செழியனின் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து..’ (வானத்தைப் பிளந்த கதை)
சிறந்த நாவல்கள் பலவற்றின் தொடக்க வசனங்கள் முக்கியமானவை. வாசகர்களைத் தட்டியெழுப்பி வாசிப்பிற்குள் மூழ்க வைப்பவை. மிகவும் புகழ் பெற்ற நாவல்களிலொன்றான ‘ஹெர்மன் மெல்வில்லின்’ ‘மோபி டிக்’ நாவலின் முதல் வசனம் ‘என்னை இஸ்மாயில் என்று அழையுங்கள்’ (Call me Ishmael) என்று தொடங்கும். மறக்க முடியாத முதல் வசனத்தை உள்ளடக்கிய நாவல்களில் மோபி டிக்’கிற்கு முக்கியமானதோரிடமுண்டு.
இன்னுமொரு நாவலின் தொடக்கமும் வாசகர்களைத் தட்டெயெழுப்பி நாவலுக்குள் மூழ்க வைக்கும் தன்மை மிக்கது. அது காஃப்காவின் புகழ் பெற்ற நாவலான ‘உருமாற்றம்’ (The Metamorphosis) அதன் நாயகனான ‘கிரகர் சம்சா’வைப்பற்றி வர்ணிப்பதுடன் நாவல் தொடங்கும். அது வருமாறு: “ஒரு காலைப்பொழுதில் கிரகர் சம்சா தொல்லைகள் நிறைந்த கனவுகளிலிருந்து விழித்தபோது அவன் தனது படுக்கையில் பூச்சி போன்ற பயங்கரமானதொரு உயிரினமாக மாறியிருப்பதைக் கண்டான்” (One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin)
சில நாவல்கள் அல்லது படைப்புகளின் முடிவுகளும் வாசகர்களைச் சுண்டியிழுப்பதாக, நெஞ்சில் நிலையாக உறைந்து விடுவதாக அமைந்து விடும். அண்மையில் கவிஞர் செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை (ஈழப்போராட்ட நாட்குறிப்புகள்) ‘ அத்தகையதொரு படைப்பு. இது கவிஞர் செழியனின் ஒரு குறிப்பிட்ட காலத்துச் சுயசரிதை. தாயகம் (கனடா)வில் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பிலிருந்து’ என்று தொடராக வெளிவந்து ‘கனேடியன் நியூபுக் பப்பிளிகேசன்’ (ரொறொன்ரோ) பதிப்பகத்தால் அதே பெயரில் நூலாகவும் வெளியிடப்பட்டது. பின்னர் ‘காலம்’ சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்’ வெளியீடாக ‘வானத்தைப் பிளந்த கதை’ என்று மீண்டும் வெளியானது. இந்நூல் பின்வருமாறு முடிகின்றது. நெஞ்சத்தைத்தொடும் முடிவு. புகலிடம் நாடிப் பிறந்த மண்ணை விட்டுப் பிரியும் மானுடர் அனைவரையும் சுண்டியிழுக்கும் முடிவு.