கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பையும், சொப்கா மஞ்சரியையும் வெளியிடுவதில் பெருமைப்படுவதாக இச் சிறுகதைத் தொகுப்பை மிஸசாகா அடல்ட் சீனிய சென்ரரில் வெளியிட்டு வைத்த பீல் குடும்ப மன்றத்தின் உபதலைவரும், இந்த நூல்களின் தொகுப்பாசிரியருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். முதற் பிரதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி கோபி பிரசாந்தன் அவர்களும் சிறப்புப் பிரதிகளை மன்றத் தலைவர் சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் சூ மக்பெடன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் றொன் ஸ்ராறா அவர்களும், எழுத்தாளர்களின் சார்பில் ஜெயசீலி இன்பநாயகம் அவர்களும் மற்றும் சில பிரமுகர்களும் எழுத்தாளர் குரு அரவிந்தனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். பல்வேறு வயதுடைய பெண்கள் எழுதிய, அவர்களின் எண்ணக் கருக்களைக் கொண்ட, இளமையும், முதுமையும் கலந்த சிறுகதைத் தொகுப்பாக இச் சிறுகதைத் தொகுப்பு அமைந்திருப்பது மட்டுமல்ல, கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றது. புலம் பெயர்ந்து வந்த பெண்கள், கனடாவில் பிறந்த பெண்கள், பல்கலைக்கழக மாணவிகள் என்று பல தரப்பட்ட தமிழ் பெண்களின் ஆக்கங்களும் இச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.