விரைவில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ள எனது ‘குடிவரவாளன்’ நாவலின் அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?), அத்தியாயம் பத்தொன்பது: கோஷின் காதல்! ஆகிய இரு அத்தியாயங்களை உங்கள் வாசிப்புக்காக இங்கு தருகின்றேன்.
அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)
நான்காவது வீதி மேற்கு , ஏழாவது அவென்யு, கிறிஸ்தோபர் வீதி ஆகிய வீதிகள் சந்திக்கும் சந்திப்பிலுள்ள நடைபாதையொன்றில் நடைபாதை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஹென்றியை முதலில் ஹரிபாபுதான் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்: “இவன்தான் நான் கூறிய ஹென்றி. எஸ்கிமோ ஹென்றி.” அவ்விதம் கூறியபொழுது ஹரிபாபுவின் வதனத்தில் இலேசானதொரு பெருமிதம் கலந்த முறுவலொன்று ஓடி மறைந்ததுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அந்தப் பெருமிதம் அவனது குரலிலும் தொனித்ததாகவும் பட்டது. ஒருவேளை ‘பார்த்தாயா என் சாமர்த்தியத்தை, மராத்தியனான நான் கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து வந்து, இங்கு இந்த நாட்டின் ஆதிக்குடிகளிலொருவனைக் கட்டி வைத்து வேலை வாங்குகின்றேனே! என்ன நினைத்துக் கொண்டாய் என்னைப் பற்றி..’யென்று அவன் கருவத்துடன் உள்ளூர நினைத்துக் கொண்டிருக்கலாமோவென்று இளங்கோ தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். அதே சமயம் குள்ளமாகவும், குட்டையான கால்களுடனும் அந்த எஸ்கிமோ இருந்தான். இளங்கோவுக்கு அவனை அங்கு பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. அந்த ஆச்சரியம் தனது குரலில் தொனிக்க வேடிக்கையாக, “எஸ்கிமோவான உனக்கு இங்கென்ன வேலை. துருவத்தை விட்டு நீயும் புலம்பெயர்ந்து விட்டாயா? உன்னையும் நாகரிக மோகம் பற்றிக் கொண்டு விட்டதாயென்ன?” என்றான். அதைக் கேட்டதும் எஸ்கிமோ ஹென்றியும் இலேசாகச் சிரித்துக் கொண்டான்: “எத்தனை நாள்தான் துருவத்திலேயே சஞ்சரிப்பது. குளிர் அலுத்து விட்டது. துருவம் விட்டுத் துருவமாகப் பறவைகளே வருடா வருடம் இடம்மாறும்போது மனிதனான நான் மாறுவதிலென்ன தப்பு? ஒரு மாறுதலுக்காக இந்த மாநகருக்கு வந்தவனை இந்த ஹரிபாபு இவ்விதம் வளைத்துப் பிடித்துக் கொண்டான்” என்றும் சிறிது மேலதிகமாகத் தகவல்களைப் பகிரிந்தும் கொண்டான்.
இளங்கோ: “என்ன எஸ்கிமோவுக்குக் குளிர் அலுத்துவிட்டதா? ஆச்சரியமாகவிருக்கிறதே..”
“இதிலென்ன ஆச்சரியம். என்னைப்போலிங்கு இந்த மாநகரை நோக்கிப் பல எஸ்கிமோக்கள் படையெடுத்திருக்கின்றார்கள்” என்ற எஸ்கிமோ ஹென்றியைப் பார்த்து இப்பொழுது அருள்ராசா இடைமறித்திவ்விதம் கேட்டான்: “நானறிந்தவரையில் எஸ்கிமோக்களால் குளிர்பிரதேசங்களைக் கடந்து வேறிடங்களுக்குச் சென்று வாழ அவர்களது உடலமைப்பு இடம் கொடுக்காதென்றல்லவா இதுவரையில் எண்ணியிருந்தேன். உன்னைப் பார்த்தால் அவ்விதம் தெரியவில்லையே”
இதற்கு ஹென்றியின் பதில் அறிவுபூர்வமானதாகவும், தர்க்கச் சிறப்பு மிக்கதாகவுமிருந்தது: “வெப்பமான காலநிலையில் சஞ்சரித்த உன்னால் இந்தக் குளிர்பிரதேசத்திற்கு வந்து வாழ முடியுமென்றால் இந்தக் கண்டத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இதே கண்டத்தின் இன்னுமொரு பகுதியில் வசிப்பதிலென்ன கஷ்ட்டமிருக்க முடியுமென்று நீ நினைக்கின்ன்றாய்?”