கவிதையின் மொழி என்றைக்கும் அந்தரங்கமாயும் குறியீடாகவுமே இயங்குவது. கி.ஜெயந்தி அவர்களின் மொழிபெயர்ப்பில் இரு தொகுப்புகளைச் சமீபத்தில் படித்தேன். ஒன்று வைதேகி கதைகள் ( கிரவஞ்சப்பட்சிகள் –மூலம் கன்னடம் . சாகித்ய அக்காதமி வெளியீடு ). இன்னொன்று சுக்கூர் பெடயங்கோடு அவர்களின் மலையாளக் கவிதைகள் ( ஆழங்களில் ஜீவிதம் –சாந்தி நிலையம் , சென்னை வெளியீடு ) .
வைதேகிக்கதைகளில் எல்லாவற்றையும் புற உலகின் விசயங்களாக சொல்லியிருப்பதை ஜெயந்தி அவர்கள் சுலபமாக வெளிப்படுத்திடுத்தியிருக்கிறார். ஆனால் கவிதையின் விசேசமான மொழியில் உள்ளில் ஏதோ வைத்துப் பேசுவதை தொடர்ந்து படிக்கிற போதே தெரிந்து கொள்ளமுடிகிறது. சரளமாய் உரைநடையைப் பயன்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்பின் வழியே உள் கருத்தாய் அமைந்திருப்பதை உணர்வதற்குமான வித்தியாசங்களை இத்தொகுப்புகளின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது. சொற்சிக்கனம் , விவரிப்புகள் மூலம் சுக்கூர் பெடயங்கோடு வெளிப்படுத்தும் உலகம் வித்தியாசமானது.
முதலில் அவர் சார்ந்த தொழில் . அவர் ஒரு மீன் விற்பனையாளர் . அதை நாமும் அவர் பார்வை வழியே கண்ட கவிதைகளில் கண்டு கொள்ளலாம்.
* நான் அலைகளையெண்ணி யெண்ணி/ கனவு விற்று நடந்த போது / என் தலை முழுவதும் இந்றந்த மீன்களின் விம்மல்கள்
* நான் மீனை அரிந்து விற்கிறேன் ./ உன்னையும் அது போல் /உனக்கும் மீனுக்கும் நல்ல விலை
* நீயோ …மீனோ …/விரைவில் முடிவீர்கள் /கெட்டுப்போயின் நீயும் மீனும் குப்பைக்குழியில்.
வாழ்க்கை நாட்களின் ஆர்ப்பாட்டமான மவுன அழிப்பில் , உயிர்ப்பின் துள்ளலும் தவிப்பும் சிதறடிக்கப்படுகின்றன. இந்த்த் தவிப்பு தொழில் ரீதியான செயல்பாடுகள், தினசரி வாழ்க்கை சம்பவங்களோடு கவிதைக்குள்ளும் வந்து விடுகிறது.