நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் இருக்கைகள் சேற்றிலும் தண்ணீரிலும் ஊறிப் போயிருந்தன. பிளாஸ்டிக் கதிரைகள், புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் மிதந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன. சுவரில் கழுத்தளவு உயரத்தில் மஞ்சள் நிற நீரின் அடையாளம் படிந்திருந்தது.
அறையிலிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தவளின் நெஞ்சம் அதிர்ந்து போனது. சேலைகள், சட்டைகள், பிள்ளைகளின் ஆடைகள் அனைத்திலிருந்தும் அழுக்குத் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அலுமாரியின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். முக்கியமான பத்திரங்கள் அனைத்துமே நனைந்து போயிருந்தன. அவற்றுக்கிடையே தங்க நகைகளை அடகு வைத்தமை சம்பந்தமான முக்கியமான காகிதங்களும் அடங்கியிருப்பது நினைவுக்கு வந்து அவளது கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது.
அவள் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். அதிலும் ஈரத்தை உணர்ந்தவள் உடனே எழுந்து நின்றாள். எழுந்ததுமே கட்டில் ஒரு புறமாக சாய்ந்து கொண்டது. அட்டைப் பலகைகளால் செய்யப்பட்ட அதை மீண்டும் பாவிப்பது சாத்தியமில்லை. அது இப்போது நனைந்து ஊறி பப்படத்தைப் போல உப்பிப் போய்விட்டிருந்தது. வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைக் கூட இன்னும் செலுத்தி முடிக்கவில்லை.
பிள்ளைகளின் அறை முழுவதும் புத்தகங்களும், கொப்பிகளும் பரந்து கிடந்தன. அவற்றின் மேலே அடுக்கடுக்காக சேறும் சகதியும் படிந்திருந்தன. கறுப்பு நிற அழுக்குச் சேற்றிலிருந்து மூக்கைத் துளைக்கும் நாற்றம் கிளம்பியதால் அவள் மூக்கைப் பொத்திக் கொண்டாள். அழுக்காகி, சகதி படிந்து அறையின் மத்தியில் வீழ்ந்து கிடந்த மகளின் பொம்மையொன்றைக் கண்டதும், அண்மையில் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட குழந்தையொன்றின் சடலம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு வெள்ள நிவாரண முகாமில் விட்டுவந்த மகள் நினைவில் வந்தாள்.