அறைக்குள் புகுந்த தனிமை- சந்திராவின் மைல் கல்லான சிறுகதை
தமிழின் நவீனப் புனைகதைகளில் மைல் கல்லான கதைகள் என எப்போது தேர்வு செய்தாலும் சந்திராவின் ‘அறைக்குள் புகுந்த தனிமை இடம் பெறும். சந்தேகமே கிடையாது. ஆறு வருடங்கள் ஆகிவிட்டன வெளியாகி. இப்போது வாசிக்கும் என்மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான கதை. முதலில் வாசியுங்கள். இணைப்பு இது.
ஆணாதிக்க மனப்பான்மை (male chaunism) என்பது தான் என்ன? அது ஒரு நோயா? இல்லை காலம் காலமாக ஊறிய மனப்பான்மையா? இவை எல்லாமேயா? இதுதான் ;அனேகமாக எல்லா ஆண்களிடமுமே இருக்கிறதே. கொஞ்சம் பெண்கள் சகித்துக் கொண்டு போனால் தான் என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கு இப்போது நாம் விடைகளை அறிவோம். ஏனெனில் கதையை நீங்கள் படித்து விட்டீர்கள்.
எனக்கு வாயில் வந்த படி அடுத்தவர்கள் பற்றி எதாவது மட்டமாகப் பேசுவதில் மிகவும் லயிப்பு அதிகம். போகிற போக்கில் உங்கள் மத குரு, உங்க:ளுக்குப் பிடித்த சிந்தனையாளர், அரசியல் தலைவர் என யாரைப் பற்றி வேண்டுமானாலும் மிகவும் மட்டமான மொழியில் ஏதேதோ பேசிக் கொண்டே போகிறேன். உங்களுக்குள் அது என்ன மாதிரியான வேதனையை, வலியை, காயத்தை, அவமதிப்பை, அவமானத்தை, ஆத்திரத்தை, கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றி எனக்கு என்ன அக்கறை. வாயில் வந்த படி பேசுவது என் அடிப்படை உரிமை இல்லையா?
மேலே உள்ள உதாரணம் சொரணை பற்றியது. பெண்களுக்கென சில பிரத்யேக சொரணைகள் (finer sensitivities or unique senstitivities) உண்டு. அதை நாம் தெரிந்து கொள்ள முயல்வதே இல்லை. ஏனென்றால் நான் ஆண். பெண் என்னைப் பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும். அதனால் அவளது சொரணைகள் பற்றி எனக்கு என்ன தெரிய வேண்டும்? ஒன்றும் தேவையே இல்லை. சரி. அவளை நான் புண்படுத்தி விட்டால் தான் என்ன? ஆண் துணையில்லாமல் பெண்ணால் வாழ முடியுமா? இத்யாதி இத்யாதி சிந்தனைகள் எனக்குள் ஊறி இருக்கின்றன.