மௌனித்துவிட்ட கலகக்குரல்: கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்! கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி!

மௌனித்துவிட்ட கலகக்குரல்: கவிஞர் ஏ. இக்பால் ( 1938 - 2017 ) நினைவுகள்! கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி!நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள் சிலரை படைப்பாளியாக்கியிருக்கிறார்.

” நீ என்ன எழுதினாய்..? என்ன சாதித்தாய்..? என்று சொல்வதிலும் பார்க்க எத்தனைபேரை உருவாக்கினாய்..? என்பதில்தான் உனது ஆளுமை தங்கியிருக்கிறது” என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.

கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் இக்பால் கல்வி கற்ற காலத்தில், அங்கு கடமையாற்றிய ஆசிரியர்களான படைப்பாளிகள் எம்.வை.எம். முஸ்லிம், மற்றும் அ.ஸ.அப்துஸ்ஸம்மது ஆகியோரால் நன்கு இனங்காணப்பட்டு எழுத்துலகிற்கு அறிமுகப்படத்தப்பட்டவர். அங்கு “கலாவல்லி” என்ற கையெழுத்து இதழின் ஆசிரியராக இயங்கியிருக்கும் இக்பால், பிற்காலத்தில் தென்னிலங்கையில் தர்கா நகர் சாஹிராக்கல்லூரியில் ஆசிரியப்பணி ஏற்றதும் அங்கு படிப்பு வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி சில மாணவர்களை இனங்கண்டு எழுத்துலகத்திற்காக வளர்த்திருக்கிறார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், திக்குவல்லை கமால், தர்காநகர் ஸபா ஆகியோர்.
இந்தத்தகவல்களிலிருந்து எம்மவர் மத்தியில் நடந்திருக்கும் இலக்கியத் தொடர் அஞ்சல் ஓட்டத்தை அவதானிக்க முடியும்.

கிழக்கிலங்கை அக்கரைப்பற்றில் 1938 இல் பிறந்து தென்னிலங்கையில் தர்கா நகரில் 2017 இல் இறுதி மூச்சை விட்டவர்தான் கவிஞர் ஏ. இக்பால்.

எனது இனிய நண்பரும் ஆசிரியரும் கவிஞரும் ஆய்வாளரும் சமூகச்செயற்பாட்டாளரும் பன்முக ஆளுமைகள் கொண்டவருமான ஏ. இக்பால் அவர்கள் மறைந்தவுடன் கனடாவில் வதியும் நண்பர் வ.ந.கிரிதரன் நடத்தும் ‘பதிவுகள்’ இணையத்தில் தரப்பட்டிருந்த தகவலில் அவரது பிறந்த ஆண்டு தவறாக பதிவாகியிருந்ததை கண்டவுடன் தாமதமின்றி தொடர்புகொண்டு அதனை திருத்துமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதனைத்திருத்தினார். நாட்கள் கடந்த நிலையில் ஏ. இக்பால் அவர்களின் பிறந்த திகதி 11-02-1938 என்பதை நண்பர் மேமன்கவி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் (109 ஆவது இதழ்- ஐப்பசி 2017) பதிவுசெய்துள்ள அஞ்சலிக்குறிப்பில் காணமுடிகிறது. எனினும் ஏ. இக்பால் . 1953.12.11 ஆம் திகதிதான் பிறந்தவர் என்ற தவறான தகவல்தான் நூலகம் இணையத்தில் தற்போதும் இருக்கிறது. என்னைவிட மூத்தவரான ஏ. இக்பால் 1953 இல் எப்படி பிறந்திருப்பார் என்ற சந்தேகத்துடன்தான் அவரது மறைவு பற்றிய செய்தி ‘பதிவுக’ளில் வெளியானபோது கிரிதரனை தொடர்புகொண்டேன். எதிர்காலத்தில் எம்மத்தியில் வாழ்ந்த – வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஆளுமைகள் பற்றிய பதிவுகளை எழுதுபவர்களுக்காகவே இந்தச் சிறிய தகவலை தெரிவித்துவிட்டு, மறைந்த நண்பர் ஏ. இக்பாலுடனான எனது நட்புறவின் ரிஷிமூலத்திற்கு வருகின்றேன்.

