எம் . ஜெயராமசர்மா ( மெல்பேண் … அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -1. காலமெலாம் வாழுகிறாய்

* கவிஞர் கண்ணதாசன் நினைவுக் கவிதை.

எங்கள்கவி கண்ணதாச
என்றும்நீ வாழுகிறாய்
தங்கநிகர் கவிதந்த
தமிழ்க்கவியே நீதானே

தங்கிநிற்கும் வகையினிலே
தரமிக்க கவிதைதந்து
எங்களுக்கு அளித்தவுன்னை
எம்மிதயம் மறந்திடுமா

பொங்கிவரும் கடலலைபோல்
புதுப்புதிதாய் பாட்டெழுதி
எங்கும்புகழ் பரப்பியதை
எம்மிதயம் நினைக்கிறதே

தங்கத் தமிழ்மகனே
தரமான தமிழ்ப்புலவா
எங்குநீ சென்றாலும்
எல்லோரும் உனைமறவோம் !

கவிச்சிங்கம் உனக்காக
பலசங்கம் எழுந்துளது
கவிபாடி கவிபாடி
கவிஞரெலாம் போற்றுகிறார்

புவிமுழுதும் உன்புகழோ
பொலிந்தெங்கும் இருக்கிறது
கவியரசே கண்ணதாச
காலமெலாம் வாழுகிறாய் !

நீபாடாப் பொருளில்லை
நீயெடுக்கா உவமையில்லை
தாய்த்தமிழே உன்னிடத்தில்
சரண்புகுந்து இருந்திடுச்சே !

Continue Reading →

ஆய்வு: மூதுரை உணர்த்தும் அறநெறிகள்

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல், அசதிக்கோவை, ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கிய படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான மூதுரையில் இடம்பெறும் அறநெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்

அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்.அம்மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’என்றார் .அறியாமையாள் விளைவது தீவினை .அறியாமையாவது இருள் அவ்விருளை அகற்றுவதே அறத்தின் பயன் என்பர் நாகை. சொ.தண்டபாணியார்.(திருக்குறள் அறத்துப்பால் தண்டபாணி விருத்தியுரை,ப.33) அறம் என்னும் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமையை, ‘அறம்சாரான் முப்பேபோல்’(கலி.38;:19) ‘அறனி லாளன்’ (அகம்.207:13:219:10) என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.

Continue Reading →

இலக்கியப்பூக்கள்

வாரா வாரம் அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamil.com) ஒலிபரப்பாகும் இலக்கியப்பூக்கள் 150ஆவது வாரத்தை நோக்கி பயணிக்கிறது. உங்கள் குரலில் படைப்புக்கள் தர விரும்புவோர் என்னுடன்…

Continue Reading →

தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பு 05.07.2015

நிகழ்வுகள்!தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பு 05.07.2015
இடம்: பெரிய சிவன் ஆலய கலாசார மண்டபம்
1148 பெல்லாமி வீதி. ஸ்காபரோ. ( 1148 Bellamy Road, Scarborough)
திகதி; 05.07.2017 புதன்கிழமை —  நேரம்: மாலை 5:00 – 6:30 மணி

அன்புடையீர்:

பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் எழுதி வெளியிடவுள்ள “கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும் – ஓர் வரலாற்றுப் பதிகை” என்ற நூலானது கனடாவில் வாழும் ஈழத் தமிழரது வரலாற்றைப் பதிவு செய்துள்ள ஓர் அரிய வரலாற்று ஆவணமாகும். 1950ஆம் ஆண்டு முதலாக இலங்கைத் தமிழர் கனடாவுக்குக் கல்வி, தொழில், ஏதிலிக் கோரிக்கை, குடிவரவு என்ற அடிப்படைகளில் வருகை தந்துள்ளனர். அவர்களின் வரலாறு, இந்நாட்டில் அவர்கள் கல்வி கற்றுத் தம் வாழ்வை வளமாக்கிய வரலாறு, கனடாவில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, ஆகியவற்றைப் பேணுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுவரும் பல்வேறுபட்ட முயற்சிகள், ஈழத்தமிழரின் அரசியல் செயற்பாடுகள், கனேடிய அரசியல் பிரவேசம், குடும்பம், வாழ்வியல், இளையோர், முதியோர், தலைமுறைஇடைவெளி. தமிழ் ஊடகங்களின் தோற்றம், வளர்ச்சி என்ற பல்வேறு விடயங்கள் இந்நூலிலே வரலாறாக எழுதப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் பற்றிய தரவுகளைக் கடந்த பத்து ஆண்டுகளாகத் திரட்டி, ஆராய்ந்து 530 பக்கங்களில் தனிநூலாகத் தந்துள்ளார். இது எமது எல்லோரது வாழ்வியல் பற்றிய வரலாற்று ஆவணமாகும.; இந்நூலின் வெளியீடு இம்மாதம் 16. 07. 2017 ஞாயிற்றுக்கிழமை மேலே குறிப்பிடப்பட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 245: ‘நானே நானா? யாரோ தானா?’

