முனைவர் இ.பாலசுந்தரத்தின் ‘கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்’ நூல் வெளியீடு இன்று, ஜூலை 16, 2017, பெரிய சிவன் ஆலயக் கலாச்சார மண்டபத்தில் , சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம் (ரொறன்ரோ) ஆதரவில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்து வழிந்த நூல் வெளியீடு எனலாம். கனடா எழுத்தாளர் இணையத்தலைவர் சின்னையா சிவனேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன் அடிகள், கனடாத்தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் இளையபாரதி, இளமாறன் பாலசுந்ததரம், குமரகுரு, முன்னாள் யாழ் பல்கலைக்கழகப்பெண் விரிவுரையாளர் (பெயர் சரியாக ஞாபகத்துக்கு வரவில்லை) எனப் பலர் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்கள். அதனைத்தொடர்ந்து மேடையிலிருந்து நூலாசிரியரான பேராசிரியர் பாலசுந்தரத்திடமிருந்து ஒவ்வொருவரும் வரிசையில் நின்று , சென்று நூலைப்பெற்றுக்கொண்டார்கள்.
இது வித்தியாசமான நடைமுறை. வழக்கமாக நூலின் சிறப்புப் பிரதிகளைக் குறிப்பிட்ட சிலர் (பொதுவாக வர்த்தகர்கள் போன்ற சிலர்) பெற்றுக்கொள்வார்கள். அதனைத்தொடர்ந்து சபையோர் நூலை அரங்கின் முன்னாள் அமர்ந்திருக்கும் ஒருவரிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள். நூலைப்பெற்றுக்கொண்ட ஒவ்வொருவருடனும் நூலாசிரியரும், மனைவியாரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இவ்விதமானதொரு நடைமுறையினை எதிர்பார்த்துப் பலர் சென்றிருக்கவில்லை. நானும்தான். அங்கிருந்த ஒருவரிடமிருந்து தபால் உறை வாங்கி, இன்னுமொருவரிடம் பேனா கடன் வாங்கி , உறையினுள் பணத்தை வைத்துக்கொடுத்தேன். இவ்விதமான நடைமுறையில் நூல்கள் விற்கப்படுவதாக இருந்தால், நிகழ்வு பற்றிய அறிவித்தலிலேயே இது பற்றி அறிவித்தால் அது நிகழ்வுக்கு வருபவர்கள் போதிய ஆயத்தங்களுடன் வருவதை இலகுவாக்கும். இருந்தாலும் இவ்விதமான நடைமுறையிலுள்ள நன்மைகளிலொன்று நூலாசிரியருடன் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுக்க முடிகின்றது என்பதுதான்.