இன்று , ஜூலை 9, 2016, நடைபெற்ற ‘யுகதர்மம்’ நாடகப்பிரதி நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு பலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ‘காலம்’ சஞ்சிகையின் ஆதரவில் நடைபெற்ற நிகழ்வு இது. கூடவே’காலம்’ சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்’ புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஒழுங்கு செய்து நடத்தியதற்காக ‘காலம்’ செல்வத்துக்குப் பாராட்டுகள். எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களிலொன்றான அவைக்காற்றுக் கழகத்தின் தயாரிப்பான ‘யுகதர்மம்’ நாடகப்பிரதியினை நூலாகப்பெறும் வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சியினைத்தந்தது. இவ்விதம் அவைக்காற்றுக் கழகத்தயாரிப்புகளின் நாடகப்பிரதிகளை நூலாக்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பதை நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய பாலேந்திரா, ஆனந்தராணி தம்பதியினர் தமது உரையில் குறிப்பிட்டனர். தாம் அண்மையில் இலங்கை சென்றிருந்த போது பலருக்குத் தமது நாடகங்கள் பற்றிய முழுவிபரங்களும் , பிரதிகளும் கிடைக்கவில்லையென்பதை அவர்கள் மூலம் அறிந்ததாகவும், அவர்கள் இவர்கள் தயாரிப்பில் வெளியான நாடகப்பிரதிகளை நூல்களாக்கினால் , அவை ஆவணங்களாக இருக்கும் அதே சமயம், நாடக ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமென்றும் குறிப்பிட்டதாகவும், அதன் பின்பே தமக்கும் இவ்விதமான ஆர்வம் ஏற்பட்டதாகவும், அதன் விளைவுதான் ‘யுகதர்மம்’ நூல் என்னும் கருத்துப்பட உரையாற்றினர். உண்மையில் இது வரவேற்கத்தக்க மிகவும் பயனுள்ள முயற்சியென்றே கூறுவேன். அத்துடன் ஆனந்தராணி பாலேந்திரா இன்றைய இளம் சமுதாயம் இந்நாடக முயற்சிகளில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை விளக்கியதுடன், இதற்காக அவைக்காற்றுக்கழகம் எடுத்த, எடுக்கின்ற செயற்பாடுகளையும் தனது உரையில் விபரித்தார். உண்மையில் நாடகக்கலையில் ஆர்வமுள்ள இருவரும் நிஜ வாழ்விலும் ஒன்றிணைந்ததும் அவைக்காற்றுகழகத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களிலொன்று என்பேன்.
venkat_swaminathan_new_a
Copyright © 2024 இரவி — Primer WordPress theme by GoDaddy