தமிழ் – சிங்கள மொழிப்பரிவர்த்தனையில் அயராது உழைக்கும் மடுளுகிரியே விஜேரத்ன! சுவாமி விபுலானந்தரை சிங்கள மக்களிடம் அறிமுகப்படுத்தியவர்!

Letchumananm@gmail.comவவுனியாவின் எல்லையில்   மடுக்கந்தை என்ற  அந்த  அழகிய  கிராமத்தில்  வசித்த  மக்கள்  துயில்  எழுந்திருக்காத   புலராத பொழுதிலே,  அந்தச்சிறுவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து, கால்நடையாக  சுமார் 6 மைல் தூரம்   ஒற்றையடிப்பாதையிலும்  வயல் வரப்புகளிலும்  நடந்து  சமணங்குளம்  தமிழ்ப்பண்டிதரிடம்  வருவான்.  அவ்வேளையில் அவன் வவுனியா இரட்டைப்பெரிய குளத்தில்  தனது  ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்தான். தாய் மொழியும் வீட்டு மொழியும் சிங்களம். ஆங்கிலம் படிக்க சரியான வசதி  வாய்ப்புகள்  இல்லை.  அயல் கிராமங்களில் வாழ்ந்தவர்கள்  தமிழர்கள். அதனால், அவர்களுடன் பழகி உறவாடும் சந்தர்ப்பங்களும்  அச்சிறுவயதில்  அவனுக்கு  கிடைக்கிறது. தமிழைப்பேசவும்  புரிந்துகொள்ளவும் பழகிவிடுகின்றான். ஆங்கிலம் அந்நிய தேசத்திலிருந்து வந்த மொழி. அருகிலேயே தொன்மையான தமிழ் மொழி வாழ்கிறது. இதனைவிட்டு விட்டு எதற்காக அந்நியமொழிக்காக ஏங்கவேண்டும்  என்ற  சிந்தனை அந்த இளம் உள்ளத்தில்  பிறக்கிறது. அயலில் சமணங்குளத்தில் பண்டிதர் கந்தையா என்றொருவர் ஆசிரியராகவும்  அதேசமயத்தில்  விவசாயியாகவும்  வசிப்பதாக அறிந்துகொள்கின்றான். அவரைத்தேடி  நடந்த  சென்று, தனக்கு தமிழ் சொல்லித்தரும்படி கேட்கின்றான். அவர்  ஒரு  நிபந்தனை  வைக்கிறார். “என்னிடம் தமிழ் படிக்கவருவதாயிருந்தால்,  அதிகாலை 4 மணிக்கு முன்பே வந்துவிடவேண்டும்.  நான் காலை 6 மணிக்கெல்லாம் வயலுக்குப்போய்விடுவேன். அதன் பின்னர் பாடசாலைக்குச்செல்வேன். மாலையில்  வீடு திரும்பினாலும் உனக்கு தமிழ்ப்பாடம் சொல்லித்தருவதற்கு எனக்கு நேரம் இல்லை. மீண்டும் வயல், தோட்டம்  என்று  போய்விடுவேன். அதனால் உனக்கு தமிழ் சொல்லித்தருவதற்கு  அதிகாலை  வேளைதான்  உகந்தது. அதற்கு சம்மதமாயிருந்தால்  நாளை முதல் வந்துவிடு.”  அதிகாலைக்குளிரில்  வீட்டில்  போர்த்திப்படுத்திருக்கவேண்டிய அச்சிறுவன்  தமிழ் மீது  கொண்டிருந்த காதலினால், ” காலை எழுந்தவுடன்  படிப்பு”  என்று  பாடிக்கொண்டே  காடு, மேடு,  குளம், குட்டை  கடந்து  ஒற்றையடிப்பாதையால்  வந்து  பண்டிதர்  கந்தையா அவர்களிடம்  தமிழ்  எழுதவும்  பேசவும் கற்றுக்கொள்கின்றான்.

Continue Reading →