Continue Reading →

நூல் அறிமுகம்: வலிகள் சுமந்த தேசம்’ கவிதை நூல் பற்றிய பார்வை

வலிகள் சுமந்த தேசம்' கவிதை நூல் பற்றிய பார்வைமீராமொஹிதீன் ஜமால்தீன்மீராமொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ”வலிகள் சுமந்த தேசம்” கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலில் மறக்க முடியவில்லை, தெளிந்து கொள், உங்களுக்கின்னும், ஏன் விடிகிறாய், அபாபீல்கள், கழுகுப் பார்வைக்குள் நீ, என்றும் நானே தலைவனாக, ஏமாளிகள், உடன் பிறப்பே, ஆத்மாக்களே, நிலை மாறுகின்றேன், எதை எதிர்பார்க்கிறாய், நாளைய அபாபீல்களாக, நிம்மதி ஏது?, நாளை முதல், எம்மிலக்கு, காத்திருக்கிறது, சொல்லிக் கொடு, வாடிக்கிடக்கிறது, நினைவிருக்கட்டும் எம்மை ஆகிய தலைப்புக்களில் 20 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலுக்கான முன்னுரையை தீரன் ஆர்.எம். நௌசாத் அவர்களும் பின்னட்டைக் குறிப்பை ஏறாவூர் தாஹிர் அவர்களும் வழங்கியுள்ளார்கள்.

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இவர் இலக்கியப் பணியாற்றி வந்தாலும் தனது கன்னிக் கவிதைத் தொகுதியை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்கா மூலமே வெளியீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மருதூர் ஜமால்தீன் ரமழான் ஸலவாத் (2010), கிழக்கின் பெரு வெள்ளக் காவியம் (2010), முஹம்மத் (ஸல்) புகழ் மாலை (2011), இஸ்லாமிய கீதங்கள் (2012), தாலாட்டு (2015), பத்ர் யுத்தம் (2016) ஆகிய நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

புதுக் கவிதை, மரபுக் கவிதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கவிதை எழுதுவதில் சமர்த்தரான இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, இஸ்லாமியப் பாடல்கள் போன்ற ஐநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்த மெட்டுக்கும் உடனடியாக பாடல் வரிகளை மிகவும் இலகுவாக எழுதும் ஆற்றல் கை வரப்பெற்ற இவர் தற்போது முகநூலிலும் பல்வேறு வலைத்தளங்களிலும் பல படைப்புக்களையும் அதிக ஈடுபாடுகாட்டி எழுதி வருகின்றார்.

Continue Reading →

சிந்தனை கிழிக்கும் பேனா!

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

வந்தனை செய்ய  வேண்டும்
அந்தமின்றியென்னை  எழுத  வைக்கும்
அந்தரங்கமேதும்   இல்லை   பகிரங்கம்.
அந்தரிப்போர்  யாருக்கும்  குரலெழுப்பும்.
இந்தளவு    என்றில்லையெவ்வளவும்   எழுத
சிந்தனை   கிழிக்கும்  பேனா.

உந்துதலீயும் பிறர்  கருத்துகள்.
எந்திர    வில்   போன்றது.
ஐந்தெழுத்துத்   தொடங்கி   ஆதரவு
கொந்தளிக்கும்  பிரச்சனைகள்   அரிய
சந்தக்  கவிகள்  என்று  எத்தனையோ..
சிந்தனை  கிழிக்கும்   பேனா.

Continue Reading →

முனைவர் ர.தாரணியின் கவித்துளிகள்!

