எழுத்தாளர் R.P.ராஜநாயஹத்தின் எழுத்தை ஒருமுறை வாசித்தாலும் , வாசித்தவர் அதற்கு அடிமையாகிவிடுவார். இவர் புகழ் பெற்ற தமிழ் வலைப்பதிவர்களில் முக்கியமானவர்களிலொருவர். சிற்றிதழ், என்று தொடங்கி தமிழ் / உலகக் கலை, இலக்கிய உலகு பற்றி, இலக்கிய ஆளுமைகள் பற்றி, அவர்கள்தம் வாழ்வில் நடைபெற்ற பலருக்குத் தெரியாத சம்பவங்கள் பற்றியெல்லாம் , சுவையாக, நெஞ்சைக்கவரும் வகையில் கூறுவதில் வல்லவர் R.P.ராஜநாயஹம். தன் பெயரை R.P.ராஜநாயஹம் என்றுதான் எழுதுவார். ராஜநாயகம் என்று எழுதுவதில்லை. ஒருமுறை இவரது கட்டுரையைப் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியிட்டபோது ராஜநாயகம் என்று எழுதியபோது அதனைத்திருத்தி ராஜநாயஹம் என்று போடுமாறு எழுதி என் தவறினைத்திருத்தினார்.
சினிமாவில் உதவி இயக்குநராக, நிதி நிறுவனம் நடத்தியவராக, நடிகராக.. என இவர் செய்த பல்வேறு வேலைகள் காரணமாக இவரது தமிழகக் கலை, இலக்கிய அனுபவ அறிவு பரந்தபட்டது. ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த புலமை மிக்கவர். இவரது வலைப்பதிவில் வெளியான தமிழ்ச்சினிமா பற்றிய தகவல்களைக் ‘குமுதம்’ சஞ்சிகை திருடிப்பாவித்திருப்பதை இவரது பதிவுகள் மூலம அறிய முடிகின்றது.
இவரது மாமனார் எம்ஜிஆர் காலத்தில் முக்கிய பிரமுகர்களிலொருவராக விளங்கியவர். அதனால் தமிழக அரசியல் பற்றிய பலருக்குத் தெரியாத தகவல்களெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கின்றது.
எழுத்தாளர் அமரர் அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்.
‘பதிவுகள்’ இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் இவரது கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இவரது எழுத்துகள் இலக்கியச் சிறப்பு மிக்கவை அவை எழுதப்படும் எழுத்து நடையால், வெளிப்படுத்தும் இலக்கிய அறிவினால். இவரது கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய அனுபவப்பதிவுகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்கும் அதே சமயம், கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்கு, கலை, இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக விளங்கும் ஆவணப்பதிவுகளும் கூட.