தமிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது. அந்த வடிவம் இன்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. செய்யுள் இலக்கியம் படிப்பதற்குக் கடினமானது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுகதை இன்று தமிழ் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஊடகங்களும் பேருதவியாக உள்ளன. நாளேடுகள், பருவ இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்பன சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை மக்களுக்கு விரைவாக அறிமுகம் செய்தன. பல சிறுகதை ஆக்கங்கள் உருவாகின. அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் தொகையும் பல்கிப் பெருகியது.
நவீன தமிழ்ச் சிறுகதை என்ற முகவரியுடன் இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் வெளிவரு கின்றன. அவை தொகுப்பாக்கமும் செய்யப்பட்டுள்ளன. எனவே அச் சிறுகதைகளை ஓரிடத்திலே பார்ப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த வகையில் தமிழ்ச் சிறுகதைக்கு குரு அரவிந்தனின் பங்களிப்புப் பற்றிய கருத்துப் பகிர்வாக இக்கட்டுரை அமைகிறது. இன்றைய சிறுகதை எழுத்தாளர்கள் உலகெங்கும் பரவி நிற்கின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு அதற்கு ஒரு காரணமாக அமைந்ததெனலாம். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் இடங்களில் தமிழ் ஊடகங்களும் உருவாகின. அவ்வாறு உருவாகிய ஊடகங்கள் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் ஏற்றிருந்தன. இந்தச் சூழலில் குரு அரவிந்தன் என்ற சிறுகதை எழுத்தாளரையும் அடையாளம் காண முடிகிறது.