1. காதல் குறுங்கவிதைகள் – எட்மண்ட் ஸ்பென்ஸர் | தமிழ் மொழியாக்கம்: முனைவர் ர.தாரணி

-  முனைவர் ஆர். தாரணி -அந்த கைதேர்ந்த வணிகர்கள் அருமந்தப்பொருடகளை நாடி
கடும் பிரயத்தனம் மேற்கொண்டு லாபமடைய
மேற்கிலிருந்து கிழக்கு வரை திசைகள் தோறும் திரிந்து
அலைந்து பொக்கிஷங்களத் திரட்ட அலைகிறார்கள்.
பாவம் பித்தர்கள்! அவசியமா என்ன
அத்துணை தொலைவு பயனற்ற தேடலுக்கு?
இதோ! என் மனத்தின் இனியவள் கொண்டுள்ளாள் தன்னகத்தே
தேசாதிதேசங்களில் தேடியும் கிடையா திரவியங்கள் அனைத்தும்.
நீலக்கண் மாணிக்கம், இதோ!
அவளின் அந்திரக்கண்மணி ஒளிக்கற்றைகள்
அவற்றை அற்பமாக்கிவிடும்.
ரத்த நிற கெம்பு ரூபி வேண்டுமோ, இதோ!
தகதகக்கும் அவளின் சிவந்த இதழ்கள்
செம்மணியைத்தோற்கடிக்குமோ?
நிர்மலமான சரவரிசையில் மிளிர்ந்து ஒளிரும்
அவளின் பல்வரிசை முன்நிற்கும்.
தந்தங்கள் தேவையோ? தந்தமே தலைவணங்கும்
அவளின் தங்க நிற நுதல் கண்களைக் கவரும்
பூவுலகின் மேல் இருக்கும் கலப்பற்ற தங்கம் தேவையெனில்,
நேர்த்தியான அவளின் தங்கக்குழல்கற்றைகள் சரிந்து விழும் அழகு
காணீர்!
வெள்ளி தேவையெனில் அவளின் வெளுத்த மினுமினுக்கும்
வாழைத்தண்டுக் கரங்கள் வெளியிடும் பளீர் ஒளியைக்கண்டு
களிக்கலாம்.
ஆயினும்,
அனைத்திலும் மேன்மையானது அனைவரும் அறிய இயலா,
எண்ணிறந்த இன்னலப்பண்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அவள்
அகம்.

Continue Reading →

ஒவ்வொருவர் மறுபக்கம்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -பஸ் வந்து நின்றது. இந்த பஸ்ஸில் ஏறுவதா விடுவதா என்பதுதான் இவரது பிரச்சினை. இது இவர் போகவேண்டிய பஸ்தான். ஆமர்வீதிச் சந்தியிலிருந்து தெகிவளை வரை போகவேண்டும். அதற்கான சில பஸ்கள் ஏற்கனவே வந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போய்விட்டன. இவர் எதிலும் ஏறவில்லை. பஸ்ஸில் நெருக்கடிகூட இல்லை. இவர் குழம்பிப் போய் நின்றார். இப்போது வந்து நிற்கிற இந்த பஸ்ஸில் ஏறுவதா வேண்டாமா?

சனிக்கிழமையாதலால் மதியம் ஒருமணியுடன் வேலை நேரம் முடிந்து விட்டது. பசி வயிற்றைப் பிடுங்கியது. ஏனைய நாட்களில் மனைவி அதிகாலையிலேயே சமைத்து ஸ்கூலுக்குப் போகும் பிள்ளைகளுக்கும் கொடுத்து> இவருக்கும் சாப்பாட்டுப் பார்சலைத் தந்துவிடுவாள். சனிக்கிழமைகளில் அதிகாலைச் சமையலுக்கு ஓய்வு. வீட்டுக்குப் போய்ச் சேர இரண்டு இரண்டரைக்கு மேலாகிவிடும். அங்கு இங்கு என்று நிற்காமல் விறு விறுவென பஸ் நிறுத்;தம்வரை நடந்தார்.

வெயில் தலையைச் சுட்டெரித்தது. இவருக்குத் தலைமுடி குறைவு. தலையைத் தொட்டு தடவிக்கொண்டு நடந்து வந்தார். தெரிந்தவர்கள் ஓரிருவர் தென்பட்டாலும் நிற்காது அவர்களுக்கு ஒரு முகஸ்துதிச் சிரிப்பை மட்டும் காட்டிக்கொண்டு வந்தார். இந்தவிதமான சிரிப்பு அவரிடம் எப்போதும் ரெடியாக இருக்கும்.