வாசிப்பும், யோசிப்பும் 245: 'நானே நானா? யாரோ தானா?'சென்ற வெள்ளிக்கிழமை , 23.06.2017 , எனக்குச் சிறியதொரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே என் கண்களிரண்டும் அவ்வளவு ஆரோக்கியமான நிலையிலில்லை. இரு கண்களிலும் ‘கட்ராக்ட்’ அதாவது கண் புரை  என்னும் நிலை தோன்றியிருந்தது. அண்மைக்காலமாக இரவில் வாகனம் செலுத்தும்போது , எதிரில் பிரகாசமான வெளிச்சம் தென்படுகையில் , வாகனத்தைச்செலுத்துவது சிரமமாக இருப்பதை அறிந்தேன். எனவே முதலில் என் இடது கண்ணில் அதற்கான சத்திர சிகிச்சையினைச் செய்ய இசைந்தேன்.

சத்திரசிகிச்சைக்கு முதலிரு தினங்களும் கண் துளிகளிட்டேன். சத்திரசிகிச்சை நாளும் ,சத்திரசிகிச்சைக்கு முன் மேலும் சில துளிகள் இடப்பட்டன. Intravenous (IV) முறையில் இடது கை வழியாகத் திரவங்கள் செலுத்தப்பட்டன வலி தெரியாதிருப்பதற்காக. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். படுக்க வைத்தார்கள். கண்களை இன்னுமொரு திரவம் கொண்டு துடைத்தார்கள். சிறு துவாரம் மிக்க துணி கொண்டு இடது கண்ணை மூடினார்கள். என் முன்னே குனிந்திருந்த கண் வைத்தியரும், அவரது உதவியாளர்களும் தெரிந்தார்கள். ஏதோ செயற்படுகின்றார்கள் என்பதை மட்டும் அறிய முடிந்தது. பத்து அல்லது பதினைந்து நிமிடங்களிருக்கும். ‘எல்லாம் முடிந்தது’ என்றார்கள். கண் மேல் போர்த்தியிருந்த துணியை அகற்றினார்கள். உலகம் கண் முன்னே முன் எப்போதையும் விட அழகாக, பிரகாசமாக, வர்ணங்களுடன் விரிந்தது. மேலுமிரு மணி நேரம் தங்கியிருந்தேன். கண்ணைப் பரிசோதித்தார்கள். நன்றாக இருப்பதாகத் திருப்திப்பட்டார்கள். ஒருவாரம் கழித்து மீண்டும் கண் மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதிக்கும்படி கூறினார்கள். முதல் நாள் முழுவதும் கண்ணை மறைத்திருக்கும் வகையில் பிளாஸ்டிக் கண்ணாடியால் மூடி விட்டார்கள். ஒரு வாரம் வரையில் இரவில் படுக்கச்செல்லும்போது அவ்விதமே மூடிப்படுக்கும்படி கூறினார்கள். முதல் 24 மணி நேரம் கவனமாக இருக்கும்படி கூறினார்கள். தொடர்ந்து கண் துளிகளை ஒவ்வொரு நாளும் நான்கு தடவைகள் இட்டு வரும்படி கூறினார்கள். 26ந்திகதியிலிருந்து முகநூலில் பதிவுகள் இடத்தொடங்கினேன். அடுத்த நாளே கண்ணாடியில்லாமல் காரை ஓட்டிப் பார்த்தேன். வலது கண்ணுக்கும் கண்ணாடி தேவை என்பதால், புதுக்கண்கண்ணாடி எடுக்கும் வரையில் , கண்ணாடி அற்றே இன்று வரை வாகனம் ஓட்டுகின்றேன். இப்பொழுதுதான் தெரிகின்றது இது நாள் வரையில் நான் பல வர்ணங்களை இழந்த உலகையே பார்த்து வந்திருக்கின்றேன் என்று.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 244: வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பற்றிச் சில நினைவுகள்…..

