அண்மையில் நடைபெற்ற ‘யுகதர்மம்’ நிகழ்வின் போது பேர்டோல்ட் பிறெக்ட் எழுதிய ‘The Exception and the Rule’ நாடகத்தின் பெயரை மொழிபெயர்த்தவர்கள் எதற்காக ‘யுகதர்மம்’ என்று மொழிபெயர்த்தார்கள் என்றொரு கேள்வி பலருக்கு எழுந்திருக்கக்கூடும். பெயரை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் இவ்விதம் மொழிபெயர்த்திருக்கலாமா என்றொரு கேள்வி சிலருக்கு எழுந்திருக்கும். ஏற்கனவே திறனாய்வாளர்கள் சிலருக்கு இக்கேள்வி எழுந்ததை முதலில் ‘யுகதர்மம்’ மேடையேற்றியபோது வெளிவந்த நாடகம் பற்றிய விமர்சனங்களில் அவதானிக்க முடிகின்றது.
அது பற்றி கருத்தைக் கூறுவதற்கு முன்னர் ‘யுகதர்மம்’ நாடகத்தை மொழிபெயர்த்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு முதலில் வருவோம். நாடகம் வெளிவந்த காலகட்டத்தில் நாடகத்தை மொழிபெயர்த்தவராக நிர்மலா நித்தியானந்தனையும், பாடல்களை மொழிபெயர்த்தவராக அமரர் ச.வாசுதேவனையுமே குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் நாடக மொழியாக்கத்தைச் செய்தவர் ச.வாசுதேவன் என்பதை அண்மையில் நாடகத்தின் இயக்குநர் பாலேந்திராவுடன் கதைத்துக்கொண்டிருந்தபோது அறிய முடிந்தது. ‘யுகதர்மம்’ நூலின் தொகுப்புரையிலும் பாலேந்திரா அவர்கள் “வாசுதேவனே முதலில் முழு நாடகத்தையும் மொழிபெயர்த்துத்தந்தார். அப்போது நாங்கள் இருவரும் கொழும்பில் வசித்து வந்தோம். ‘யுகதர்மம்’ என்ற தலைப்பும் அவராலேயே இடப்பட்டது.” என்று குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் “நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிர்மலா நித்தியானந்தன் பிரதியைச் செம்மைப்படுத்தினார்” என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் “முதல் நாடக மேடையேற்றத்தின்போது தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும் பாடல்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்தமையை மு.நித்தியானந்தன் எமது சுவிஸ் நாடக விழா – 1994- மலரில் பதிவு செய்துள்ளார்.” என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். இவற்றின் அடிப்படையில் வாசுதேவனே முதலில் நாடகத்தை முழுமையாக மொழிபெயர்த்தவர் என்ற முடிவுக்கு வருவதில் எந்தவித ஆட்சேபணையுமில்லை நிர்மலா நித்தியானந்தன் எந்தவித எதிர்க்குரலும் எழுப்பாதவிடத்து. இதுவரையில் அவர் அவ்விதம் எதிர்க்குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.
மேற்படி ‘யுகதர்மம்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்பில் வல்லுநரான எழுத்தாளர் என்.கே.மகாலிங்கமும், நாடகவியலாளர் பி. விக்கினேஸ்வரனும் நாடகத்தின் பெயரை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் ‘யுகதர்மம்’ என்று மொழிபெயர்த்ததைச் சிலாகித்துப் பேசினர். பி.விக்கினேஸ்வரன் நாடகம் கூறும் கதை தற்போது நடைபெறும் கலியுகத்தின் தர்மத்தை வெளிப்படுத்துவதால் ‘யுகதர்மம்’ என்னும் பெயர் பொருத்தமானது என்று குறிப்பிட்டிருந்தார். கலியுகத்தில் அதர்மங்கள் மேலோங்கும் என்பது நம்பிக்கை.