பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: லென்ஸ் திரைப்பட இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணனுடன் கலந்துரையாடல் 15-07-2017, சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.…
– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் ஆறாவது அத்தியாயம் ‘ மது, மதகு நீர், மாமலர்கள் “என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –
அத்தியாயம் ஆறு: மது, மதகு நீர், மாமலர்கள்
ஏப்ரல் 26, 2017 புதன் கிழமை
உலகின் தலை சிறந்த ஓவியனின் தூரிகையை இருந்து வெளிப்படும் வர்ணஜாலமும், மனித குலத்தின் அனைத்து கேளிக்கைகளின் வெளிப்பாட்டு நகரமும் ஆன பாரிசில் இருந்து ஏப்ரல் 26 -ம் நாள் அண்டை நாடுகளுக்கு செல்ல அதிகாலையிலேயே ஆயத்தமானோம். சுறுசுறுப்பாகக் காலை உணவை முடித்து மூன்று நாட்களகச் சொந்த வீடு போல் பாவித்துப்புழங்கி வந்த விடுதி அறையை நான்கு முறை மூவரும் சுற்றிச்சுற்றி வலம் வந்து பார்த்துவிட்டு ( ஏதாவது பொருள் விட்டு விட்டோமா என்று சோதிக்கத்தான்) அனைத்து மூட்டை முடிச்சுகளையும் பேருந்தில் ஏற்றி விட்டு, பேருந்தின் உள்ளே என் அப்பா பிடித்து வைத்திருந்த இடத்தில் அமர்ந்து அடுத்த பயணத்திற்கு எங்களை தயார்ப்படுத்திக்கொண்டோம்.
நாங்கள் தங்கி இருந்த விடுதியை சுற்றி அழகான புல்வெளிகள், மரங்கள் மற்றும் குளம் அதில் கீச் கீச் என தங்களின் குரல் வளத்தை வெளிப்படுத்தும் பல்வேறு பறவைகள் என்ற மிக அருமையான அழகான சூழல். மூன்று நாட்களாக தங்கி இருந்தும் அங்கே ஒரு முறை கூட காலாற சுற்றி வந்து இந்த காட்சிகளை சிறிது நேரம் கண்டு ரசித்து அமர முடியவில்லை என்பது ஒரு குறையாகவே எனக்கு மனதில் இருந்தது. போன அத்தியாயத்தில் பாரிஸ் நகரில் மூன்று நாட்களும் மூச்சு முட்டச்சுற்றிய விவரம் கூறப்பட்டு இருந்தது அல்லவா? விடுதியில் இருந்து அதிகாலையில் கிளம்பி சென்றால் இரவு தூங்கும் திரும்ப நேரமே வந்து சேர்வதால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. நம் ஊரில் ஊட்டி நகரில் இருக்கும் ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்கா போல கொஞ்சம் பரப்பளவு மட்டுமே கொஞ்சம் வித்தியாசப்படும் பூங்காக்கள் அங்கே இருந்தன. பாரிஸ் நகரம் தனது வல்லரசான இடங்களைப் பெருமையுடன் காண்பித்து எங்களை ஒரு அரக்கனைப்போல் விழுங்கி விட்டதால் இந்த அழகிய பூங்கா மகளைக் கண்ணார, காலாற அளக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்காமல் போனதை மனதில் ஏற்பட்ட ஒரு சிறு கரும்புள்ளியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஜெர்மனி நகரம் அடுத்த இலக்கு என்றாலும், அதற்கு முன்னே நாங்கள் கடந்து செல்ல வேண்டிய அதிமுக்கியமான இடங்கள் சில இருந்தன. அவற்றைக் கடந்து செல்வது என்பது அங்கே தங்கி அவற்றின் அழகை ரசித்து செல்வது என்பதே ஆகும். பயணத்திட்டம் முதலிலேயே கொடுக்கப்பட்டு இருந்ததால் அடுத்து நாங்கள் செல்லும் நகர் என்ன என்பதைப்பற்றி ஒரு முன்னுரை எங்கள் வழிகாட்டி திரு. பாலா பயணம் செய்யும் சமயத்தில் வழங்குவார். ஒவ்வொரு இடத்தின் சிறப்பும் அங்கே நாங்கள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது எனவும் கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்லுவது போல் கூறுவார். ஆனால், அது நிறைய காதுகளை சேர்ந்ததாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. யாரோ யாருக்கோ சொல்வது போல் நம் குழுவினர் அவரவர் வேலையில் மும்முரமாக இருப்பர்.