பொ.ஐங்கரநேசன்

வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பற்றிச் சில நினைவுகள்…..


அண்மைக்காலமாக இலங்கையின் வட மாகாணசபையில் இடம் பெற்று வந்த கூட்டமைப்புக்கும், முதல்வருக்குமிடையிலான இழுபறியினைத்தொடர்ந்து, மாகாண சபை அமைச்சர்களிருவர் மீதான ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பரிந்துரையின்பேரில் அமைச்சர்களிலொருவரான இலங்கை, வட மாகாண சபை வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகியுள்ளார். இதுவரையில் இந்த இழுபறி பற்றித் தமிழ் ஊடகங்களில் ஆய்வாளர்கள் (?) ஆளுக்காள் தமது கருத்துகளைத்தெரிவித்துக்கொண்டிருந்த நிலையில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்கள், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அளித்த விளக்கங்களுக்கான காணொளிகளையும், வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற அவரது தன்னிலை விளக்கத்துக்கான காணொளியினையும் பார்த்தேன்: கேட்டேன்.


இவற்றிலிருந்து நான் புரிந்தவை எவையென்றால்… அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீருபிக்காத விசாரணக்குழு அவர் பதவி விலக வேண்டுமென்று முடிவு செய்திருக்கின்றது. இது அமைச்சரின் குற்றச்சாட்டு. அடுத்தது அவர் முதல்வர் விக்கினேஸ்வரன் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையையும் வைத்திருப்பதையும் அறிய முடிகின்றது. இலங்கை மத்திய அரசால் அதன் எண்ணங்களுக்கேற்ப ஆடுவாரென்று ஆரம்பத்தில் கருதப்பட்ட முதல்வர் பின்னர் மக்களின் துயரங்களை நேரில் கேட்டுப்பின்னர் சுதந்திரமாகத் தமிழ் மக்களுக்காகச் செயற்படத்தொடங்கிவிட்டாரென்றும், அதனால் அதிருப்தியுற்ற இலங்கை மத்திய அரசின் சதியே கூட்டமைப்புக்கும், முதல்வருக்குமிடையிலான பிளவுகளுக்குக் காரணமென்றும், முதல்வரை நீக்குவதே இலங்கை மத்திய அரசின் நோக்கமென்றும் அமைச்சர் ஐங்கரநேசனின் உரையிலிருந்து ஊகிக்க முடிகின்றது. ஏற்கனவே இவ்வகையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் சிலரைக்கொண்டுள்ள விசாரணக்குழுவின் மீது அமைச்சர் சந்தேகம் மிக்கவராக இருப்பதையும் ஊகிக்க முடிகின்றது. மேலும் தன்னைச்சந்தித்த முதல்வர் வடக்கு மாகாண சபையினைக்காப்பதற்குப் பதவி விலகித்தியாகம் செய்யுமாறு கேட்டதன அடிப்படையிலேயே தான் பதவி விலக முன்வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

Continue Reading →

நிகழ்வுகள்: கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும், நிதிக்கொடுப்பனவு நிகழ்வும்!

நிகழ்வுகள்: கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும், நிதிக்கொடுப்பனவு நிகழ்வும்!

