இன்று காலை நண்பர் கனகவரதா (கட்டடக்கலைஞர்) அலைபேசியில் அழைத்திருந்தார். அதனை நான் தவற விட்டு விட்டேன். ஞாயிற்றுக்கிழலைக் காலைப்பொழுதில் யாருடைய அலைபேசி அழைப்பையும் எதிர்பார்த்திராததே அவ்வழைப்பினைத் தவற விட்டதற்குக் காரணம். ‘என்ன காரணமாகவிருக்கலாம்? என்றொரு சிந்தனையோட அவரை அலைபேசியில் அழைத்தேன்.
கன்கவரதா (மறுமுனையில்): “என்ன் விசயமென்றால்… உமக்கு எங்களோடை ‘ஹின்டு கொலிஜ்’ஜில் படித்த விக்கியை ஞாபகமிருக்குதா?”
நினைவுக்குருவி காலவெளியில் சிறகடித்துப் பின்னோக்கிச் சிற்கடித்துப் பறந்தது. மெல்ல மெல்ல ஞாபகத்தில் அந்தவுருவம் புலப்பட ஆரம்பித்தது. சராசரி உயரம். எப்பொழுதும் சிரிப்பு பூத்திருக்கும் முகம். நெற்றியில் புரளும் தலை முடி. விக்கினேஸ்வரனின் உருவம் ஞாபகத்தில் அன்றைய கோலத்தில் மலர்ந்து சிரித்தது.
நான் கேட்டேன்: “கனகவரதா, யார் அந்த இணுவில் விக்கியையாச் சொல்லுறீர்?”
கனகவரதா: “பார்த்தீரா நீர் சொன்ன உடனேயே பிடித்து விட்டீர்?”
எப்படி மறகக முடியும்? பாடசாலைக் காலத்து நண்பர்களைப் பல வகைகளில் பிரிக்கலாம். ஆனால் அப்பிரவுகளில் இரு பிரிவுகள் முக்கியமானவை. ஒரு பிரிவு ந்ண்பர்களின் சகவாசம் பாடசாலையுடன் நின்று விடும். பாடசாலையில் அவர்களுடனான நட்பு கொடிகட்டிப் பறக்கும். பெரும்பாலும் இவ்விதமான நண்பர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வருவதால், பாடசாலைக்கு வெளியில் அதிகம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருக்கும். மேலும் இவர்கள் படிப்பதில் அதிக ஆர்வமாகவிருப்பவர்கள். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்கள் போன்ற சமூகச்செயற்பாடுகளில் வீணாக நேரத்தைச் செலவிட விரும்பாதவர்கள். அடுத்த வகையினருடனான நண்பர்களுடனான நட்பு பாடசாலையிலும், வெளியிலும் தொடரும். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்களில் கும்மாளமடிப்பதில் வல்லவர்கள் இவ்விதமான நண்பர்கள். இவர்களில் இணுவில் விக்கினேஸ்வரன் முதற் பிரிவைச்சேர்ந்தவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அமைதியானவர். இவர் ஆத்திரமடைந்து நான் பார்த்ததில்லை.
Continue Reading →