்பிள்ளையும் வருகை தந்திருந்தார். பேராசிரியர் கைலாசபதி, சோமகாந்தன், மாணிக்கவாசகர், பிரேம்ஜி ஞானசுந்தரன், அந்தனி ஜீவா, தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, நீர்வை பொன்னையன் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.