ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.
ஒருகாலத்தில், காலப் பயணம் பற்றிப் பேசுவதே விஞ்ஞான நிந்தனையாகக் கருதப்பட்டது. ஒரு பித்துக்குள்ளியாக முத்திரை குத்தப்படலாம் என்ற பயத்தில், நான் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினங்களில், நான் அப்படியொன்றும் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. உண்மையில், ஸடோன்ஹெஞ்ச் கட்டிய ஜனங்களைப் போன்றவனாய் நான் இருக்கிறேன். காலம் பற்றிய சிந்தனை என்னை ஆட்டிப்படைக்கிறது எனலாம். என்னிடம் ஒரு கால எந்திரம் இருந்தால், மர்லின் மன்றோவை அவளது உச்சநிலைக் காலத்தில் போய் சந்திப்பேன். அல்லது ஆகாயவெளியை நோக்கி தனது தொலைநோக்கியைக் கலிலியோ திருப்பிய சமயத்தில் அங்கே போய்ச் சேர்வேன். பிரபஞ்சத் தோற்றத்தின் கதை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைக் கண்டடைய நமது பிரபஞ்சத்தின் இறுதிக்குப் பயணம் போவதற்கும், ஒருவேளை நான் முனையலாம்.
இது எவ்விதத்தில் சாத்தியம் என்று பார்க்க, இயற்பியல்காரர்கள் காலத்தைக் கவனிப்பதுபோல், நாம் பார்ப்பது அவசியமாகிறது – நான்காவது பரிமாணத்தில். அது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லா தூலப் பொருள்களுக்கும் – எனது நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் எனக்கும்கூட – பரிமாணங்கள் இருக்கின்றன என்பது கவனமுள்ள எந்தவொரு பள்ளிப்பிள்ளைக்கும் தெரிந்ததே. எல்லாப்பொருள்களுக்கும் அகலம், உயரம், நீளம் உண்டு. ஆனால், இன்னொருவகை நீளம் இருக்கிறது – காலத்தின் நீளம். மனிதன் ஒருவன் 80 ஆண்டுகள் உயிர் பிழைத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஸ்டோன்கெஞ்சில் உள்ள கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் குழுமி நின்று கொண்டிருக்க முடியும். சூரிய மண்டலமோ கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். அனைத்தும், காலத்தின் நீளத்தையும் அதேபோல் வெளியின் நீளத்தையும் பெற்றிருக்கின்றன. காலத்தினுள் பயணித்தல் என்பதன் அர்த்தம், இந்த நான்காவது பரிமாணத்தினூடே பயணிப்பதுதான்.