இலங்கைத்தமிழ்ப்பொப் இசையென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவர் நித்தி கனகரத்தினம்தான். அமரர் கமலநாதன் எழுதிய ‘சின்ன மாமியே!’ பாடல் மூலம், அதனைப் பாடி, அதனை பட்டி தொட்டியெங்கும் அறிய வைத்து, அதன் காரணமாகவே இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நித்தி கனகரத்தினம். நான் முதலில் கேட்ட ஈழத்துப்பாடல் ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?’ பாடல்தான்.
நித்தி கனகரத்தினம் பாடிய மூன்று பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை என்பேன். ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?’ , ‘கள்ளுக்கடைப் பக்கம் போகாதே! உன் காலைப்பிடித்துக்கெஞ்சுகிறேன்.’ மற்றும் ‘லண்டனிலை மாப்பிள்ளையாம் பெண்ணு கேட்கிறாங்க’ ஆகிய பாடல்கள்தாம் அவை.
தனித்துவம் மிக்க இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் வளர்ச்சிக்கு, இலங்கைத்தமிழரின் யாழ்ப்பாணத் தமிழ்ச்சொற்கள் அடங்கிய இவர் பாடிய பொப் இசைப்பாடல்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. ‘ஊர் சுழலும் பொடியளெல்லாம்’, ‘ ஏனணை மாமி’, ‘இஞ்சினியர் என்று சொல்லி புளுகித்தள்ளினாராம்’ போன்ற சொற்பிரயோகங்கள் மேற்படிப்பாடல்களுக்குச் சுவை சேர்ப்பவை.
இலங்கைத்தமிழ்ப்பொப் இசைக்குப் பலர் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் முன்னணியில் நிற்பவர் நித்தி கனகரத்தினம் என்பேன். அதற்குக் காரணமாகப் பொப் இசைப்பாடல்களுக்கேற்ற அவரது குரல், துடிப்பான இசை, பாடல் வரிகளில் விரவிக்கிடக்கும் நகைச்சுவை ஆகியவற்றையே குறிப்பிடுவேன்.