– பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ் அகஸ்தியரின் இருபதாவது நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி இக்கட்டுரை வெளியாகின்றது. –
தமிழ் இலக்கிய உலகில் அகஸ்தியர் என்ற பெயர் மிகப் பிரபலமான ஒன்றாகும். பௌராணிக கதைகள் கூறும் குறுமுனிவர் அகஸ்தியர் இந்தியாவின் வடபுலத்திலிருந்து தென்புலத்திற்கு வந்து தமிழிலக்கியத்தையு(ள)ம் மொழி அமைப்பையும் புதிய நெறியிலே வளர்த்தார் எனக் கூறப்படுகிறது. இதே போன்று இருபதாம் நூற்றாண்டில் இலங்கையின் வடபுலத்திற் பிறந்து வளர்ந்து தென்புலத்திலும் மத்தியபுலத்திலும் வாழ்ந்து பூமிப்பந்தின் மேலைப்புலத்திற் சங்கமமாகிவிட்ட அசுர எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர், புதிய இலக்கிய அரசியற் கோட்பாடுகளைத் தம்மகத்தே கொண்ட நூற்றுக்கணக்கான ஆக்கங்களைத் தந்து தமிழ் இலக்கிய உலகிற் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
தனக்கெனவும் தனது குடும்பத்திற்கெனவும் தனது சுற்றத்துக்கெனவும் மட்டும் வாழாது தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்துக்காகவும் நாட்டுக்காகவும் அவற்றையும் கடந்து மனிகுலத்துக்காகவும் தனது வாழ்க்கையையும் சுகபோகங்களையும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்ணிப்பவன் சராசரி மனிதனிலிருந்து உயர்ந்து நிற்கின்றான். இறந்தும் இறவாது வாழ்ந்து கொண்டிருக்கின்றான்: போற்றுதலுக்குள்ளாகின்றான். அத்தகையவர்களுள் அமரரான அகஸ்தியரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணத்து ஆனைக்கோட்டையிற் பிறந்து பிரான்சின் தலைநகரான பாரிஸ் மாநகரத்திற் சங்கமமாகிவிட்ட அவரது முற்போக்குச் சிந்தனைகளும் உயர்ந்த கருத்துக்களும் இலங்கைக்கோ, தமிழ் உலகுக்கோ மட்டுமன்றி பிரதேச, இன, மத, மொழி, நாட்டு எல்லைகளைத் தாண்டிய அனைத்துலகுக்கும் சொந்தமானவை, நன்மை பயப்பவை.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்டை என்னும் கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு சவரிமுத்து அன்னம்மா தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்து, ஆனைக்கோட்டைத் தமிழ்ப் பாடசாலையிற் கல்வி பயிலத் தொடங்கி, எஸ்.எஸ்.ஸி வகுப்புடன் பாடசாலைக் கல்விக்கு – வரன்முறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தபோதும் தமது அறுபத்தொன்பதாவது வயதில் அமரராகும் வரையும் கீழை நாடுகளதும் மேலைநாடுகளதும் தத்துவம், அரசியல், தர்க்கவியல், அறிவியல், சித்தாந்தக் கோட்பாடுகள் முதலிய பலதுறைகள் சார்ந்த நூல்களையும் கீழைத்தேய, மேலைத்தேய இலக்கியங்களையும் இடையறாது கற்று வந்தார். இறுதி மூச்சுவரை அலுப்புச் சலிப்பின்றி எழுதி வந்தார். மரணப் படுக்கiயில் இருந்தபோதும் அவரது கை எழுதுவதை நிறுத்தியதில்லை.