எழுத்தாளர் தேவகாந்தன் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும், தமிழகத்தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களிலொருவர். இம்முறை ‘பதிவுகள்’ அவருடனான நேர்காணலைப்பிரசுரிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றது. முதலில் அவரைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் நேர்காணலை ஆரம்பிப்பதும் பொருத்தமானதே.
தேவகாந்தனும் அவரது படைப்புகளும்
புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுக்குச் சிறப்பானதோரிடமுண்டு. இவரது கனவுச்சிறை (திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய ஐந்து பாகங்களை உள்ளடக்கிய, 1247 பக்கங்களைக் கொண்ட, 1981 முதல் 2001 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய நாவல்.) புகலிடத்தமிழ் இலக்கியத்தில் மிகவும் முக்கியத்துவத்துக்குரிய நாவலாகும்.
முனைவர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலைப் பற்றி அதுபற்றிய அவரது விமர்சனக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: ‘திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் இவ்வாக்கம் 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. இந்த வரலாற்றுக் கட்டம் ஈழத்துக் தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்களையும் கேள்விக்குட்படுத்தி நின்ற கால கட்டம் ஆகும். பெளத்த சிங்கள பேரினவாதப் பாதிப்புக் குட்பட்ட நிலையில் ஈழத்துத் தழிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட உணர்வு தீவிரமடைந்த காலப்பகுதி இது. அதே வேளை மேற்படி பேரினவாதக் கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்தோடி அனைத்துலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலப்பகுதியாகவும் இவ்வரலாற்றுக் காலகட்டம் அமைகின்றது. இவ்வாறு போராட்டச் சூழல் சார் அநுபவங்களுமாக விரிந்து சென்ற வரலாற்றியக்கத்தை முழு நிலையில் தொகுத்து நோக்கி, அதன் மையச் சரடுகளாக அமைந்த உணர்வோட்டங்களை நுனித்துநோக்கி இலக்கியமாக்கும் ஆர்வத்தின் செயல்வடிவமாக இவ்வாக்கம் அமைந்துள்ளது. மேற்படி உணர்வோட்டங்களை விவாதங்களுக்கு உட்படுத்திக் கதையம்சங்களை வளர்த்துச் சென்ற முறைமையினால் ஒரு சமுதாய விமர்சன ஆக்கமாகவும் இந்நாவல் காட்சி தருகின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் இயக்கங்களின் உணர்வுநிலை மற்றும் செயன் முறை என்பவற்றுக்குப் பின்னால் உள்ள நியாயங்கள் மற்றும் புலம் பெயர்ந்துறைபவர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள் என்பவற்றின் பின்னால் உள்ள நியாயங்கள் என்பன இந்நாவலில் முக்கிய விவாதமையங்கள் ஆகின்றன. இவற்றோடு பேரினவாத உணர்வுத்தளமும் இந்நாவலில் விவாதப் பொருளாகின்றது. அதன் மத்தியில் நிலவும் மனிதநேய இதயங்களும் கதையோட்டத்திற் பங்கு பெறுவது நாவலுக்குத் தனிச் சிறப்புத் தரும் அம்சமாகும். போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இருப்பு சார்ந்த உணர்வோட்டங்கள் மற்றும் அவல அநுபவங்கள் ஆகியனவும் விவாதப் பொருள்களாகின்றன.’