இலக்கியம்: தீவகம் தந்த தேன்தமிழ்க் கவிஞர்

- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -- முனைவர் பால. சிவகடாட்சம், மேனாள் சிரேட்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் -மரபுக்கவிதை எழுதுவது இலகுவான விடயம் அல்ல என்பது கவிதை எழுத முயன்றவர்கள் கண்டறிந்த அனுபவ உண்மை. யாப்பு எதுகை, மோனை, முரண், இயைபு எல்லாம் கவிதை இலக்க ணத்துக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இலக்கணம் மீறாத கவிதையாக இருந்தாலும் அந்தக்கவிதை எத னைச் சொல்ல வருகின்றது என்பதும் முக்கியம். எதுகைக்கும் மோனைக்கும் ஏற்றவாறு சொற்களைத் தேடி எடுத்துக் கவிதை யாக்கும்போது சொல்லவந்த விடயத்தைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லையோ என்ற ஏக்கம் வேறு தோன்றுவது உண்டு.  சொல்ல வந்ததைச் சுவைபடச் சொல்லிவிட்டாலே போதுமே. இதற்கு இலக்கணம் எதற்கு? எதுகையும் மோனையும் எதற்கு? என்ற உணர்வுடன் தம் எண்ணப்படி எழுதிவிட்டு இதுவும் கவிதைதான் என்று சொல்லும் கவிஞர்களும் உள்ளனர். இவர்களின் படைப்புக்களையும் இன்று இரசிப்பவர்கள் ஏராளம். இத்தகைய ஒரு காலகட்டத்தில் மரபுக்கவிதை எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் தேவைப்படுகின்றது.

தனது  முதற்பாடலின் முதற்சொல்லிலேயே ‘திகழ்தசக்கர’த் தைத் ‘திகடசக்கரம்’ என்று புணர்த்திப் பாடிவிட்டுத் திண்டாடிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கதை பலரும் அறிந்ததே. எனினும் அந்த இலக்கணத்தை விளக்கும் வீரசோழியம் என்னும் நூல்பற்றி கச்சியப்பரே அறிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். தமது பாட்டிலே எதுகை மோனை சரிவரவேண்டும் என்பதற்காக ‘ நாராயணன்’ என்னும் சொல்லில் ஒரு சீர் குறைத்து ‘நராயணன்’ என்று பாடிவிட்டாராம் கம்பர். அவர் மகாகவி என்பதற்காக அவரை மன்னித்து விடுவீர்களா? அப்படியானால் நான் இனிமேல் ‘ நார்’ என்ப தை ‘நர்’ என்றும் ‘வாள்’ என்பதை ‘வள்’ என்று ‘நான்’ என்பதை ‘நன்’ என்றும் பாடப்போகிறேன் என்று பயமுறுத்துகின்றார்

நாராயணனை நராயணன் என்றே கம்பன்
ஓராமல் சொன்ன உறுதியால்-நேராக
வார்என்றால் வர்என்பேன் வாள்என்றால் வள்என்பேன்
நார்என்றால் நர்என்பேன் நன்

மரபுக்கவிதை பாடுவதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது தொடர்ந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வெண்பா விருத்தம் அகவற்பா வஞ்சிப்பா என்றும் பாடிக்கொண்டிருக்கும் தீவகம் தந்த தேன்தமிழ்க்கவிஞர் இராஜலிங்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

Continue Reading →

ஆய்வு: சங்க காலப் பெண்களின் நிலை வியப்பிற்குரியதா? வேதனைக்குரியதா?

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -தாய்மைப் பண்போடு உயிர்கள் தோற்றுவாய்க்குரிய முதன்மை காரணியாய் உடையோர் பெண்களே ஆவர்.  அத்தகு பெண்கள் பல்வேறு வியப்பிற்குரிய செயல்களை இன்று வரையும் செய்து கொண்டே வருவது நாமறிந்ததே.  எனில் அவ்வியப்பான அவர்களின் வாழ்வு மிகுந்த வேதனைக்குரியதாகவும் இருந்ததை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.  சங்க கால சமூகம் வீரயுக சமூகம். சங்க காலப் பெண்கள் மறக்குடி மகளிராகவும் தன்மானம், ஒழுக்க நிலையோடு வாழ்ந்ததையும் மறுக்கவியலாது.  எனில் அன்றைய சமூகத்தில் பெண்கள் பல்வேறு வகை சமூகச் சிக்கலுக்குள்ளும் ஆளாகியதையும் மறுக்க முடியாது.

