வாசிப்பும், யோசிப்பும் 245: ‘நானே நானா? யாரோ தானா?’

வாசிப்பும், யோசிப்பும் 245: 'நானே நானா? யாரோ தானா?'சென்ற வெள்ளிக்கிழமை , 23.06.2017 , எனக்குச் சிறியதொரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே என் கண்களிரண்டும் அவ்வளவு ஆரோக்கியமான நிலையிலில்லை. இரு கண்களிலும் ‘கட்ராக்ட்’ அதாவது கண் புரை  என்னும் நிலை தோன்றியிருந்தது. அண்மைக்காலமாக இரவில் வாகனம் செலுத்தும்போது , எதிரில் பிரகாசமான வெளிச்சம் தென்படுகையில் , வாகனத்தைச்செலுத்துவது சிரமமாக இருப்பதை அறிந்தேன். எனவே முதலில் என் இடது கண்ணில் அதற்கான சத்திர சிகிச்சையினைச் செய்ய இசைந்தேன்.

சத்திரசிகிச்சைக்கு முதலிரு தினங்களும் கண் துளிகளிட்டேன். சத்திரசிகிச்சை நாளும் ,சத்திரசிகிச்சைக்கு முன் மேலும் சில துளிகள் இடப்பட்டன. Intravenous (IV) முறையில் இடது கை வழியாகத் திரவங்கள் செலுத்தப்பட்டன வலி தெரியாதிருப்பதற்காக. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். படுக்க வைத்தார்கள். கண்களை இன்னுமொரு திரவம் கொண்டு துடைத்தார்கள். சிறு துவாரம் மிக்க துணி கொண்டு இடது கண்ணை மூடினார்கள். என் முன்னே குனிந்திருந்த கண் வைத்தியரும், அவரது உதவியாளர்களும் தெரிந்தார்கள். ஏதோ செயற்படுகின்றார்கள் என்பதை மட்டும் அறிய முடிந்தது. பத்து அல்லது பதினைந்து நிமிடங்களிருக்கும். ‘எல்லாம் முடிந்தது’ என்றார்கள். கண் மேல் போர்த்தியிருந்த துணியை அகற்றினார்கள். உலகம் கண் முன்னே முன் எப்போதையும் விட அழகாக, பிரகாசமாக, வர்ணங்களுடன் விரிந்தது. மேலுமிரு மணி நேரம் தங்கியிருந்தேன். கண்ணைப் பரிசோதித்தார்கள். நன்றாக இருப்பதாகத் திருப்திப்பட்டார்கள். ஒருவாரம் கழித்து மீண்டும் கண் மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதிக்கும்படி கூறினார்கள். முதல் நாள் முழுவதும் கண்ணை மறைத்திருக்கும் வகையில் பிளாஸ்டிக் கண்ணாடியால் மூடி விட்டார்கள். ஒரு வாரம் வரையில் இரவில் படுக்கச்செல்லும்போது அவ்விதமே மூடிப்படுக்கும்படி கூறினார்கள். முதல் 24 மணி நேரம் கவனமாக இருக்கும்படி கூறினார்கள். தொடர்ந்து கண் துளிகளை ஒவ்வொரு நாளும் நான்கு தடவைகள் இட்டு வரும்படி கூறினார்கள். 26ந்திகதியிலிருந்து முகநூலில் பதிவுகள் இடத்தொடங்கினேன். அடுத்த நாளே கண்ணாடியில்லாமல் காரை ஓட்டிப் பார்த்தேன். வலது கண்ணுக்கும் கண்ணாடி தேவை என்பதால், புதுக்கண்கண்ணாடி எடுக்கும் வரையில் , கண்ணாடி அற்றே இன்று வரை வாகனம் ஓட்டுகின்றேன். இப்பொழுதுதான் தெரிகின்றது இது நாள் வரையில் நான் பல வர்ணங்களை இழந்த உலகையே பார்த்து வந்திருக்கின்றேன் என்று.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 244: வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பற்றிச் சில நினைவுகள்…..

பொ.ஐங்கரநேசன்

வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பற்றிச் சில நினைவுகள்…..


அண்மைக்காலமாக இலங்கையின் வட மாகாணசபையில் இடம் பெற்று வந்த கூட்டமைப்புக்கும், முதல்வருக்குமிடையிலான இழுபறியினைத்தொடர்ந்து, மாகாண சபை அமைச்சர்களிருவர் மீதான ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பரிந்துரையின்பேரில் அமைச்சர்களிலொருவரான இலங்கை, வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகியுள்ளார். இதுவரையில் இந்த இழுபறி பற்றித் தமிழ் ஊடகங்களில் ஆய்வாளர்கள் (?) ஆளுக்காள் தமது கருத்துகளைத்தெரிவித்துக்கொண்டிருந்த நிலையில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்கள், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அளித்த விளக்கங்களுக்கான காணொளிகளையும், வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற அவரது தன்னிலை விளக்கத்துக்கான காணொளியினையும் பார்த்தேன்: கேட்டேன்.


இவற்றிலிருந்து நான் புரிந்தவை எவையென்றால்… அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீருபிக்காத விசாரணக்குழு அவர் பதவி விலக வேண்டுமென்று முடிவு செய்திருக்கின்றது. இது அமைச்சரின் குற்றச்சாட்டு. அடுத்தது அவர் முதல்வர் விக்கினேஸ்வரன் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையையும் வைத்திருப்பதையும் அறிய முடிகின்றது. இலங்கை மத்திய அரசால் அதன் எண்ணங்களுக்கேற்ப ஆடுவாரென்று ஆரம்பத்தில் கருதப்பட்ட முதல்வர் பின்னர் மக்களின் துயரங்களை நேரில் கேட்டுப்பின்னர் சுதந்திரமாகத் தமிழ் மக்களுக்காகச் செயற்படத்தொடங்கிவிட்டாரென்றும், அதனால் அதிருப்தியுற்ற இலங்கை மத்திய அரசின் சதியே கூட்டமைப்புக்கும், முதல்வருக்குமிடையிலான பிளவுகளுக்குக் காரணமென்றும், முதல்வரை நீக்குவதே இலங்கை மத்திய அரசின் நோக்கமென்றும் அமைச்சர் ஐங்கரநேசனின் உரையிலிருந்து ஊகிக்க முடிகின்றது. ஏற்கனவே இவ்வகையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் சிலரைக்கொண்டுள்ள விசாரணக்குழுவின் மீது அமைச்சர் சந்தேகம் மிக்கவராக இருப்பதையும் ஊகிக்க முடிகின்றது. மேலும் தன்னைச்சந்தித்த முதல்வர் வடக்கு மாகாண சபையினைக்காப்பதற்குப் பதவி விலகித்தியாகம் செய்யுமாறு கேட்டதன அடிப்படையிலேயே தான் பதவி விலக முன்வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

Continue Reading →