வாசிப்பும், யோசிப்பும் 251: முகநூற் பதிவுகள் சில…

வ.ந.கிரிதரன் பக்கம்: வாசிப்பும், யோசிப்பும்.எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா

தமிழ்க்கவி அம்மாஎழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா அவர்களுக்கு இன்று, ஜூலை 19, 2019,  வயது 70. இந்த வயதிலும் அவர் இவ்வளவு துடிப்புடன் செயற்படுவது, தன் கருத்துகளை ஆணித்தரமாக வெளியிடுவது இவையெல்லாம் என்னை மிகவும் பிரமிக்க வைப்பவை. ‘ஊழிக்காலம்’ தமிழ்க்கவியை வரலாற்றில், தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலை நிறுத்தி வைக்கும். அதுவோர் இலக்கியப்படைப்பு மட்டுமல்ல , வரலாற்று ஆவணமும் கூட. இந்த வயதிலும் இவ்வளவு இளமைத்துடிப்புடன் இயங்கும் தமிழக்கவியம்மா மேலும் பல்லாண்டுகள் இதே துடிப்புடன் வாழ்ந்து, இலக்கியப்பங்காற்றிட வாழ்த்துகள்.

தமிழ்க்கவி அவர்களின் ‘ஊழிக்காலம்’ நூல் பற்றி முன்னர் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை இத்தருணத்திலிங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

..இந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற ‘தினக்குறிப்புகள்’ எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) அதுபோல்தான் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.

இந்த நாவலில் யுத்தக்காலகட்டத்தில் மக்களின் இடம்பெயர்வுகளை, கூவிவரும் எறிகணைகளிலிருந்து தப்புவதற்காக அவர்கள் படும் சிரமங்களை, அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளை, இயக்கத்தவரின் செயற்பாடுகளை, இயக்கத்தைக் காரணமாக வைத்துச் சிலர் அடையும் ஆதாயங்களை .. இவற்றையெல்லாம் தமிழ்க்கவி இயலுமானவரையில் பதிவு செய்திருக்கின்றார். இயக்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டியும், கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்துமுள்ளார். …

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 250 : எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 250 : எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் பற்றி....எழுத்தாளர் R.P.ராஜநாயஹத்தின் எழுத்தை ஒருமுறை வாசித்தாலும் , வாசித்தவர் அதற்கு அடிமையாகிவிடுவார். இவர் புகழ் பெற்ற தமிழ் வலைப்பதிவர்களில் முக்கியமானவர்களிலொருவர். சிற்றிதழ், என்று தொடங்கி தமிழ் / உலகக் கலை, இலக்கிய உலகு பற்றி, இலக்கிய ஆளுமைகள் பற்றி, அவர்கள்தம் வாழ்வில் நடைபெற்ற பலருக்குத் தெரியாத சம்பவங்கள் பற்றியெல்லாம் , சுவையாக, நெஞ்சைக்கவரும் வகையில் கூறுவதில் வல்லவர் R.P.ராஜநாயஹம். தன் பெயரை R.P.ராஜநாயஹம் என்றுதான் எழுதுவார். ராஜநாயகம் என்று எழுதுவதில்லை. ஒருமுறை இவரது கட்டுரையைப் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியிட்டபோது ராஜநாயகம் என்று எழுதியபோது அதனைத்திருத்தி ராஜநாயஹம் என்று போடுமாறு எழுதி என் தவறினைத்திருத்தினார்.

சினிமாவில் உதவி இயக்குநராக, நிதி நிறுவனம் நடத்தியவராக, நடிகராக.. என இவர் செய்த பல்வேறு வேலைகள் காரணமாக இவரது தமிழகக் கலை, இலக்கிய அனுபவ அறிவு பரந்தபட்டது. ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த புலமை மிக்கவர். இவரது வலைப்பதிவில் வெளியான தமிழ்ச்சினிமா பற்றிய தகவல்களைக் ‘குமுதம்’ சஞ்சிகை திருடிப்பாவித்திருப்பதை இவரது பதிவுகள் மூலம அறிய முடிகின்றது.

