ஐரோப்பியப்பயணத்தொடர் (1) : எல்லைகளை வெல்லவே…. — -மனமும் மனம் சார்ந்த அயல்திணையும்

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் முதலாவது அத்தியாயம் ‘எல்லைகளை வெல்லவே…. — -மனமும் மனம் சார்ந்த அயல்திணையும்’ என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


எனக்கு வேண்டும் வரங்களை   இசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திடநீ செயல்வேண்டும்
கணக்குஞ் செல்வம் நூறுவயது
இவையும் தரநீ கடவாயே- –  மஹா கவி பாரதியார்

ஒரு சிறு முன்குறிப்பு

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்பிள்ளைப்பிராயம் தொடங்கி இன்று வரை காலம் தோறும் இடை விடாமல் மனதில் தோன்றும் ஒரு வினா – யார் வகுத்தது இந்தப் பிரபஞ்ச எல்லைகளை? பள்ளிப்பருவத்தில் உலக வரைபடம் காணுகையில் மனம் மனத்திற்கே எழுப்பிய ஒரு சந்தேகம். கடல்களைப் பிரித்தது யார்? சமுத்திரம் எனவும் மகா சமுத்திரம் எனவும் அதற்கு சக்தி வழங்கியது யார்?  அட்லாஸ் உலக வரைபடம் தவிர்த்து மேலே வானவெளியில் பறக்கும்போது இது ஆசியா இது ஐரோப்பா என எழுதி அங்கே ஒட்டி இருக்குமா? என்ன? தெரியாதே அப்போது. வெளியில் கேட்டால் தப்பாக நினைப்பார்களோ என்ற பயம். இன்றும் அதே நிலைதான். ஆனால் மாற்றம் யாதெனில் இதுவரை நாம் படித்துப் பெற்ற பட்டங்கள் விடை அளிக்காவிடினும் அந்த விடயத்தை தத்துவரீதியாக, இலக்கிய ரீதியாக மற்றும் செயல் முறையாகவும் அணுக வழிவகுத்துள்ளது என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. அதன் ஒரு வெளிப்பாடே இந்த எழுத்துப்பகிர்வு.

பலமுறை இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிய பொழுதுதான் ஓர் உண்மை புலப்பட்டது. புவியியல் சம்பந்தமான அறிவு சிறிதும் மூளையில் எந்த மூலையிலும் தென்படவில்லை என்பது. பள்ளி தேர்வுகளில் சமுத்திர குப்தர் சாம்ராஜ்யமும், அக்பர் எல்லைக்கோடுகளும் மனப்பாடம் செய்து வரைந்து மார்க் வாங்கியாயிற்று. இது அட்லாண்டிக் பெருங்கடல் இது வட அமெரிக்கா என உலக வரைபடத்தில் கலர் அடித்தும் நிரூபித்தாயிற்று. சிறிய கலர் பென்சில்களை வைத்து இந்த வரைபடங்களில் வர்ணம் தீட்டும் போது மனம் தன்னை உலகப்புகழ் பெற்ற ஓவியராக கருதும் என்பது அனைவருக்கும் ஏற்பட்டு இருக்கும் ஒரு மிகச் சிறந்த அனுபவம். அதிலும் கடலுக்கு வர்ணம் அடிக்கும் போது, மனம் துள்ளி குதிக்கும். நீல வர்ணம், வரைபடத்தில் நீண்டு விரிந்து இருக்கும் கடற்பரப்பு, சர சர என ஒரு இலாவகத்துடன் தேய்க்கும்போது பரந்து விரிந்த சமுத்திரமே தன கைக்குள் அடங்கியதாய் ஒரு கற்பனை எழும். கலர் பென்சில்கள் அடங்கிய குப்பியில் நீல வர்ணப் பென்சில் மட்டும்  அடிக்கடி சிறியதாகி விடும் என்பது அனைவர் வாழ்விலும் நடந்திருக்கும் ஒரு நிகழ்வுதான்.    சிறிய வயதில் இதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கியபோது நம் சிந்தனைகளை வலுப்படுத்த நம் காலத்தில் கூகிள் அல்லது வேறு வலைத்தளங்களோ அதை செயலாகும் இணையத்தள வசதியோ கிடையாது. உலகத்தின் எல்லைகளை வகுத்தது யார் என வெளிப்படையாக அன்று கேட்டு இருந்தால் கிடைத்திருக்கும் ஒரே பதில் என்னவாக இருக்கும் என்றால் “எல்லாரையும் படைத்த கடவுள்தான் உலகையும் படைத்தார்” என்றுதான் இருந்திருக்கும். அந்த கடவுளையே காலண்டரில், சினிமாவில், வரைபடங்களில், கற்றூண்களில் படைப்பவர்கள் ஆயிற்றே நாம். நல்ல வேளை. என் மன ஐயப்பாட்டை நான் யாரிடமும் தெளிவு படுத்திக்கொள்ள முற்படவில்லை. அதற்குக் காரணம் இந்த மாதிரி கேள்வி கேட்கும் நபருக்குக் கொடுக்கப்படும் பட்டம் “அதிகப் பிரசங்கி/” மேலும், ‘இப்படி எல்லாம் தேவை இல்லாம பேசறதை விட்டுட்டு அந்த நேரத்தைப் படிப்பில் செலுத்தினால் நல்ல மார்க் வாங்கி ஸ்கூல்ல முதல் மாணவியாய் இருக்கலாமே’ என்ற இலவச அறிவுரை வேறு கிடைக்கும்.

Continue Reading →