பயணியின் பார்வையில் – அங்கம் 18: கிண்ணியா பளிங்கு கடற்கரையில் குவியும் தென்னிலங்கை மக்கள்! தம்பலகாமத்தில் குறிசொல்லும் பெண்களையும் மதம் மாற்றும் சமய அரசியல்!

எழுத்தாளர் முருகபூபதிமாத்தளையிலிருந்து புறப்பட்டு கண்டிவந்து, அங்கிருந்து நீர்கொழும்பு வந்து இறங்கியதும், நண்பர் நுஃமானுடன் தொடர்புகொண்டு சுகமாக வந்து சேர்ந்துவிட்டதாகச்சொன்னேன். அவர்தான் முதல்நாள் என்னை பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து கண்டி பஸ்நிலையத்திற்கு அழைத்துவந்தவர். துரைமனோகரனும் உடன் வந்து கண்டி பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அங்கிருந்து இரவு மாத்தளையில் உறவினர்களை பார்க்கச்சென்று, மறுநாள் அதிகாலை புறப்பட்டு, ஊர் திரும்பியதும் வழியனுப்பியவருக்கு சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நுஃமானைத்தொடர்புகொண்டதும், அவர் ” எங்கள் நாடு முன்னேறவில்லை என்று யார் சொன்னது…? நேற்றுக்காலை கொழும்பில் மாலையில் கண்டியில், மறுநாள் காலை நீர்கொழும்பில், ஆகா…. இலங்கையில் பொதுப்போக்குவரத்தின் வேகம் அசத்துகிறது” என்றார். அவர் சொல்வதும் உண்மைதான். அகலப்பாதைகளுடன் போதியளவு போக்குவரத்து வசதிகளும் இருப்பதனால் நாம் போகவேண்டிய ஊர்களுக்கு துரிதமாகச்செல்ல முடிகிறது.

நீர்கொழும்புக்கு வந்ததும், ” அடுத்து எங்கே அண்ணா..?” என்று தங்கை கேட்டாள்.

” இன்று இரவு திருகோணமலைக்கு” என்றேன்.

” ஊரெல்லாம் சுத்துகிறீர்கள். யார் யாரையெல்லாமோ சென்று பார்க்கிறீர்கள். எங்கள் ஊரில் குடியிருக்கும் தெய்வங்களையும் ஒரு எட்டில் வந்து பாருங்களேன்.” என்றாள் தங்கை.

” அவர்களுக்கு என்ன குறை….? எந்தக்குறைவுமின்றித்தானே திருவிழாக்கள் செய்கிறீர்கள். மேலும் மேலும் அவர்களுக்கு இருப்பிடங்கள் கட்டுகிறீர்கள்.” என்றேன்.

” இன்று எங்கள் பிள்ளையார் கோயிலில் வைகாசி விசாகம் பூசைக்கு சொல்லியிருக்கிறோம். அங்கிருக்கும் அண்ணனையும் தம்பியையும் பார்த்துவிட்டுப்போங்கள்”

ஒரு மாம்பழத்திற்காக சண்டை பிடித்த சகோதரர்களையும் தங்கையின் வேண்டுகோளினால் தரிசிக்கச்சென்றேன். அன்று இரவே திருகோணமலைக்கு புறப்படுவதற்காக கொழும்புக்குச்சென்றேன். திருகோணமலைக்கு முன்னரும் சில தடவைகள் சென்றிருந்தாலும், தம்பலகாமம் செல்லவேண்டும் என்ற எனது நெடுநாள் ஆசையை இந்தத்தடவை பயணத்தில் பூர்த்தி செய்வதற்கு விரும்பியிருந்தேன். எமது கல்வி நிதியத்தின் ஊடாக உதவிபெற்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு, தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராக பணியாற்றும் செல்வி நாகராணி மனோகரலிங்கம் தம்பலகாமத்தைச்சேர்ந்தவர். இந்தப்பயணத்தில் என்னை வந்து பார்த்தவர். வெள்ளப்பெருக்கு அநர்த்தத்தில் இவரது குடும்பமும் பெரிதும் பாதிப்புற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத் துணைவேந்தராக இருந்த காலப்பகுதியில் அவரால் தெரிவுசெய்யப்பட்ட பல மாணவர்களில் இவரும் ஒருவர். இம்மாணவர்களுக்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவியது. அவர்கள் அனைவரும் பட்டதாரிகளாகிவிட்டதுடன், தொழில் வாய்ப்புகளும் பெற்றனர். நான், இந்தத்தடவை திருகோணமலை, சம்பூர், தம்பலகாமம் முதலான பகுதிகளுக்கு செல்லவிருந்தமையால், செல்வி நாகராணியே தொடர்புகொண்டு கொழும்பிலிருந்து செல்லும் பஸ்ஸில் எனக்கு ஆசனம் பதிவுசெய்து தந்தார். வார விடுமுறையில் அவருக்கு ஓய்வு இருந்தமையால், என்னுடன் பயணித்தார். அவர் வெள்ளப்பெருக்கினால் மாத்திரம் பாதிப்புற்றவர் அல்ல. அவரது மூன்று சகோதரர்களும் நோய்வாய்ப்பட்டு குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். அவ்வாறு அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்த அவரது பெற்றோர்கள் தாம் நம்பியிருந்த கடவுளுக்கு நேர்த்தி வைத்து பிறந்தமையால் தனக்கு நாகராணி என்றபெயரை சூட்டியதாக அவர் சொன்னபொழுது நெகிழ்ந்துவிட்டேன்.

Continue Reading →