கவிதை: வழிகாட்டு…

பிச்சினிக்காடு இளங்கோஆளுக்கொரு பெயர்வைத்து
அழைக்கிறோம் உன்னை

அவரவர்க்குத்தெரிந்தவழியில்
உயர்த்திப்பிடிக்கிறோம்
உன்னை

உன்னை நெஞ்சில் நிறுத்தி
வழிபடுவதைவிடுத்து
பெருமைபேசி பிதற்றுகிறோம்
வம்பை வளர்க்கிறோம்
வன்முறையில் இறங்குகிறோம்

எங்கேயும் நீ
முகம்காட்டியதில்லை

வணங்குதற்குரியவன்
வன்முறைக்குரியவனில்லை என்பதை
எப்போது
எடுத்துச்சொல்லப்போகிறாய்

தூணிலும் துரும்பிலும்
இருக்கும் உன்னை
எங்கோ இருப்பதாய் எண்ணி
நெடும்பயணம் செய்து
தரிசிக்கவருகிறோம்

Continue Reading →

நூல் அறிமுகம்: நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”

பிச்சினிக்காடு இளங்கோசிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்டது. படிப்பதா? இல்லை அங்கேயே விட்டுவிடுவதா என யோசித்துப் பின் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். நூலாசிரியரின் முன்னுரை என்னைப்படிக்கத்தூண்டியது. அடக்கமும் எழுத்தின்மீது அக்கறையும் கவனமும் தொனித்த நடை அவர்மீதான மரியாதையைக்கூட்டியது. அதனாலயே தொடர்ந்து இருக்கையிலும் இருகையிலிருந்த நூலிலும் கவனம் பதிந்தது. மலாய்மொழிக்கவிதைகளையும் மலாய்க்கவிதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்பையும் தமிழில் பெயர்த்து தந்திருந்தார் ஆசிரியர் பா. சிவம்.  கவிதை நூலில் ஒரு புதிய சொல் விளைந்திருப்பதைக் உணர்ந்தேன். அது ‘நகர்ச்சி’. நுகர்ச்சி நமக்கு அறிமுகமான சொல். ஆனால் இது நகர்ச்சி. பல கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.

“ இரத்தக்கறை படிந்த
நினைவுகளைக் கழுவுவதற்காக
நானும் திரும்பவேண்டும்
நதியிடம்”-

இது அவாங் அப்துல்லாவின் கவிதை. நதியில் கழுவும் அளவுக்கு இரத்தக்கறையென்றால் அந்தக்கனமான நினைவுகளை எண்ணி மனம் அசைபோடத்தவறவில்லை. அவருடைய இன்னொரு கவிதை:

“ இரவின் மெல்லிய துணி
காயத்திற்கு
ஒருபோதும் மருந்தாகாது”.

இது அழகாக மிக அழகாக மனதைச்சீண்டுகிறது. நிலவின் ஒளியை ஆடையாய்ப்போர்த்திய கற்பனை நம்முடையது. இது இரவையே போர்த்திய சிந்தனை இங்கே. இதன் பன்முகப்பார்வையைப் பதிவுசெய்யாமல் தப்பிக்கிறேன் நான். இன்னொரு அழகிய கவிதையைத்தந்திருக்கிறார் அப்துல்கபார் பகாரி.

Continue Reading →

கவிதை: இறந்துபோன சோழனின் தெருக்கள்…

- தம்பா (நோர்வே) -வருடங்கள் தொலைந்த போதும்
நாட்கள் நகரவில்லை.

ஊண் இன்றி உயிர் ஊன்றி
இரத்தம் உறையும் சத்தம் கேட்டு
ஊரும் உறையும்.
உதிர்த்தவனின் ஊமை சத்தம்
உறக்கத்தை கெடுக்கும்.

மாயம் தழுவிய கணவனும்
சோகம் தின்ற புத்திரருமாக
செழித்த மண்ணில் வறள்கிறது வாழ்வு.

விதியின் வீரியத்தை
வீதியில் விழுத்தி
விலகிப் போகிறது வியாக்கியானம்.

கள்வனைத் தீவிரமாக தேடும் அரசு
நல்லவனை நட்டாற்றில்
விட்டுவிடும் குதர்க்கம் பாரும்.

போரின் வீச்சம்
விண்ணின் விட்டத்தை
தாக்கிய போதினிலே
கெட்டவர் கயவரானது சில.
அமைதியில் ஆர்ப்பரிக்கும் ஆட்சியில்
பட்டவர் எல்லாம்
கயவராகும் காட்சி பாரும்.

Continue Reading →

அறிமுகக்குறிப்பு: அவுஸ்திரேலியாவில் புதிய பத்திரிகை “எதிரொலி”

எதிரொலி” ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் புலம்பெயர்ந்த காலம் முதல் எத்தனையோ தமிழ்பத்திரிகைகள், பல்வேறு தமிழ் இதழ்கள் – சஞ்சிகைகள் என்று தொடராக ஆரம்பித்து பெரும்பாலும் எவையும் நிலைத்ததில்லை. காலப்பெருஞ்சுழலின் உக்கிரமான வேகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் காணாமல்போய்விட்டன. பொதுவிலே இன்று அச்சு ஊடகங்களின் இருப்பெனப்படுவது பாரிய கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற விடயம். ஆஸ்திரேலியாவின் பல முன்னணி அச்சு ஊடகங்கள் தங்கள் பத்திரிகை வடிவங்களை சிறிதாக அமைத்துக்கொண்டுவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் தாங்கள் முற்று முழுதாகவே இணையத்துக்கு குடிபெயர்ந்துவிடப்போவதாக அறிவித்தும்விட்டன.”

