படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏற்பட வேண்டும். இந்த மன எழுச்சி படைப்பெழுச்சியாக மாறி, தக்கதொரு வடிவம் கொண்டு வாசகத் தளத்திற்கு முழுமையான படைப்பாக வந்து சேர்கின்றது. ஒரு படைப்பு முழுமையான படைப்பாக, வெற்றிகரமான படைப்பாக அமைய அதன் வடிவம், அதன் கருத்து, அதன் நடை, அதன் பொதுமைத்தன்மை, அதன் பன்முகத்தன்மை, இலக்கியத் தன்மை போன்ற பல நிலைகள் காரணங்களாக அமைகின்றன. இக்காரணங்கள் வலுப்பெற்று வெற்றிகரமான படைப்பாக மிளர்ந்த ஒன்று காலாகாலத்திற்கும் அழியாமல் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிலைக்கு வந்தடைகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்றழைக்கப்படும் கவிஞரேறு வாணிதாசன் என்னும் தனிமனிதன் தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கும் வகையில் பல்வேறு படைப்புகளை தமிழிலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். அவற்றில், தான் வாழ்ந்த காலத்தின் மீது கொண்டிருந்த விருப்பு வெறுப்புகளையும், எதிர்கால சமூக மாற்றங்களையும் விரும்பி இலட்சிய நோக்கோடு பல உன்னத கருத்தாழமிக்க கவிதைகளை இனிமையும் எளிமையும் அமைந்த செந்தமிழ் நடையில் அழகுற படைத்தளித்துள்ளார். அவரது படைப்பின் வழி தமிழ்ச்சமூகமும் தமிழிலக்கியமும் அடைந்த பெரும் பயனையும், இன்னபிற சமூகசிந்தனைகளையும் வெளிக்கொணர்ந்து தமிழிலக்கியத்திற்கு ஏதேனும் ஒரு பரிமாணத்தில் உந்துசக்தியாக அமையும் என்ற எண்ணத்தில் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் – வாழ்வும் பணியும்
கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் ‘அரங்கசாமி என்ற எத்திராசலு’ இவர்தம் புனைப்பெயர் ‘ரமி’ என்பதாகும். புதுச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். இவர்தம் பெற்றோர் அரங்க திருக்காமு, துளசியம்மாள். இவரின் காலம் 22.7.1915 முதல் 7.8.1974. இவர், கவிஞரேறு, தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், தமிழ்நாட்டுத் தாகூர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். கவிஞர் வாணிதாசன் கவிதைகள் என்னும் தலைப்பில் வெளிவந்த தொகுப்பில் இயற்கையைப் பற்றிய கருத்துக்கள் இவரின் பாடல்களில் மிகுதியாக காணப்பட்டதால் இவரை தமிழகத்தின் வேர்ட்;ஸ்வொர்த் என்று பாராட்டினார்கள். இந்த கவிதை தொகுப்பு பெரும்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மக்களிடம் பகுத்தறிவைத் தூண்டுவதே தன் பாடல்களின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பது இவருடைய மற்றுமொரு சிறப்பாகும்.