பயணியின் பார்வையில் அங்கம் — 17: எழுபத்தியைந்து வருடப்பூர்த்தியை கொண்டாடும் பேராதனை பல்கலைக்கழகமும் – தமிழ்த்துறை மாணவர்களும் – வாசிப்பு அனுபவமும்

எழுத்தாளர் முருகபூபதிசமகாலத்தில் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொண்டால் பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் ஒரு முக்கியமான கேள்வி, ” இறுதியாக படித்த நூல் எது…? ” சற்று யோசிப்பார்கள். உடனடியாக பதில் வராது. ஆனால், தமது முகநூலில் என்ன வந்திருக்கிறது..? யார்… யாருடன் விவாதித்தோம் முதலான விவகாரங்கள் பற்றி உற்சாகத்துடன் அல்லது சோர்வுடன் சொல்வார்கள். என்னிடத்தில் முகவரிதான் இருக்கிறது. முகநூல் இல்லையென்பதனால், அவ்வாறு முகநூல்காரர்கள் சொல்லும்போது சகிப்புடன் கேட்டுக்கொள்வேன். மாணவர்களையும் இந்த முகநூல் ஆக்கிரமித்துள்ளது. இம்முறை இலங்கைப்பயணத்தின்போது தகைமைசார் பேராசிரியர், எனது நீண்ட கால நண்பர் எம். ஏ. நுஃமான், பேராதனைப்பல்கலைக்கழகத்திற்கு வந்து உரையாற்றுமாறு அழைத்தார். அங்கு தமிழ்த்துறை தலைவராக பணியிலிருக்கும் பேராசிரியர் வ. மகேஸ்வரனும் தொடர்புகொண்டு அழைத்தார். கடந்த 2015 இலும் இவ்வாறு இவர்கள் அழைத்து சென்றிருக்கின்றேன். அந்தப்பயணம் பற்றியும் முன்னர் பதிவுசெய்துள்ளேன்.

” மாணவர்களிடம், அதுவும் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களிடம் என்னதான் பேசுவது…?” என்ற ஆழ்ந்த யோசனையுடன் அன்று பேராதனைக்குப்பயணமாகி, பேராசிரியர்கள் சொன்னவாறு கலகா சந்தியில் இறங்கினேன். மகேஸ்வரன் அங்கு வந்து என்னை அழைத்துச்சென்றார். அங்கு நண்பர்கள் ஶ்ரீபிரசாந்தன், துரைமனோகரன் உட்பட சில விரிவுரையாளர்களுடன் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு மாணவர்களை சந்திக்கச்செல்லும்வேளையில் நுஃமானும் வந்து சேர்ந்தார்.

” தொடர்பாடலும் சமகால இலக்கிய அனுபவங்களும்” என்ற தலைப்பில் பேசவேண்டியிருந்தது. தமிழ்த்துறை மாணவர்கள் கணிசமாக வந்திருந்தார்கள். அவர்களிடம் புன்னகையும் ஆழ்ந்த மௌனமும்தான் காணப்பட்டது. அந்த மெளனத்தை கலைப்பதற்கு பெருமுயற்சி மேற்கொள்ளவேண்டியிருந்தது. எனது தலைப்பு அவ்வாறு அமைந்ததுதான் காரணமோ என்றும் யோசித்தேன். எனது வருகையை பற்றி குறிப்பிட்டுப்பேசிய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன், ” ஏற்கனவே இரண்டு தடவை அங்கு வந்து நான் உரையாற்றியிருப்பதை” நினைவுபடுத்தினார்.

Continue Reading →