அம்மாவை (‘நவரத்தினம் டீச்சர்’) நினைத்ததும் நினைவுக்கு முதலில் வருவது குடும்பத்துக்கான அவரது அர்ப்பணிப்புத்தான். வவுனியாவில் அவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றிய சமயம் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்த அந்தக்காலம்தான் முதலில் நினைவுக்கு வரும். அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். சமையல் அனைத்தையும் (காலை, மதியம்) சலிக்காமல் செய்வார். எங்கள் எல்லாருக்கும் மதிய உணவை வாழை இலையில் வைத்துக்கட்டி எடுத்து வருவார். சில நாள்களில் வெள்ளிப்பாத்திரங்களாலான உணவுத்தூக்கியில் மதிய உணவை எடுத்து வருவார். மதிய உணவைப் பாடசாலையில் ஒன்றாக இருந்துதான் உண்போம். மறக்க முடியாத பசுமையான நினைவுகள் அவை.
ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல , ஆண்டுக்கணக்காய் , காலையில் உதிக்கும் சூரியனைப்போல் அலுக்காமல், சலிக்காமல் இவ்விதமே அதிகாலையில் எழுந்து , நீராடி, உணவு சமைத்து, எல்லாருக்கும் உணவை வாழையிலைப் பொதிகளாக அல்லது வெள்ளியாலான உணவுத்தூக்கியில் எடுத்து வருவதை எப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பும், அவரது அர்ப்பணிப்பு மிக்க அன்பினை எண்ணிப் பெருமிதமும் ஏற்படும்.
அதிகாலைகளில் அப்பொழுதெல்லாம் அவருடன் கூடத்தான் செல்வோம். வயல்களும், வனங்களும், குளங்களும் மலிந்த வவுனியாவின் தெருக்களினூடு அதிகாலைகளில் அவ்விதம் நடந்து செல்வதே நெஞ்சில் பசுமரத்தாணியாகப்பதிந்து விட்ட அனுபவம்.
அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாக எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி செல்வார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் ‘என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்’ என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் ‘இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்’ என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் ‘வாயெல்லாம் பல்’. 🙂 இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.