வியப்பு நிலை
சங்க காலத்தில் பெண்கள் வாழ்வில் காதல் செய்து கணவனைத் தேர்ந்தெடுக்கும் நிலையும், உரிமையும் இருந்தது.  சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இலக்கிய பாடலைப் பாடும் அளவிற்கு பெண்கள் வாழ்வு இருந்துள்ளது.  ஒளவை போன்ற பெண்பாற் புலவர் அதியமானின் அவைக்கள புலவராகவும், முதன்மை அமைச்சராகவும், அறிவுரை சொல்வோராகவும், ‘தூது’ செல்லுதற்குரிய உரிமை பெற்றவராகவும் வாழ்ந்துள்ளதை வழி அறியலாம். ‘கற்பு ஒழுக்கம்’   என்று விதிக்கப்பட்ட வரையறைக்குள் ஓர் ஆடவனையே எண்ணி ஒழுக்கமாகவும், குடும்பத்தை பேணி பாதுகாத்தும் இல்லறத்தை நடத்திய பெண்ணின் எண்ணமும், சிந்தனையும் மிகுந்த சிறப்பிற்குரியதாக இருந்துள்ளது.

பெண்களின் வீரம்
சங்க காலத்து மறக்குடிப் பெண்கள் நிலை மிகவும் வியப்பிற்குரியதாக இருந்ததற்கு சான்றுகள் சில காணப்படுகின்றன.  புறநானூற்று பாடலொன்றில், “தன்னுடைய மகனை போருக்கு அனுப்புகிறாள் தாய்.  போர்க்களத்தில் தன் மகன் இறந்து விடுகிறான்.  அப்போது அவ்வூரில் உள்ள சிலர், உனது மகன் புறப்புண்பட்டு இறந்து போனான் என்று கூறுகின்றனர்.  அப்போது கோபம் கொண்ட தாய், ‘என் மகன் புறப்புண்பட்டு இறந்து கிடந்தாள் அவனுக்கு பால் தந்த என் மார்பை அறுத்துக் கொள்கிறேன்’ என கையில் வாளினை எடுத்துக் கொண்டு, போர்க்களம் நோக்கிச் செல்கிறாள்.  போர்க்களத்தில் பல உடல்கள் வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கிறது.  அங்கே தன் மகனின் உடலும் வெட்டப்பட்டு சிதறுண்டு கிடக்கிறது.  அவன் உடலை ஒன்று சேர்த்து பார்க்கிறாள்.  அவள் மகனோ மார்பில் புண்பட்டு இறந்தான் என்பதை அறிந்து மகிழ்கின்றாள். இக்காட்சியை, சங்கப் புலவர் சிறப்புற விவரிக்கின்றார்.  அத்தகு சிறப்பு மிகுந்த வீரம் கொண்ட பெண்கள் பண்டைய காலத்தில் இருந்தனர்.

Continue Reading →

ஆய்வு: சிறுபஞ்சமூலம் காட்டும் அறநெறிகள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்களாகும். இப் பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். அதே போல சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய 1. திருக்குறள், 2. நாலடியார், 3. நான்மணிக்கடிகை, 4. இன்னா நாற்பது, 5. இனியவை நாற்பது, 6. திரிகடுகம், 7. ஆசாரக் கோவை, 8. பழமொழி நானூறு, 9. சிறுபஞ்சமூலம், 10. ஏலாதி, 11. முதுமொழிக் காஞ்சி, 12. ஐந்திணை ஐம்பது, 13. திணைமொழி ஐம்பது, 14. ஐந்திணை எழுபது, 15. திணைமாலை நூற்றைம்பது, 16.கைந்நிலை, 17.கார் நாற்பது, 18. களவழி நாற்பது ஆகிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். இப் பதினெட்டு நூல்களையும் ஒரு நான்கடி வெண்பாவில் அமைத்திருக்கும் சிறப்பினையும் காண்போம்.

‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.’

மேலும், இப் பதினெட்டு நூல்களையும் முப்பகுதிகளான 1. நீதி சார்ந்த 11 நூல்கள், 2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள், 3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் என்று வகுத்துக் கூறுவர்.

1. நீதி சார்ந்த 11 நூல்கள் – திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி.

2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள் – ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது.

3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் – களவழி நாற்பது.

