வீரகேசரியால் எனக்குக்கிடைத்த நண்பர்கள் அதிகம். ஊடகத்துறையானது நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதித்துக்கொடுக்கும். ஆனால், பொருளாதார ரீதியில்தான் சம்பாத்தியம் குறைவானது. வீரகேசரிக்கு நூறு வயது விரைவில் நெருங்கவிருக்கிறது. மகாகவி பாரதியின் உற்ற நண்பர் வ.ராமசாமி (வ.ரா) அவர்களும் முன்னொரு காலத்தில் இதில் ஆசிரியராக பணியாற்றியவர்தான். புதுமைப்பித்தனுக்கும் பிறிதொரு காலத்தில் அச்சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் சினிமாவுக்கு வசனம் எழுதச் சென்னைக்குச் சென்றமையால், இலங்கைக்கு வரவில்லை. கே.பி. ஹரன், அன்டன் பாலசிங்கம், செ.கதிர்காமநாதன், கே.வி. எஸ்.வாஸ், காசிநாதன், கோபாலரத்தினம், க. சிவப்பிரகாசம், டேவிட் ராஜூ, பொன். ராஜகோபால், சிவநேசச்செல்வன், நடராஜா, கார்மேகம், டி.பி.எஸ். ஜெயராஜ், அஸ்வர், கனக. அரசரத்தினம், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பலர் பணியாற்றிய பத்திரிகை வீரகேசரி. வீரகேசரி குடும்பத்தில் இருந்த சிலரைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். மின்னஞ்சல் – இணையத்தள வசதிகள் இல்லாத அக்காலத்தில் அங்கு பணியாற்றியவர்களின் வாழ்க்கையை இன்று நினைத்துப் பார்க்கும்பொழுது சுவாரஸ்யங்களும் துயரங்களும் கெடுபிடிகளும் சவால்களும் நெருக்கடிகளும்தான் நினைவுகளில் வந்து அலைமோதுகின்றன. அத்தகைய ஒரு கால கட்டத்தில்தான் வரதராஜா வீரகேசரியில் இணைந்திருந்தார்.அவர் அங்கு அலுவலக நிருபராக பணியாற்றினார். எனக்கு வீரகேசரியுடனான தொடர்பு 1972 இலிருந்து தொடங்கியது. அப்பொழுது நீர்கொழும்பு பிரதேச நிருபராகவே அங்கு இணைந்தேன்.
அதன்பின்னர் 1977 இல் வீரகேசரியில் ஒப்புநோக்காளர் (Proof Reading) பிரிவில் ஏற்பட்ட வெற்றிடத்தையடுத்து அதற்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டேன். அவ்வேளையில் என்னுடன் தெரிவானவர்தான் தனபாலசிங்கம். இவர்தான் பின்னாளில் வீரகேசரி ஆசிரிய பீடத்திலும் அதற்குப்பின்னர், தினக்குரலிலும் இணைந்து, தினக்குரலின் பிரதம ஆசிரியரானவர். அதன் பிறகு வீரகேரியின் வெளியீடான சமகாலம் இதழில் ஆசிரியரானார். ஆனால், சமகாலம் தற்பொழுது வெளியாவதில்லை என்று அறியமுடிகிறது.
வரதராஜாவுடன் 1977 இன்பின்னர் நெருக்கமாகப்பழகும் கால கட்டம் தொடங்கியது. அவர் எழுதும் செய்திகளை , நீதிமன்றச் செய்திகளை ஒப்புநோக்கியிருக்கின்றேன். ஆசிரிய பீடத்தில் நான் இணைந்த பிற்பாடு அவர் தரும் செய்திகளை செம்மைப்படுத்தியுமிருக்கின்றேன். இந்த செம்மைப்படுத்தல் என்பது ஒருவகையில் Team Work தான். நிருபர் எழுதுவார். அதனை துணை ஆசிரியர் செம்மைப்படுத்தி (Editing) தலைப்புத்தருவார். அதன்பின்னர் செய்தி ஆசிரியர் மேற்பார்வை பார்த்து அவசியம் நேர்ந்தால், திருத்தங்கள் செய்வார். அதன்பின்னர் அச்சுக்குச்செல்லும். குறிப்பிட்ட செய்திகளை அச்சுக்கோர்த்தபின்னர் ஒப்புநோக்காளர்களிடம் சென்று முதல் Proof இரண்டாம் Proof பார்க்கப்படும். அதன்பின்னர் பக்க வடிவமைப்பாளர் செய்தி ஆசிரியரின் ஆலோசனைகளுக்கு அமைய பக்கங்களை தயாரிப்பார். முழுப்பக்கமும் தயாரானதும் முழுமையான Page Proof எடுக்கப்படும். அதனையும் ஒப்புநோக்காளர்கள் பார்த்து திருத்துவார்கள். அதன் பின்னர் செய்தி ஆசிரியரோ அல்லது ஆசிரியபீடத்தைச்சேர்ந்த ஒருவரோ மேலோட்டமான பார்வை பார்த்த பின்னர், மீண்டும் அச்சுக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்படும். அதிலிருக்கும் பிழைகளையும் அச்சுக்கோப்பாளர் அல்லது பக்க வடிவமைப்பாளர் திருத்தியபின்னர் மற்றும் ஒரு ஊழியர் மஞ்சள் நிறத்தில் அமைந்த ஒரு அட்டையில் அந்த முழுப்பக்கத்தையும் அழுத்தி ஒரு புதிய வடிவம் எடுத்துக்கொடுப்பார். அதன்பின்னர் அச்சுக்கூடத்தில் ஒரு இயந்திரத்துள் செலுத்தப்பட்டு அந்த அட்டையில் பழுக்கக்காய்ச்சிய ஈயம் படரவிடப்பட்டு வளைவான ஒரு ஈயப்பிளேட் தயாராகும். அனைத்துப் பக்கங்களும் இவ்வாறு தயாரானதும் முறைப்படி அவை பெரிய ரோட்டரி இயந்திரத்தில் பொறுத்தப்பட்டு பத்திரிகை அச்சாகும். விநியோகப்பிரிவு ஊழியர்கள் அதன்பின்னர் விநியோக வேலைகளை ஆரம்பிப்பார்கள்.
Continue Reading →