மரபுக்கவிதை எழுதுவது இலகுவான விடயம் அல்ல என்பது கவிதை எழுத முயன்றவர்கள் கண்டறிந்த அனுபவ உண்மை. யாப்பு எதுகை, மோனை, முரண், இயைபு எல்லாம் கவிதை இலக்க ணத்துக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். இலக்கணம் மீறாத கவிதையாக இருந்தாலும் அந்தக்கவிதை எத னைச் சொல்ல வருகின்றது என்பதும் முக்கியம். எதுகைக்கும் மோனைக்கும் ஏற்றவாறு சொற்களைத் தேடி எடுத்துக் கவிதை யாக்கும்போது சொல்லவந்த விடயத்தைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லையோ என்ற ஏக்கம் வேறு தோன்றுவது உண்டு. சொல்ல வந்ததைச் சுவைபடச் சொல்லிவிட்டாலே போதுமே. இதற்கு இலக்கணம் எதற்கு? எதுகையும் மோனையும் எதற்கு? என்ற உணர்வுடன் தம் எண்ணப்படி எழுதிவிட்டு இதுவும் கவிதைதான் என்று சொல்லும் கவிஞர்களும் உள்ளனர். இவர்களின் படைப்புக்களையும் இன்று இரசிப்பவர்கள் ஏராளம். இத்தகைய ஒரு காலகட்டத்தில் மரபுக்கவிதை எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் தேவைப்படுகின்றது.
தனது முதற்பாடலின் முதற்சொல்லிலேயே ‘திகழ்தசக்கர’த் தைத் ‘திகடசக்கரம்’ என்று புணர்த்திப் பாடிவிட்டுத் திண்டாடிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கதை பலரும் அறிந்ததே. எனினும் அந்த இலக்கணத்தை விளக்கும் வீரசோழியம் என்னும் நூல்பற்றி கச்சியப்பரே அறிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். தமது பாட்டிலே எதுகை மோனை சரிவரவேண்டும் என்பதற்காக ‘ நாராயணன்’ என்னும் சொல்லில் ஒரு சீர் குறைத்து ‘நராயணன்’ என்று பாடிவிட்டாராம் கம்பர். அவர் மகாகவி என்பதற்காக அவரை மன்னித்து விடுவீர்களா? அப்படியானால் நான் இனிமேல் ‘ நார்’ என்ப தை ‘நர்’ என்றும் ‘வாள்’ என்பதை ‘வள்’ என்று ‘நான்’ என்பதை ‘நன்’ என்றும் பாடப்போகிறேன் என்று பயமுறுத்துகின்றார்
நாராயணனை நராயணன் என்றே கம்பன்
ஓராமல் சொன்ன உறுதியால்-நேராக
வார்என்றால் வர்என்பேன் வாள்என்றால் வள்என்பேன்
நார்என்றால் நர்என்பேன் நன்
மரபுக்கவிதை பாடுவதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது தொடர்ந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வெண்பா விருத்தம் அகவற்பா வஞ்சிப்பா என்றும் பாடிக்கொண்டிருக்கும் தீவகம் தந்த தேன்தமிழ்க்கவிஞர் இராஜலிங்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.