வாசிப்பும், யோசிப்பும் 137: ஞானியின் ஞானச்செருக்கில் விளைந்த ஞானச்சிறுமை!

இசைஞானி இளையராஜா!அண்மையில் இசைஞானி என்றழைக்கப்படும் இளையராஜா அவர்கள் சென்னை வெள்ளப்பாதிப்பு உதவி சம்பந்தமாகக்கலந்துகொண்ட் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வந்திருந்தபொழுது அவரிடம்  ஊடகவியலாளரொருவர் சிம்பு/அநிருத்தின் ‘பீப்’ பாடல் பற்றிக்கேட்டார். அதனைச்செவிமடுத்த உடனேயே இளையராஜா அந்த ஊடகவியலாளரைப்பார்த்து ‘உனக்கு அறிவிருக்கா?’ என்று எரிந்து விழுந்தார். இது சமூக ஊடகங்களிலும், வெகுசன ஊடகங்களிலும் பரபரப்பு மிக்க செய்திகளிலொன்றாக மாறிவிட்டிருக்கின்றது. இளையராஜா ‘சரி’யென்று ஒரு குழுவும், ‘சரியில்லை அது பிழை’ என்று இன்னுமொரு குழுவும் கோதாவில் இறங்கியிருக்கின்றன.

நிகழ்வொன்றுக்குக் கலந்து கொள்ளவரும் கலை,இலக்கியவாதிகள் தொடக்கம் அரசியல்வாதிகள் வரை , எல்லாருமே இவ்விதமான சர்ச்சைகள் மிகுந்த சம்பவங்கள் பற்றிய கேள்விகளை எதிர்கொள்பவர்கள்தாம். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் என்னும் நிலையில் இவ்விதமான வினாக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் பண்பட்ட கலை, இலக்கியவாதிகளோ, அரசியல்வாதிகளோ இவ்விதம் இளையராஜா எரிந்து விழுந்ததைப்போன்று எரிந்து விழுவதில்லை. நிதானமாகக் கேள்விகள் எதுவானாலும் அவற்றை எதிர்கொண்டு பதிலளிக்கத்தவறுவதில்லை. உதாரணமாக மேற்படி நிகழ்வில், கலந்துகொண்ட நிகழ்வுக்குச்சம்பந்தமற்ற கேள்வியினை அந்த ஊடகவியலாளர் கேட்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று இளையராஜா அவர்கள் கருதியிருந்தால், அவர் அந்த ஊடகவியலாளரிடம் ஆத்திரப்படாமல், நிதானமாக தற்போது தான் கலந்துகொள்ள வந்துள்ள நிகழ்வுக்குச்சம்பந்தமற்ற எந்தவொரு கேள்வியினையும் தான் எதிர்கொள்ள விரும்பவில்லையெனவும், இன்னுமொரு உரிய நிகழ்வில் இது பற்றிப்பதிலளிப்பதாகவும் கூறியிருக்கலாம்.

இசைஞானிக்கு அந்த ஊடகவியலாளரின் மேற்படி கேள்வி ஏன் அவ்வளவு ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று நினைத்துப்பார்க்கின்றேன். தான் இசையமைத்திருந்த ‘நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்!’ பாடலை ஒருமுறை அவர் நினைத்திருக்கலாம். ‘நேற்று ராத்திரி யம்மா’வில் ஜானகியம்மாவின் முக்கல், முனகல்களில் வெளிப்படும் உணர்வுகளின் பாவங்களை எண்ணியிருக்கலாம். இவ்விதமான கேள்விக்குப்பதிலளிப்பது இறுதியில் தன் மீதே வந்து பாயுமென்று கருதியிருக்கலாம். ஒருவேளை அவர் சிம்புவின் ‘பீப்’ பாடலுக்கு எதிர்ப்பினைத்தெரிவித்திருந்தால், அடுத்த கணமே அந்த ஊடகவியலாளர் ‘அப்படியென்றால் ‘நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்’ பாடலின் இறுதியில் ஆண், பெண் உறவின் உச்சக்கட்ட உணர்வாக வெளிப்படும் ஜானகி அம்மாவின் குரலைப்பாடிக்காட்டியிருக்கலாம். அந்தச்சமயத்தில் இசைஞானி பதிலெதுவும் கூற முடியாமல் , திக்குமுக்காடிப்போயிருக்கலாம். கண்ணாடி வீட்டினுள்ளிருந்து கல்லெறிய இசைஞானி விரும்பவில்லை. அதனால்தான் அவருக்கு அந்த இளம் ஊடகவியலாளரின் அந்தக் கேள்வி ஆத்திரத்தை எழுப்பியதுடன் , அந்த ஊடகவியலாளரின் அறிவு பற்றி மட்டம் தட்டவும் தூண்டியிருக்க வேண்டும்.

