அண்மையில் தென்னிலங்கையில் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் நூற்றுக்கணக்கில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். மானுட அழிவுகள் பற்றி முகநூலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் பல இனரீதியில், இனவாதம் மிக்கவையாக இருப்பது மிகவும் துரதிருஷ்ட்டமானது. மானுட அழிவுகளை மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் அணுகும் பண்பினை நாம் இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லையென்பதையே இவ்வகையான கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன. மானுடர்கள் தமக்குள் நிலவும் பல்வேறு வகையான பிரிவினைகள் காரணமாக ஏற்படுத்தும் அழிவுகள் காரணமாக நாடோறும் பல்லாயிரக்கணக்கில் மானுடர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். அவற்றுக்கெதிராக, அனைத்து மானுடர்களின் உரிமைகளுக்காகவும் நீதி கேட்டுப் போராடும் நாம், இயற்கை அழிவுகளினால் பலியாகும் மானுடர்களின் அழிவுகளை இனியாவது மனிதாபிமானத்துடன் அணுகுவோம். மரண வீட்டில் ஏற்பட்ட இழப்புகளை, அவற்றால் துயருறும் உறவுகளை நினைவு கூர்வோம். இயலக்கூடிய உதவிகளைச் செய்வோம்.
இது போல் இன்னுமொரு நிகழ்வு பற்றியும் பலர் தெரிவித்திருந்த கருத்துகள் எவ்வளவுதூரம் நாம் இன்னும் மத, இன ரீதியாகப் பிளவு பட்டிருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டின. திருமலையில் தமிழ்ச்சிறுமிகள் பாலியல் வன்முறைக்குள்ளாகியுள்ளதாகவும், அதனைப்புரிந்தவர்கள் முஸ்லீம் இளைஞர்கள் இருவர் என்றும் வெளியான செய்திகளுக்குக் கருத்துகளைத்தெரிவித்திருந்த பலர் அனைத்து முஸ்லீம் இன மக்களையும், அவர்களது மதத்தினையம் புண்படுத்தும் வகையில் தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். இரு மனிதர்கள் புரிந்த சமூக விரோதச் செயலுக்கு எதிராகக் கருத்துக்கூறுவதற்குப் பதில் தமிழ், முஸ்லீம் மக்களை இன, மதரீதியாகப் பிளவுபடுத்தும் இவ்விதமான கருத்துகளை வெளியிடுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிகளுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும், அச்சிறுமிகள் மீது வன்முறையினைப்புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தபட்டுத் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும் . இதுவே அனைவரினதும் நோக்கமுமாகவும் இருக்க வேண்டும்.