காதலன் – 4
எனது இளைய சகோதரன் 1942ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்திருந்தான். 1932ம் ஆண்டிலிருந்து 1949ம் ஆண்டுவரை சைகோனில் இருப்பதென்பது பெண்மணியின் திட்டம். இளைய சகோதரின் இறப்பு அவள் வாழ்க்கையை முடக்கிவிட்டது. அவள் வார்த்தையில் சொல்வதென்றால், ‘வீடு, வீட்டை விட்டால் இளைய சகோதரனின் கல்லறை,’ முடிந்தது. பிறகு ஒருவழியாக பிரான்சுக்குத் திரும்பினாள். நாங்கள் இருவரும் திரும்பவும் சந்தித்தபோது என் மகனுக்கு இரண்டுவயது. இச்சந்திப்பு கூட காலம் கடந்ததே. அவளது மூத்த மகனைத் தவிர்த்து, எங்களை இணைக்க வேறு விஷயங்கள் இல்லை என்பதால், எங்கள் சந்திப்பு அர்த்தமற்றது என்பதைப் பார்த்த்வுடனேயே புரிந்துகொண்டோம். ‘லுவார்-எ-ஷேர்'(Loire-et-Cher) என்ற இடத்தில் பதினான்காம் லூயிகாலத்து அரண்மனை மாதிரியான ஓர் இடத்தைப் பிடித்து தன் வாழ்நாளின் எஞ்சிய நாட்களை அங்கே கழிப்பதென்று, வேலைக்காரி ‘தோ’வுடன் குடியேறினாள். .அங்கும் இரவென்றால் அவளுக்குப் பயம், வேட்டைக்கான துப்பாக்கியொன்றை விலைகொடுத்துவாங்கி பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டாள். மேல்மாடியிலிருந்த மச்சுகளில் ‘தோ’ காவல் இருந்தாள். தனது மூத்த மகனுக்கு ஆம்புவாஸ்(Amboise) அருகே சொத்தொன்று வாங்கினாள். அங்கு சுற்றிலும் ஏறாளமாய் மரங்கள். ஆட்களை ஏற்பாடுசெய்து மரங்கள் முழுவதையும் வெட்டிச் சாய்த்தான். பாரீஸில் இருந்த பக்காரா சூதாட்டவிடுதிக்குச் சென்றான். ஒர் இரவிலேயே மரத்தை விற்றுச் சம்பாதித்த பணம் அத்தனையும் தொலைந்தது. கணத்தில் நினைவுகள் வேறுதிசைக்கு பயணிக்க, எனது விழிகள் கண்ணீரில் மிதக்கின்றன, அக்கண்ணீருக்கு மூலம் எனது சகோதரனாக இருக்கலாம். மரங்களையும், அதற்குண்டான பணத்தினையும் இழந்தபிறகு நடந்த சம்பவம் நினைவில் இருக்கிறது. ‘மோன் பர்னாஸில்'(Montparnasse) லா கூப்போல்(La Coupole)1 எதிரே, மோட்டார் வாகனத்திற்குள் அவன் படுத்துக்கிடந்தாய் நினைவு. அதுத் தொடர்பாக வேறு எதையும் நினைவுபடுத்த இயலவில்லை. பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பதை அறிந்திராத ஐம்பது வயது குழந்தையான மூத்தமகனுக்கென்று, அவ்வளவு பெரிய கோட்டையை வைத்துக்கொண்டு அவள் செய்த காரியங்கள் கற்பனைக்கு எட்டாதது. கோழிக்குஞ்சுகள் பொறிக்கவென்று எந்திரங்கள் வாங்கினாள், கீழே இருந்த பெருங்கூடமொன்றில் அவற்றைப் பொருத்தினாள். திடுமென்று, அருநூறு குஞ்சுகள், நாற்பது மீட்டர் பரப்பளவுகெண்ட கூடம் கோழிக்குஞ்சுகளால் நிறைந்தன. எந்திரத்தின் வெப்ப அளவை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாததால் குஞ்சுகளின் அலகுகள் பொருத்தமின்றி இருந்தன, அவைகளை மூட இயலாலாமல் குஞ்சுகள் தவித்தன, பசியில் வாடின. கோழிக்குஞ்சுகள் பொறிக்க இருந்த நிலையில் கோட்டைக்குச் சென்ற ஞாபகம், அதன்பிறகு செத்துக்கிடந்த குஞ்சுகளும், அவற்றுக்கான தீனியும், கெட்டு துர்நாற்றமெடுத்தபோது அங்கு மறுபடியும்போயிருக்கிறேன், வாந்தி எடுக்காமல் அப்பொழுது சாப்பிட்டதில்லை.