– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் இரண்டாவது அத்தியாயம் ‘மனோவிருப்பத்தின் மூலாதாரம்’ என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –
I
“இலக்கியமும், பட்டாம்பூச்சிகளும் மனிதன் அறிந்த இரண்டு இனிமையான உவர்ச்சிகள்” – விளாடிமிர் நபோகோவ் { Literature and butterflies are the two sweetest passions known to man. – Vladimir Nabokov }
இலக்கியம் மட்டுமே மிகுந்த இணக்கத்துடன் வாழ்வின் துக்கங்களைப் புறந்தள்ள உதவுகிறது.. கனவுப்பிரதேசங்களில் சுதந்திரமாகச் சஞ்சாரம் செய்ய அனுமதிக்கிறது. தேச எல்லைகள் இலக்கியங்களில் கிடையாது. ஆங்கில கவிஞர்களோ, ரஷ்ய எழுத்தாளர்களோ, ஆப்பிரிக்க நூலாசிரியரோ அல்லது உலகின் எந்த பிரதேசத்தின் குடிமகன் ஆனாலும் இலக்கியம் நமக்கு அவர்களை பாஸ்போர்ட் விசா ஏதுமின்றி நமது கரங்களில் சேர்க்கிறது. அவர்களின் உணர்வுகள் நமக்கு புரிகிறது. ஒரு யூலிஸிஸ் – ஹோமரின் கதாநாயகன் ஆனாலும் சரி, உலகையே தன் வசப்படுத்திய ரோமானிய சீசர், ஆன்டனி போன்ற கதாநாயர்கள் ஆனாலும் சரி, உலகின் மிகச் சிறந்த அழகிகள் என வர்ணிக்கப்பட்ட கிளியோபாட்ரா, ஹெலன் போன்ற பெண்களையும் சரி இலக்கியம் அல்லவா நமக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதுவும் ஆங்கில இலக்கியப்படிப்பு உலக இலக்கியத்தை, இந்த அகிலத்தையே நம் நேத்ரங்கள் முன் பிரதிபலிக்க செய்யும் மாயக்கண்ணாடி என்பதை எந்த இடத்திலும் ஆணித்தரமாக அடித்துக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
. ஆங்கில இலக்கியம் விருப்பப்பாடம் படிக்க எடுத்ததே ஒரு எதிர்பாராத நிகழ்வு. நான் கல்லூரி படித்த காலங்களில் ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் பணக்காரக் குடும்பத்தை சார்ந்த பெண்களாக இருக்கும் அல்லது ஒரு பந்தாவுக்காக எடுத்து படிப்பதற்காக இருக்கும். அதுவும் நான் படித்த பெண்கள் கல்லூரி உயர் மட்ட குடும்பத்து பெண்கள் மட்டுமே அதிக அளவில் படிக்கும் இடம் ஆகும். ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருந்த நான், எந்த ஒரு இலக்கையும் தீர்மானிக்க முடியாத அந்த வயதில் வேதியியல் படிப்பு இளங்கலையில் படிக்க என் தகப்பனாரின் விருப்பம். இந்த படிப்புக்கு உடனே வேலை கிடைக்கும் என்பது அந்தக் கால ஐதீகம். இன்று உள்ளது போல் அன்று கணினி அறிவியல் மற்றும் ஐடி படிப்புகள் அப்போது கல்லூரிகளில் இல்லாததால் அறிவியல் பாடங்களுக்கு மிகவும் மதிப்பு அதிகம். ஆர்ட்ஸ் வகுப்புகளான ஆங்கில, தமிழ் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு போன்றவை வேலைவாய்ப்பு கொடுக்காத கல்விப்பிரிவுகள் என்பதும் அன்றைய காலகட்ட சூழ்நிலை. இன்று நிலைமை தலைகீழ்.
வேதியியலில் எவ்வித பிடிப்பும் இல்லாத நான் வேண்டா வெறுப்பாக அந்த வகுப்பில் அமர்ந்து மேற்கூரையையும்,, கூட அமர்ந்து இருக்கும் மாணவிகளையும் ‘கமெரா’க் கண்கள் சுழல்வது போல் சுற்றி முற்றி பார்த்துக் கொள்வது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செயல். மாணவிகளில் பலர் நல்ல ‘பவர்’ பொருந்திய கண் கண்ணாடிகளுடன் படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். இதில் ஈடுபாடு இருப்பதாக என்னால் நடிக்கக் கூட இயலவில்லை. அந்த ஒரு மாதக் காலப் படிப்பில், பகுதி இரண்டு பொது ஆங்கில வகுப்புக்கு ஆங்கில இலக்கிய மாணவிகள் எங்களுடன் சேர்ந்து படிக்க வருவார்கள். அதில் ஒருத்தி எனக்குப் பள்ளித்தோழி. அவள் அப்பா அவள் ஆங்கில இலக்கியம் படித்து ஒரு ‘டிகிரி’ வாங்கினால் போதும் என்ற நோக்கத்தில் அவளை அந்தப் பிரிவில் சேர்த்திருந்தார்.