அன்புடையீர் வணக்கம். அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் உதவிபெறும் கிழக்கு மாகாணத்தில் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் அண்மையில் வித்தியாலய அதிபர் திரு. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இங்கு பயின்று நிதியத்தின் உதவி பெற்ற செல்வி க. ஹர்சினி, இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தினார். இம்மாணவி தற்போது தனது பட்டப்படிப்பை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்துள்ளார். இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் செ. யோகராஜா, மற்றும் சமூகப்பணியாளர் செங்கதிர் கோபாலகிருஷ்ணன், வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம், சீர்மிய ஆசிரியை திருமதி சுபாஷினி கிருபாகரன் ஆகியோருடன் முருகபூபதியும் பங்குபற்றினர். உதவி பெறும் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.

Continue Reading →

ஆய்வு: பழந்தமிழ் நூல்களில் ‘பரத்தமை’!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

தம் உடம்பை ஆடவர்க்கு விற்கும் பெண்களைப் பரத்தை, விபச்சாரி, விலைமகள், பொதுமகளிர், வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், வேசி, தாசி, கற்பற்றார் எனப் பல பதங்களால் அழைப்பர். உலகில் மனிதப் பிறவியே ஓர் உயர்ந்த நுணுக்கமான தத்துவப் படைப்பாகும். ஆணைப் பெண்ணுக்காகவும், பெண்ணை ஆணுக்காகவும் படைக்கப்பட்டமை ஓர் அரிய உண்மையாகும். இனிச் சங்க இலக்கியங்களிற் பரத்தமை பற்றிப் பேசப்படும் பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
இடைச்சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தைத் தொல்காப்பியனார்  (கி.மு. 711) எனும் புலவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பரத்தையிற் பிரிவு தோன்றிவிட்டது.
தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிச் சென்று விட்டான். சென்ற காலை, தலைவி பூப்பெய்திய செய்தி கேட்டுத் தலைவியை நாடிச் சென்று, முதல் மூன்று நாளும் அவள் சொற்கேட்டு, ஒழுகி நின்று, பிற்பட்ட பன்னிரண்டு நாளும் அவளைப் பிரியாது கூடி நிற்பான். பரத்தையிற் பிரிவைத் தணிக்க இவ்வரையறை வேண்டற்பாலதாகும். அக்கால மக்கள் குழந்தைப் பேற்றிற்குக் கொடுத்துள்ள சிறப்பும், சீரும், முக்கியத்துவமும் தெளிவாகின்றது. இதைத் தொல்காப்பியச் சூத்திரம் இவ்வண்ணம் கூறுகின்றது.

‘பூப்பின் புறப்பாடு ஈராறு  நாளும்
நீத்தகன்று உறையார்   என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான.’   –    (பொருள்.  185)

தொல்காப்பியர் காலத்தில் பரத்தையர் மாட்டு வாயில்களை அனுப்புதல், நான்கு இனத்தார்க்கும் உரித்து என்பதைக் கீழ் வரும் சூத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இங்கு நால்வர் என்பது (1) அந்தணர் (2) அரசர் (3) வணிகர் (4) வேளாளர் எனும் நால்வகுப்பினரைக் குறிக்கின்றது.

Continue Reading →

முல்லைஅமுதன் கவிதைகள் மூன்று!

1.

முல்லை அமுதன்

வெய்யில்
வரும் போது புடவைகளை
காயப்போடுங்கள்.
‘ம்’
பிள்ளைகளுக்கு
உணவை ஊட்டிவிட்டு,
பாடசாலை வாகனத்தில்
அனுபிவிடுங்கள்.
‘ம்’
மின்சாரக் கட்டணம் கட்டவேண்டும்.
‘ம்’
அம்மா வரப் போறா
வீட்டைத்துப்புரவு பண்ணி வையுங்கள்.
‘ம்’
அப்படியே மாடியில
காயவிட்ட ஊறுகாயை எடுத்து வைச்சு
,பிறகு
சாப்பிடுங்கள்.
நான் வர தாமதமாகும்..
‘ம்’
செருப்பை
மாட்டியபடி நகர்ந்தாள்
மனைவி.
நான் இரவுப் பூக்களின் மீதான
பனித்துளியை
இரசித்தபடி இருந்தேன்.
என் கனவை
மிதித்தபடி
வெளியேறினாள்.

Continue Reading →