மனிதப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும் இடம், காலம், சூழல் என்னும் பௌதிகத்திற்குள் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதில் பண்பாட்டினை அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவது காலமும் சூழலுமே ஆகும். அதே போன்று சங்ககால மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தற்காலச் சூழலில் இனங்காணுவதற்கு மூலப்பனுவல்கள் தேவையான ஒன்றாகிறது. இப்பனுவல்கள் எழுத்தாக்கம் பெறும்போது தொகுப்பாக்கம் பெறவில்லை. மாறாக வாய்மொழி மரபுத்தன்மையில் மக்களாலும், பாண்மரபுகளாலுமே அவை பாடப்பட்டு, பின்னர் அவை கவிதையாக்கம் பெற்றன. இந்நிலையிலிருந்து சங்கப் பனுவல்களைப் பார்க்கும்போது சூழல்த் தன்மையும் காலவரையறையும் வெளிப்பட்டு நிற்கிறது.
சங்க மரபுகள் அவை தோன்றிய காலகட்டத்தில் தளப்பார்வை (நிலம்) கொண்டு இயங்கின. ஆனால் இன்றைய நிலையில் வரலாற்றுச் சான்றுகளகாவும், தொல்லியல் ஆவணமாகவும் காலப்பார்வை சார்ந்து வெளிப்பட்டு நிற்கிறது. இத்தகையப் பொதுத்தன்மையில் இயங்கிவரும் சங்கப் பனுவல்களை நிலத்தோடு மக்கள் வாழ்வியலாகப் பண்பாடாக வெளிப்படுத்துவதற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் தேவையான ஒன்றாகிறது. இம்மூன்றையும் ஒருமித்த தன்மையில் வெளிக்காட்டுகிறது சங்கப்பாடல்கள். இருந்தபோதிலும் முப்பொருள் செயற்பாடு ஐந்து நிலமக்களின் வாழ்வியலில் ஒரே தன்மையில் வெளிப்படவில்லை. சுற்றுச்சூழல் மாற்றம், நிலஅமைப்பு, மக்கள்வாழ்வு என வெவவேறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிசெய்யப்பட்டத் திணைச்சமூக மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்குச் சுற்றுச்சூழல், சுற்றுச்சூழலை ஒட்டிய தனிமனிதசூழல், குடும்பச்சூழல், வாழிடச்சூழல், சமூகச்சூழல் ஆகிய அனைத்தும் இடத்திற்கேற்பத் தேவையாகிறது. அதனை உள்வாங்கி சங்கப் பாடல்கள் வாயிலாகச் சூழல் படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திணைக்குடி மக்களின் வாழ்விற்கு ‘இடம்’ தேவையான ஒன்றாக இருப்பின் அவை நிலத்தோடு, சமூகக் குழுக்களோடு, சுற்றுச்சூழலோடு என இணைந்து செயல்புரிய வேண்டியிருக்கிறது. நிலம் – மக்கள் இருகூறுகளும் தனித்தனியே இருப்பினும் அவை செயலாற்றுவதற்கு சூழல், பொழுது (காலம்) இரண்டும் தேவையாகின்றது. இவை சுற்றுச்சூழலோடு இணைந்து “உள்ளீட்டுத் தொடர்புகள், பண்பாட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்கள், வேலைப்பிரிவு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைகள் மற்றும் இயற்கை வளங்களை அடைய விரும்புவோரும் பயன்படுத்துவோரும் அவற்றைப் பங்கீட்டுக் கொள்ளுதல்”1 என அனைத்துச் செயல்பாடுகளிலும் சூழல் செயலாற்றுகிறது. ஒரு படைப்பாக்கப் பனுவலில் சூழல் தன்மையில்லை என்றால் அப்பனுவல் வெறும் படிமமாகவே பொருளற்றுக் கிடக்கும். அதற்கு உயிரோட்டம் கொடுத்து இயங்கச் செய்வது சூழலே ஆகும்.