முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான நல்வழியில் இடம்பெறும் அறநெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறம் என்பதன் பொருள்
அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்.அம்மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’என்றார் .அறியாமையாள் விளைவது தீவினை .அறியாமையாவது இருள் அவ்விருளை அகற்றுவதே அறத்தின் பயன் என்பர் நாகை சொ.தண்டபாணியார்.(திருக்குறள் அறத்துப்பால் தண்டபாணி விருத்தியுரை,ப.33)
அறம் என்னும் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமையை, ‘அறம்சாரான் முப்பேபோல்’(கலி.38;:19) ‘அறனி லாளன்’ (அகம்.207:13:219:10)என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.