தற்காலத்தில் சனநாயகத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறுதல் வேண்டி பிற கட்சிகளோடு கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன. மேலும், இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த போது தமக்கு அடிபணிய மறுத்த மன்னர்களை அடக்கி அடிபணிய வைப்பதற்கு தம் படையுடன் தனக்குக் கீழிருந்த பிற மன்னர்களின் படையையும் கூட்டுச்சேர்த்துக் கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்றனர். இது போன்ற கூட்டணி சங்ககாலச் சமூகத்திலும் நிலவியிருந்துள்ளமையையும் அக்கூட்டணியுள் சில முறிவு ஏற்பட்டுள்ளமையையும் வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.
சங்ககாலப் போரில் அரசர்களின் கூட்டணி
சங்ககால அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தினைப் பிறநாட்டின் மீது திணிக்கும் பொருட்டும் அவர்களின் மண்ணைக் கொள்ளுதல் பொருட்டும், வலிமைமிக்க அரசர்கள் இருவர் அல்லது பலர் கூட்டுச்சேர்ந்து பொதுவான பகைநாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டினைக் கைப்பற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இப்போர்க் கூட்டணியை சங்கப் பாடல்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் வருமாறு வகைப்படுத்தலாம்.
1. குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத் தாக்குதல்
2. வேந்தர் மற்றும் குறுநில மன்னர் கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத் தாக்குதல்
3. வேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்
4. வேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து குறுநில மன்னனைத் தாக்குதல்
5. இருவேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்
என்பவையாகும்.