Continue Reading →

நினைவுகளின் தடத்தில் (2)!

- வெங்கட் சாமிநாதன் -அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்..’ முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் ‘பதிவுகள்’ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் ‘பதிவுகள்’ இதழில் மீள்பிரசுரமாகும். – திவுகள் –


எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன் பாட்டி இத்தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது அது பற்றி என் சிந்தனைகள் சென்றதில்லை. பின்னாட்களில், கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, பாட்டியின் வைதவ்ய கோலம் மிகப் பெரிய சோகமாக நினைப்புகளில் கவிழும். அவ்வப்போது பாட்டி தன் மனம் நொந்து போன வேளைகளில் தனக்குள் சொல்லிக்கொள்வாள். தனக்கு விதிக்கப்பட்ட விதியை எண்ணி, இப்போது வாழும் வறுமையை எண்ணி. ‘ஒண்ணா ரெண்டா, ஒண்ணொணா குழிலேண்ணாடா போட்டேன்” என்று சொல்லிச் சொல்லி புலம்புவாள், மாய்ந்து போவாள். மாமாவுக்கு அடுத்து என் அம்மா, பின் ஒரு பெரிய இடைவெளி. கடைசிகுழந்தை என் சின்ன மாமா. என் அம்மாவுக்கும் சின்ன மாமாவுக்கு இடையே பிறந்த குழந்தைகள் குழந்தைகளாகவே இறந்து விட்டன. அதைத் தான் நினைத்து நினைத்து பாட்டி புலம்பிக் கொண்டிருப்பாள். மாமா கும்பகோணம் காலேஜில் FA பரிட்சை எழுதப் போயிருக்கிறார். தாத்தா இங்கு சுவாமி மலையில் இறந்து விட்டார்,. உடனே கூட்டிக்கொண்டு வா என்று காலேஜுக்கு ஆள் அனுப்பி, மாமா வந்தவர் தான். பின் படிப்பைத் தொடரும் வசதி இல்லை. இதெல்லாம் பாட்டி அவ்வப்போது தன் விதியை நொந்து புலம்பும் போது சொன்ன விவரங்கள். படிப்பை நிறுத்திய பிறகு, குடும்பம் எப்படி நடந்தது, ஆசிரியப் பயிற்சி மாமா பெற்றது எங்கே, எப்படி, என்பதெல்லாம் தெரியாது. தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம் எப்படி நடந்தது என்பதும் தெரியவில்லை. மறைந்த தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் ஆணோ, பெண்ணோ யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. விவரம் தெரிந்த பிறகு, உமையாள்புரம், பாபுராஜபுரம், சுவாமி மலை என்று அடுத்தடுத்து இருக்கும் ஊர்களில், தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒன்று விட்ட சகோதரர்கள், சகோதரிகள் என்று தான் இருந்தார்கள். அவரவர் குடும்பம், வாழ்க்கை அவரவர்க்கு என்றாகியிருக்க வேண்டும். மாமா பிறந்த வருடம் 1910. அவர் FA பரிட்சை எழுதிக் கொண்டிருந்த போது தாத்தா இறந்தார் என்றால், அனேகமாக அது 1927-28 வருட வாக்கில் இருக்க வேண்டும்.

Continue Reading →