இவரது மாமனார் எம்ஜிஆர் காலத்தில் முக்கிய பிரமுகர்களிலொருவராக விளங்கியவர். அதனால் தமிழக அரசியல் பற்றிய பலருக்குத் தெரியாத தகவல்களெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கின்றது.

எழுத்தாளர் அமரர் அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்.

‘பதிவுகள்’ இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் இவரது கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இவரது எழுத்துகள் இலக்கியச் சிறப்பு மிக்கவை அவை எழுதப்படும் எழுத்து நடையால், வெளிப்படுத்தும் இலக்கிய அறிவினால். இவரது கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய அனுபவப்பதிவுகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்கும் அதே சமயம், கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்கு, கலை, இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக விளங்கும் ஆவணப்பதிவுகளும் கூட.

Continue Reading →

சிறுகதை: அப்பாவின் நண்பர்கள்

சிறுகதை வாசிப்புஎல்லாருக்குமே நேரான படிப்பு அமைவதில்லை. உயர்வகுப்பு வெறும் அனுபவங்களைக் காவியதோடு முடிந்து விட, கொக்குவில் தொழினுட்பக்கல்லூரியில் புதிதாக படம்பயில்வரைஞர் வகுப்பில் படிக்க குலேந்திரன் தெரிவாகி இருந்தான். முதல் நாள் பஸ்ஸில் வந்திருக்கலாம். ஓட்டைச் சைக்கிளில் உழக்கி வேர்க்க விறுவிறுக்க வந்திருந்தான். உடம்பு சூடாக இருந்ததது. ஓபிசில் இருக்கிற கிளார்க், “வகுப்பு   மாடியில் இருக்கிறது” என சொல்ல மேலேற காற்றும் வீச இதமாக இருக்கிறது. உடம்பில் ஓடி மறையிற குளிரை அனுபவித்தான். “முருகா, இந்த வகுப்பாவது ஒரு வேலைக்குரிய தகமையை பெற வைப்பாயா?” என வேண்டிக் கொண்டு கலகலவென இருக்கிற வகுப்பினுள் நுழைந்தான்.  

அவனைக் கண்டு விட்ட சந்திரன் “ஹாய்! குலேந்திரன்” என்று அவனிடம் வந்தான். இவனுக்கும் ஆச்சரியத்தால் கண்கள் விரிகின்றன. சந்திரனை சிறு வயதிலிருந்தே தெரியும். அப்ப, இவனும், அவனும் குட்டியர்கள். அவ்வளவாக பழகியதில்லை, ஆனால் தெரியும் ஆச்சி வீட்டிற்கு அயலிலே இருந்தவர்கள். அவனுக்கு 2 அண்ணரும், ஒரு தங்கச்சியும். சின்னண்ணன் இவனுடைய அண்ணருடன் ஒரே வகுப்பில் படிக்கிறவன். பெரியவர், இவனின் மாமாவின் (அம்மாட கடைசித் தம்பி) நண்பர். அவர்களுடைய அப்பர் கொழும்பிலே பிரபல கம்பெனி ஒன்றிலே நல்ல பதவியிலே இருந்தார்.. இப்ப அவரும் காலமாகி விட்டார் என்பது தெரியும்.

ஆச்சி வீட்டிலே, காலம் சென்ற சுந்தரி சின்னம்மாவின்  பிள்ளைகளும் இருந்தார்கள், இவனை விட மூத்தவர்களும்; அக்கா, அண்ணாவின் வயசு மட்டத்தவர்கள், அவர்கள் தான் இவர்களை மேய்க்கிறவர்கள்.  அக்காவும், அண்ணாவும் அங்கே இருந்தே இந்து, மகளிர் கல்லுரிகளில் படித்துக் கொண்டிருந்தார்கள்.  சனி, ஞாயிறுகளில் சிலசமயம் தான் கிராமத்து வீட்டுக்கு வருவார்கள்.  அம்மாவோடு இவனோ, தங்கச்சிகளில் ஒருவரோ அடிக்கடி ஆச்சி வீட்ட விசிட் பண்ணுவார்கள் . வருடாந்த‌ பள்ளி விடுமுறையில்  ஓரேயடியாய் சென்று ஒன்று, இரண்டு கிழமை என்று ஆச்சி வீட்டிலே வந்து தங்கி விடுவார்கள். அப்பா, அவ்வளவாய் அங்கே வருவதில்லை.

