கிளிநொச்சி ஊடக அமையத்தின் சந்திப்பு நிறைவடைவதற்கு சற்று காலதாமதமானது. தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக உரையாற்றுவதற்கு சில சகோதரிகள் வந்திருந்தார்கள். ஒரு கத்தோலிக்க மதகுருவினால் நடத்தப்படும் மருத்துவ ஆலோசனை அமைப்பிலிருந்து வந்திருந்த அவர்களுடைய உரை சமூகப்பெறுமதியானது. எனினும் அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே கேட்டனர் என்பது எனக்கு ஏமாற்றமே. கத்தோலிக்க மதபீடங்கள் இவ்வாறு இலங்கையில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது. அத்துடன் கத்தோலிக்க வணக்கத்துக்குரிய சகோதரிகளும் அன்னையரும் பெற்றவர்களை இழந்தவர்களையும் பராமரிப்பின்றி அனாதரவான முதியவர்களையும் ஆங்காங்கே இல்லங்கள் அமைத்து கவனித்துவருகின்றனர். மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர். வன்னிப்பிரதேசங்களில் இவ்வாறு நடைபெற்றாலும், கிழக்கில் சில மதபீடங்கள் மத மாற்றவேலைகளில் கச்சிதமாக ஈடுபடுவதையும் அவதானித்தேன். அதுபற்றி கிழக்கிலங்கை பயணம் தொடர்பான பத்தியில் எழுதுவேன்.
அன்றைய ஊடக அமையசந்திப்பு முடிந்து புறப்படும்போது, ” உங்களை சந்திக்க மேலும் சிலர் வந்து வீட்டில் காத்திருக்கிறார்கள்.” என்றார் நண்பர் கருணாகரன். மற்றும் ஒரு சந்திப்பா…?” எனக்கேட்டேன். “ஆம், கிளிநொச்சி முன்னாள் எம்.பி. முருகேசு சந்திரகுமார் உட்பட சில இலக்கியவாதிகளும் பாடசாலை அதிபர்களும் அங்கு வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இப்பொழுதே மாலை ஆறு மணியும் கடந்துவிட்டது. புறப்படுவோம்” என்றார் கருணாகரன். நான் சந்திப்பதற்கு பெரிதும் விரும்பியிருந்தவர்தான் முருகேசு சந்திரகுமார். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அன்றைய பயணத்திற்கு முன்னர் கிளிநொச்சிக்கு 2010 ஆம் ஆண்டு முதல் அடிக்கடி வந்து திரும்பியிருக்கின்றேன். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் திரு. பங்கயற்செல்வன் அதிபராக இருந்த காலத்தில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடாக பல மாணவர்களுக்கு உதவியிருக்கின்றோம். அதற்கு முன்னர் போர்க்காலத்திலும் மாங்குளம் பங்குத்தந்தையாக இருந்த வண.பிதா ஆர். சூசைநாயகம் அவர்களின் ஊடாக சில மாணவர்களுக்கு உதவி வழங்கியிருக்கின்றோம். அதில் ஒரு மாணவர் மாவட்ட ரீதியில் சிறந்த மாணவராக தெரிவாகி முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவிடம் விருதும் பெற்றவர். பின்னாளில் இம்மாணவர் வெளிநாடொன்றில் இலங்கை தூதரகத்தில் நல்லதொரு பதவியிலிருப்பதாகவும் அறிய முடிந்தது.
இவ்வாறு கிளிநொச்சிக்கும் எமக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தபோதிலும், போர் முடிவுற்றதன்பின்னரே எனக்கு அங்கு சென்றுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. போர்க்காலத்தில் கிளிநொச்சி பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறிவோம். அங்கிருக்கும் வற்றாத ஜீவ நீர் நிலை இரணைமடுக்குளத்தை நீர்விநியோகத்திற்கு பயன்படுத்துவது குறித்தும் வடக்கு – வன்னி விவசாயிகளிடத்தில் ஒத்த கருத்து இல்லை. கிளிநொச்சி போருக்குப்பின்னர் வேகமாக அபிவிருத்தியடைந்த பிரதேசம். அதில் முக்கிய பங்கு மு. சந்திரகுமாருக்கும் உண்டு. எனினும் கடந்த பொதுத்தேர்தலில் அவர் தெரிவாகவில்லை என்பது எனக்கு வருத்தமே.