முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு
என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,
வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால் பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே (தொல்.பொருள்.547)
என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,
அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும் (பன்.பாட்.348)
என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.