இனி, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானதும், நீதி சார்ந்த பதினொரு (11) நூல்களில் ஒன்றானதுமான சிறுபஞ்சமூலம் என்ற நூலில் எவ்வாறான அறம் சார்ந்த விடயங்கள் பேசப்படுகின்றன என்பதையும் காண்பதே இக் கட்டுரையின் நோக்காகும்.

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் 247: ‘The Exception and the Rule’ மற்றும் ‘யுகதர்மம்’ பற்றிச் சில வார்த்தைகள்…

நூல்: யுகதர்மம்அண்மையில் நடைபெற்ற ‘யுகதர்மம்’ நிகழ்வின் போது பேர்டோல்ட் பிறெக்ட் எழுதிய  ‘The Exception and the Rule’  நாடகத்தின் பெயரை மொழிபெயர்த்தவர்கள் எதற்காக ‘யுகதர்மம்’ என்று மொழிபெயர்த்தார்கள் என்றொரு கேள்வி பலருக்கு எழுந்திருக்கக்கூடும். பெயரை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் இவ்விதம் மொழிபெயர்த்திருக்கலாமா என்றொரு கேள்வி சிலருக்கு எழுந்திருக்கும். ஏற்கனவே திறனாய்வாளர்கள் சிலருக்கு இக்கேள்வி எழுந்ததை முதலில் ‘யுகதர்மம்’ மேடையேற்றியபோது வெளிவந்த நாடகம் பற்றிய விமர்சனங்களில்  அவதானிக்க முடிகின்றது.

அது பற்றி கருத்தைக் கூறுவதற்கு முன்னர் ‘யுகதர்மம்’ நாடகத்தை மொழிபெயர்த்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு முதலில் வருவோம். நாடகம் வெளிவந்த காலகட்டத்தில் நாடகத்தை மொழிபெயர்த்தவராக நிர்மலா நித்தியானந்தனையும், பாடல்களை மொழிபெயர்த்தவராக அமரர் ச.வாசுதேவனையுமே குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் நாடக மொழியாக்கத்தைச் செய்தவர் ச.வாசுதேவன் என்பதை அண்மையில் நாடகத்தின் இயக்குநர் பாலேந்திராவுடன் கதைத்துக்கொண்டிருந்தபோது அறிய முடிந்தது. ‘யுகதர்மம்’ நூலின் தொகுப்புரையிலும் பாலேந்திரா அவர்கள் “வாசுதேவனே முதலில் முழு நாடகத்தையும் மொழிபெயர்த்துத்தந்தார். அப்போது நாங்கள் இருவரும் கொழும்பில் வசித்து வந்தோம். ‘யுகதர்மம்’ என்ற தலைப்பும் அவராலேயே இடப்பட்டது.” என்று குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் “நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிர்மலா நித்தியானந்தன் பிரதியைச் செம்மைப்படுத்தினார்” என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் “முதல் நாடக மேடையேற்றத்தின்போது  தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும் பாடல்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்தமையை மு.நித்தியானந்தன் எமது சுவிஸ் நாடக விழா – 1994- மலரில் பதிவு செய்துள்ளார்.” என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். இவற்றின் அடிப்படையில் வாசுதேவனே முதலில் நாடகத்தை முழுமையாக மொழிபெயர்த்தவர் என்ற முடிவுக்கு வருவதில் எந்தவித ஆட்சேபணையுமில்லை நிர்மலா நித்தியானந்தன் எந்தவித எதிர்க்குரலும் எழுப்பாதவிடத்து. இதுவரையில் அவர் அவ்விதம் எதிர்க்குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.

மேற்படி ‘யுகதர்மம்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்பில் வல்லுநரான எழுத்தாளர் என்.கே.மகாலிங்கமும், நாடகவியலாளர் பி. விக்கினேஸ்வரனும் நாடகத்தின் பெயரை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் ‘யுகதர்மம்’ என்று மொழிபெயர்த்ததைச் சிலாகித்துப் பேசினர். பி.விக்கினேஸ்வரன் நாடகம் கூறும் கதை தற்போது நடைபெறும் கலியுகத்தின் தர்மத்தை வெளிப்படுத்துவதால் ‘யுகதர்மம்’ என்னும் பெயர் பொருத்தமானது என்று குறிப்பிட்டிருந்தார். கலியுகத்தில் அதர்மங்கள் மேலோங்கும் என்பது நம்பிக்கை.

Continue Reading →