புது வருடப்பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பது அவருக்குப் பயமாயிருந்தது. இன்னும் மூன்று கிழமைகளே இருக்கும் நிலையில் நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகப் போகப் பயம் அதிகரித்துக்கொண்டிருந்தது. எப்படிச் சமாளிக்கப்போகிறேனோ என்ற முளுசாட்டம். பிள்ளைகளுக்கு புத்தாடை உடுதுணிகள் வாங்கவேண்டும். ஐந்து பேருக்கும் வாங்குவதானால் எவ்வளவு தேவைப்படும்? அதற்கு எங்கே போவது?
போன வருடத்தைப்போல இந்த வருடமும் கடத்திவிடமுடியாது போலிருந்தது. மூத்த மகன் பிரகாஸ் ஏற்கனவே அவருக்குச் சொல்லிவிட்டான்.
‘அப்பா…! எனக்கு இந்தமுறை வருடப்பிறப்புக்கு நீல சேர்ட் வாங்கித் தாங்கோ…! ஸ்கூலுக்கும் போடக்கூடியதாய் இருக்கும்!”
வருடப்பிறப்பு என்பது ஒரு சாட்டுத்தான். பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்குப் போடுவதற்கு உடை தேவைப்படுகிறது. மனைவி சரசுகூட அவருக்கு அவ்வப்போது சொல்லுவதுண்டு.
‘ஒரு ஆமான உடுப்பில்லாமல் அதுகள் எப்படி ஸ்கூலுக்குப் போறது?”
அவர் அப்போது மனைவியைச் சினந்து பேசுவார்.
‘என்ன சரசு?… நிலைமை தெரியாதமாதிரி கதைக்கிறீர்…என்னை என்ன செய்யச் சொல்லுறீர்?”
அவளுக்கு நிலைமை தெரியும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவளும்தான் என்ன செய்வாள்? வேறு யாருக்குப் போய் முறையிடுவாள்? எனினும் அப்படிச் சத்தம் போட்டால் அவள் திரும்பவும் அந்தக் கதையை எடுக்கமாட்டாள்.