அதிகாலை ஐந்துமணி. அறையின் கதவு தட்டப்படும் சத்தம். எரிச்சலாக இருந்தது.
சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன்.
அங்கே… அறிமுகமில்லாத ஒரு சிறுவன்.
“யாரப்பாநீ…. காலங்காத்தால வந்து கதவைத்தட்டி உசிரைவாங்குறே… எதுக்கு…? ’’
கொட்டாவி விட்டபடி கேட்டேன்.
தெருவில் பால்க்காரர்களின் சைக்கிள் ’பெல்’ ஒலி…. இட்லிக்கடையில் ஒலிக்கும் பக்திப்பாடல்….. ஆகியன வைகறையை வரவேற்றன.
அந்தச்சிறுவன், என்னை ஏறஇறங்க நோக்கினான். வலக்கரம் நெற்றிக்குச்சென்றது. ‘’சலாம்’’ போட்டான்.
“வணக்கம்சார்…. எம்பேரு சுப்புறுமணியன்… வயசுபன்னிரண்டு… எல்லாரும்என்னய “சுப்புறு”ண்ணு கூப்பிடுவாங்க… வீடுவீடாய்ப் போயி அவங்கசொல்ற வேலைய செஞ்சு குடுப்பேன்….”
பேச்சினில் பணிவு. பார்வையில்கம்பீரம். “மனக் கேமரா” வில் அவனைக் “கிளிக்” செய்தேன்.
தொடர்ந்து அவனே பேசினான்.
“ நேத்து பகல்பூராவும் நீங்க வீடுதேடி அலைஞ்சதும்., பூசாரி அருணாசலம்ஐயா தயவால சாயந்தரம்போல இந்த “ரூம் “ கெடைச்சதும்… வரையில எனக்குத்தெரியும்….”
நான் குறுக்கிட்டேன்.
“சரி..சரி… இப்பநீ எதுக்குவந்தே… சொல்லிட்டுக் கெழம்பு ”
“தப்பா நெனைக்காதீங்க…. பஞ்சாயத்துநல்லீல தண்ணிவருது…. குடமோ, பானையோ இருந்தாக் குடுங்க…. சத்தே நேரமானா கூட்டம்ஜாஸ்தியாகிடும்…. “பணிவாக வந்தது அவன் குரல்.
நேற்று மதியமே பூசாரி அருணாசலம் அண்ணாச்சி கூறியிருந்தார்., “ தண்ணிபுடிக்கக் குடம் ஒண்ணு வாங்கிக்க….”
அப்போது வாங்குவதற்கு மறந்துவிட்டேன். இப்போது இந்தச் சிறுவன் முன்னே தலை சொறிந்தேன்.
“ இல்லைப்பா…. நான் குடமெதுவும் வாங்கிக்கல்ல….. இண்ணைக்கு வாங்கிக்கிறேன்…. நாளையிலயிருந்து தண்ணிபுடிச்சுக் குடு……”
பதிலை எதிர்பாராமல், கதவை அடைத்தேன். தூக்கம் உலுக்கி எடுத்தது.