இவ்வாறு எழுதப்பட்ட ஆசிரியத்தலையங்கத்துடன் மெல்பனில் இம்மாதம் ( ஜூலை 2017) முதல் எதிரொலி என்ற பத்திரிகை 12 பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்த நாட்டில் ஏற்கனவே வெளியான தமிழ் ஏடுகளின் ஆயுள் காலத்தையும் சொல்லி, முன்னணி பத்திரிகைகளுக்கு நேர்ந்துள்ள நிலைபற்றியும் சுட்டிக்காண்பித்துக்கொண்டு,  தமிழ் வாசகர்கள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையுடன் வெளியாகியிருக்கும் எதிரொலி மெல்பனிலிருந்து தனது காலடியை எடுத்துவைத்துள்ளது. மெல்பனிருக்கும் விக்ரோரியா மாநிலத்திலிருந்து முன்னர் சங்கங்களின் செய்தி ஏடுகள் வெளியாகின. அத்துடன் தமிழ் உலகம், உதயம், ஈழமுரசு முதலான பத்திரிகைகளும் வரவாகின. மரபு, அவுஸ்திரேலிய முரசு, அக்கினிக்குஞ்சு முதலான கலை இலக்கிய இதழ்களும் வெளியாகி மறைந்தன. அக்கினிக்குஞ்சு இணைய இதழாகியது. இவை தவிர தமிழ் அவுஸ்திரேலியன், தமிழ்க்குரல், கலப்பை  முதலான இதழ்களையும் அவுஸ்திரேலியா தமிழ் வாசகர்கள் சந்தித்தனர். அந்த வரிசையில் தற்பொழுது இணைந்துள்ளது எதிரொலி. இந்த கடல்சூழ் கண்டத்தில் இலங்கை இந்தியத்தமிழர்கள் வாழ்கின்றமையால், Australia,  அவுஸ்திரேலியா எனவும் ஆஸ்திரேலியா எனவும் அழைக்கப்படுவதையும் அவதானிக்கின்றோம். அதே போன்று Melbourne தமிழில் மேல்பேர்ண், மெல்பன், மெல்போர்ண் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது,  எழுதப்படுகிறது. எதிரொலி,  ஆஸ்திரேலியா – மெல்பேர்ண் என்றே பதிவுசெய்யத்தொடங்கியிருக்கிறது. இவற்றில் எது சரி, எது பிழை என்ற பட்டிமன்றம் அவசியம் இல்லை. “அவுஸ்திரேலியா எங்கிருக்கிறது..?” எனக்கேட்ட தமிழக வாசகர்களும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் அறிந்திருப்பது ஆஸ்திரேலியா தான். 12 பக்கங்களில் வெளியாகியிருக்கும் எதிரொலி முதல் இதழிலிலேயே கனதியான விடயதானங்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது.

Continue Reading →

பயணியின் பார்வையில் : ” யுத்தமின்றி வெற்றியில்லை; வெற்றியின்றி யாருமில்லை”; இழப்புகளுக்கு மத்தியிலும் இயங்கும் எழுத்துப்போராளி வெற்றிச்செல்வியுடன் சந்திப்பு!

எழுத்தாளர் வெற்றிச்செல்வியுடன் , எழுத்தாளர் முருகபூபதிவெற்றிச்செல்விநல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கௌரி அனந்தன் தொகுத்திருந்த மௌனவலிகளின் வாக்குமூலம் வெளியீட்டு விழா நடந்துகொண்டிருந்தபோது, எனக்குத்தெரிந்த யாழ். குடாநாட்டு எழுத்தாளர்கள் யாராவது வந்திருக்கிறார்களா… என்று கண்களை சுழற்றி நோட்டமிட்டேன். எவரும் தென்படவில்லை. அருகில் கெளரி அனந்தன் இருந்தார். நண்பரும் எழுத்தாளரும் சீர்மியத்தொண்டருமான சந்திரசேகர சர்மா நிகழ்ச்சி முடிந்ததும் என்னை  தமது வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருந்தார். மேடையில் பேசிக்கொண்டிருந்த சமூகச்சிற்பிகள் தன்னார்வத்தொண்டு அமைப்பைச்சேர்ந்த ஷெரீன் சேவியர் தமது உரையில், ” இங்கே வெற்றிச்செல்வியும் வந்திருக்கிறார்.” எனச்சொன்னதும்  முகத்தை திருப்பி மீண்டும்  கண்களை சுழலவிட்டேன். வெற்றிச்செல்வியின் படத்தையும் அவரது படைப்புலகம்  பற்றிய குறிப்புகளையும்  ஏற்கனவே  இணைய  ஊடகங்களில்தான் பார்த்திருக்கின்றேன். வந்தவிடத்தில் அவரையும் பார்த்துப்பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்  மகிழ்ச்சியோடு  மேடை நிகழ்ச்சிகள் முடிவடையும் வரையில் காத்திருந்து எழுந்தேன். கௌரி அனந்தன் எனக்கு வெற்றிச்செல்வியை அறிமுகப்படுத்தினார்.

மன்னாரில் அடம்பன் கிராமத்தில் பிறந்திருக்கும் வெற்றிச்செல்வியின் இயற்பெயர் சந்திரகலா.  இளமைக்கனவுகளை  துறந்து  ஈழக்கனவுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1991 இல் இணைந்துகொண்டவர். 1993 இல் தமது ஒரு கையையும்  ஒரு கண்ணின் பார்வையையும் இழந்தவர். அத்துடன் அவர் ஓய்வுபெறவில்லை.  வீட்டுக்குத்திரும்பவில்லை.  2009 இல் முள்ளிவாய்க்காலில்  முடிவுற்ற இறுதிப்போர் வரையில் வெற்றியின் நம்பிக்கையோடும்  ஓர்மத்துடனும் களத்தில் நின்றவர்.

Continue Reading →