Continue Reading →

‘திரைப்படத்தின் புதிய நவீன தொழில் நுட்பங்கள் விசாலப்படுத்தியுள்ள திரைப்படங்கள்’ லண்டனில் பேராசிரியர் உரை!

பேராசிரியர் சொர்ணவேல்இன்றைய டிஜிற்றல் தொழில்நுட்பம் சார்ந்த உலகில், சினிமாவின் ஆத்மாவில் கண்ட யதார்த்த சாத்தியங்களிலிருந்து விலகி நாம் வெகு தொலைவில் வந்து நிற்கின்றோம். C.G .I ( Computer Generated Images) கணணியிலிருந்து  உருவாகும் விம்பங்கள் தன் கண்முன்னே யதார்த்தமாக உள்ளவற்றைப் பதிவாக்கிய கமராவிலிருந்து வெகுவாக விலகி வந்துவிட்டது. உள்ளதையும் இல்லாததையும் கற்பனையில் கண்டதையும் இணைத்துக் கட்டமைக்கும் திறனை இந்த நவீன தொழில் நுட்பம் கொண்டிருக்கிறது. ஒரு மந்திரவாதியின் மாயக்கண் போன்று டிஜிற்றல் தொழில் நுட்பத்தில் மாயச்சித்திரங்களை நாம் வடிவமைக்க முடிகிறது. இன்று வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பம் சினிமாவில் எல்லையற்ற சாத்தியங்களை ஒரு கலைஞனின் கற்பனை வீச்சுக்கு எல்லையற்ற வெளிகளை திறந்துவிட்டிருக்கிறது’ என்று லண்டனில் ஹரோ சந்தி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ‘சமகாலத் திரை உலகம்’ பற்றிய கருத்தமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமெரிக்காவின் மிச்சிக்கன் பல்கலைக்கழக திரைப்படத்துறை கலாநிதி சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் உரையாற்றும்போது தெரிவித்தார்.

ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கில் பேராசிரியர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, ‘ஈழத்தின் யுத்த அனர்த்தங்களையும், அகதிகளாக உலகெங்கும் பரந்து வாழும் நிலைமையும் வரலாற்றில் பதிவாகவேண்டிய அழுத்தமான சுவடுகளை நிறையவே கொண்டிருக்கிறது. ஏதிலிகள்,மௌன விழித்துளிகள் போன்ற படங்கள் புனைவாக இருந்தாலும் ஈழத்தின் துயர் நிறைந்த காலகட்டத்தின் ஒரு பதிவாக விளங்குகின்றன. புனைவுகளோ, அ புனைவுகளோ அவை காலத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்பது மிக முக்கியமான அம்சமாகும். ஈழத்தின் வாழ் நிலைமையைக் களமாகக் கொண்டு எழுந்த குறும்படங்களில் மக்கள் வாழ்வில் படும் துயரின் சில கணங்கள் எப்படியோ இந்தத் திரைப்பட ஆக்கங்களில் பதிவு செய்யவே முனைகின்றன.

Continue Reading →

கவிதை: முத்தமிழ் வித்தகர் !

 கவிதை: முத்தமிழ் வித்தகர் !

மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !

Continue Reading →

கவிதை: போட்டி

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

போட்டியில்   பங்கெடுக்க   மனபலம்   தேவை
ஈட்டியெனும்   தோல்வி  மனதில் ஆழ்ந்து
தாட்டிகமாய்க்  காயம்  தருவது   உண்மை.
கேட்டினையும்  சிலருக்கு. பலவிதமாய்  விளைவிக்கும்
ஆட்டம்   விறுவிறுப்பாவதும்    மிக  உண்மை.

போட்டி,   பந்தயம்  என்றும்  அழைப்போம்
கூட்டிடும்   சுயவளர்ச்சியை  என்பதும்   திண்ணம்.
தேட்டம்  கூட்டிடும்   தன்  செயற்பாட்டிற்கும்.
நீட்டிடும்   வெற்றி    தோல்விக்குப்  பயிற்சியும்.
காட்டிடுமொரு  பாதையை  நல்ல  வளர்ச்சிக்கும்.

Continue Reading →