எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா
எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா அவர்களுக்கு இன்று, ஜூலை 19, 2019, வயது 70. இந்த வயதிலும் அவர் இவ்வளவு துடிப்புடன் செயற்படுவது, தன் கருத்துகளை ஆணித்தரமாக வெளியிடுவது இவையெல்லாம் என்னை மிகவும் பிரமிக்க வைப்பவை. ‘ஊழிக்காலம்’ தமிழ்க்கவியை வரலாற்றில், தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலை நிறுத்தி வைக்கும். அதுவோர் இலக்கியப்படைப்பு மட்டுமல்ல , வரலாற்று ஆவணமும் கூட. இந்த வயதிலும் இவ்வளவு இளமைத்துடிப்புடன் இயங்கும் தமிழக்கவியம்மா மேலும் பல்லாண்டுகள் இதே துடிப்புடன் வாழ்ந்து, இலக்கியப்பங்காற்றிட வாழ்த்துகள்.
தமிழ்க்கவி அவர்களின் ‘ஊழிக்காலம்’ நூல் பற்றி முன்னர் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை இத்தருணத்திலிங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.
“..இந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற ‘தினக்குறிப்புகள்’ எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) அதுபோல்தான் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.
இந்த நாவலில் யுத்தக்காலகட்டத்தில் மக்களின் இடம்பெயர்வுகளை, கூவிவரும் எறிகணைகளிலிருந்து தப்புவதற்காக அவர்கள் படும் சிரமங்களை, அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளை, இயக்கத்தவரின் செயற்பாடுகளை, இயக்கத்தைக் காரணமாக வைத்துச் சிலர் அடையும் ஆதாயங்களை .. இவற்றையெல்லாம் தமிழ்க்கவி இயலுமானவரையில் பதிவு செய்திருக்கின்றார். இயக்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டியும், கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்துமுள்ளார். …