கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்பாளுமை

விஞர் வெள்ளியங்காட்டான் - வீ.கே. கார்த்திகேயன் , முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),கோவை. -பழம்பெரும் தமிழறிஞர் வெள்ளியங்காட்டான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த படைப்பாளி. கவிஞர் வெள்ளியங்காட்டான், கவிதை பாடும் பொழுது மரபுக்கவிஞர்!  காவியம் படைக்கும் பொழுது புரட்சிப் பாவலர்!  கட்டுரைகள் எழுதும் பொழுது ஆய்வியல் அறிஞர்! கதைகள் கூறும் பொழுது பகுத்தறிவுச் சிந்தனையாளர்! புதினங்கள் படைப்பில் இணையில்லா நாவலாசிரியர்! கடிதங்கள் எழுதும் பொழுது அனுபவ ஊற்று! மொழிபெயர்ப்புகள் செய்யும் பொழுது மொழியியல் வல்லுநர்!  பொன்மொழிகள் சொல்லும் பொழுது தத்துவ ஞானி! மொத்தத்தில்  பன்முக எழுத்தாளர்!  இத்தகைய தமிழறிஞர் கவிஞர் வெள்ளியங்காட்டான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை.

1904 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 21 ஆம் நாள், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை பகுதியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் பிறந்தவர் தான்  என்.கே. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட  வெள்ளியங்காட்டான்.  அவரது தந்தையார் சொந்த நிலமற்ற ஏழை விவசாயி. தாயார் காவேரி அம்மாள்.  வெள்ளியங்காட்டானோடு உடன் பிறந்தவர்கள் பத்து பேர். 

தன் ஊர், கிராமம், தன்னைச் சுற்றியுள்ள நகரம் என்று வாழ்கின்றவர்களால் இனம் கண்டுகொள்ளப்படாத-பரம்பரையாக வறுமையில் வாடிய ஒரு குடும்பத்தில் முகிழ்த்தவர்தான் கவிஞர் வெள்ளியங்காட்டான்.  அவருக்கு மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்று போனது.

இளமையில், தந்தையாரோடு சேர்ந்து பாத்தியில் நீர் பாய்ச்சிக் களையெடுப்பதும் மாடு மேய்ப்பதும் எனத்தனது பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் உதவ வேண்டிய, வறுமைச் சூழல். அந்நிலையில்தான்  சுயமாகத் தமிழ்க் கற்கத் தொடங்கினார்.   தமிழ் மீது கொண்டிருந்த பற்றினால் தொடர்ந்து பல இலக்கண இலக்கியங்களைப் படித்தார்.  திருக்குறளையும் புறநானூற்றையும் நன்கு கற்றறிந்தார்.   தந்தையாருடன் வயலில் உதவி வந்த நேரம் போக மற்ற நேரங்களில் புத்தகமும் கையுமாகவே இருந்தார்.

Continue Reading →

சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்

சுப்ரபாரதிமணியன் -சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  ராசபாளையம் கிளை ராசபாளையத்தில்  7/5/17 அன்று நடத்தியது.  விசயராணி தலைமை வகித்தார்.

மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் –( சுடுமணல் நாவல் ) , மருத்துவர் சாந்திலால் செந்தழல் சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ( விமோசனம் தொகுப்பு ), சாயத்திரை நாவல் ( வே.பொன்னுசாமி ), அபூர்வன்ராஜா ( மற்றும் சிலர் நாவல் ) வீரபாலன் ( கோமணம் நாவல் ) திருமுத்துலிங்கம் ( சமையலறைக்கலயங்கள் நாவல் )  இராமையா ( ஓ ..செகந்திராபாத் ) நித்யா, விசயராணி (சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ( மந்திரச்சிமிழ்  ),  பற்றிப் பேசினர். சுப்ரபாரதிமணியனின்  கதைகளின் பொதுவான த்ன்மை பற்றி கண்மணி ராசாஅ உரையாற்றினார் . பெ.சரவணன் நன்றி கூறினார்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதும் எழுத்தாளர் என்பதை அவரின் 15 நாவல்கள் உட்பட 50 நூல்களின் மடைப்பு மையங்களே சொல்லும்.எதிர்கால சமூகம் பற்றிய நல்ல கனவுகளை நோக்கி இன்றைய யதார்த்த உலகை அவரின் படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன..மனசாட்சியின் குரலாய் ஒலிக்கும் அவரின் இலக்கியக் குரல் தனித்துவமானது. எழுத்துப்போராளியாகவும் அவர் விளங்கி வருவதை சுற்றுச்சூழல் சார்ந்த அவரின் நூல்கள் அடையாளம் காட்டும்  என்றார் முன்னேற்றப் பதிப்பகம் உரிமையாளர் வீரபாலன்.

நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.

Continue Reading →