பழம்பெரும் தமிழறிஞர் வெள்ளியங்காட்டான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த படைப்பாளி. கவிஞர் வெள்ளியங்காட்டான், கவிதை பாடும் பொழுது மரபுக்கவிஞர்! காவியம் படைக்கும் பொழுது புரட்சிப் பாவலர்! கட்டுரைகள் எழுதும் பொழுது ஆய்வியல் அறிஞர்! கதைகள் கூறும் பொழுது பகுத்தறிவுச் சிந்தனையாளர்! புதினங்கள் படைப்பில் இணையில்லா நாவலாசிரியர்! கடிதங்கள் எழுதும் பொழுது அனுபவ ஊற்று! மொழிபெயர்ப்புகள் செய்யும் பொழுது மொழியியல் வல்லுநர்! பொன்மொழிகள் சொல்லும் பொழுது தத்துவ ஞானி! மொத்தத்தில் பன்முக எழுத்தாளர்! இத்தகைய தமிழறிஞர் கவிஞர் வெள்ளியங்காட்டான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை.
1904 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 21 ஆம் நாள், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை பகுதியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் பிறந்தவர் தான் என்.கே. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட வெள்ளியங்காட்டான். அவரது தந்தையார் சொந்த நிலமற்ற ஏழை விவசாயி. தாயார் காவேரி அம்மாள். வெள்ளியங்காட்டானோடு உடன் பிறந்தவர்கள் பத்து பேர்.
தன் ஊர், கிராமம், தன்னைச் சுற்றியுள்ள நகரம் என்று வாழ்கின்றவர்களால் இனம் கண்டுகொள்ளப்படாத-பரம்பரையாக வறுமையில் வாடிய ஒரு குடும்பத்தில் முகிழ்த்தவர்தான் கவிஞர் வெள்ளியங்காட்டான். அவருக்கு மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்று போனது.
இளமையில், தந்தையாரோடு சேர்ந்து பாத்தியில் நீர் பாய்ச்சிக் களையெடுப்பதும் மாடு மேய்ப்பதும் எனத்தனது பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் உதவ வேண்டிய, வறுமைச் சூழல். அந்நிலையில்தான் சுயமாகத் தமிழ்க் கற்கத் தொடங்கினார். தமிழ் மீது கொண்டிருந்த பற்றினால் தொடர்ந்து பல இலக்கண இலக்கியங்களைப் படித்தார். திருக்குறளையும் புறநானூற்றையும் நன்கு கற்றறிந்தார். தந்தையாருடன் வயலில் உதவி வந்த நேரம் போக மற்ற நேரங்களில் புத்தகமும் கையுமாகவே இருந்தார்.