எல்லோருக்கும் அவசரம். தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ யாராயிருந்தாலும் வீதியின் இரு மருங்கும் ஏதோ ஒரு வேகத்தில் போய்க்கொண்டேயிருந்தார்கள். வாகனங்கள் என்றால் அதைவிட மோசம். அவை யாரையும் பொருட்படுத்தாமல் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக ஓடிக் கொண்டிருந்தன. அவர்கள் அவற்றையும் பொருட்படுத்தாமல் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வீதிக்குக் குறுக்காகப் போகிறார்கள். என்ன அவசரமென்றாலும் இவர் மஞ்சள் கோடு போட்டிருக்கும் இடத்தில் நின்று பார்த்து வாகனங்களற்ற வேளையிற்தான் வீதியைக் கடந்து மறுபக்கம் போவார். அப்படி எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுள்ள மனுசன்தான் இவர். இன்றைக்கு ஏன் இப்படி…?

பஸ் நிறுத்தத்துக்கு வந்து பேஸைக் கையிலெடுத்தபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. என்ன தேவையேற்பட்டாலும் பஸ்ஸிற்குரிய காசை வேறாக வைத்திருப்பார். இன்று அந்த வழக்கம் தவறிவிட்டது. பேஸில் பத்து ரூபா மட்டும் இருந்தது. தெகிவளைவரை போவதற்கு இது போதாது.

இந்த நிலைமைக்கு அந்தப் பெண்தான் காரணமோ?

Continue Reading →

பிரதிலிபியின் அடுத்த போட்டி – ஊர் சுற்றிப் புராணம்

பிரதிலிபியின் அடுத்த போட்டி - ஊர் சுற்றிப் புராணம்பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.

நம் வாழ்வியலில் ஏதேனும் ஒரு விதத்தில் பயணம் கலந்தே இருக்கிறது. அது நம் குடும்பத்தோடு கிளம்பி கோவிலுக்குச் செல்வதிலிருந்து, சொந்த பந்தங்களோடு சுற்றுலா செல்வது, பள்ளி – கல்லூரி சுற்றுலாக்கள், நண்பர்களோடான பயணம், நம் முன்னோர்களின் சுவடுகளை தேடிச் செல்லும் வரலாற்றுப் பயணங்கள், சுயத்தை கண்டடையச் செல்லும் தனிப்பயணங்கள், இலக்கற்றுப் கிளம்பிப் பயணிக்கும் பயணங்கள் என நீண்ட பட்டியல் கொண்டது.

உங்கள் பயண அனுபவங்களை, அதில் சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள் என பயணமும் பயணம் சார்ந்த குறிப்புகளை – அனுபவங்களை எழுத வைப்பதே இந்தப் போட்டியின் நோக்கம்.

போட்டிக்கு கட்டுரைகள் மட்டுமே அனுப்பலாம்.

ஒருவர் அதிகபட்சம் 3 கட்டுரைகள் வரை அனுப்ப முடியும்.

மொத்தம் நான்கு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இரண்டு, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு – 1000, இரண்டாவது பரிசு – 500). மற்ற இரண்டு எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு – 1000, இரண்டாவது பரிசு – 500)

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – tamil@pratilipi.com

மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “ஊர் சுற்றிப் புராணம்” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.

படைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதி அனுப்பவும். அதிகப் பிழைகள் இருந்தால் படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.

Continue Reading →

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூல்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள 'ஓவியம் 1000' ஓவியப் பெருநூல்.

உலகெலாம் வாழும் ஈழத்தமிழர்களின் ஓவியம் வரையும் ஆற்றலை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின் ஆயிரம் ஓவியங்களை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும்  தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இணைந்ததாக ‘ஓவியம் 1000’ எனும் ஓவியப் பெருநூல்  வெளிவர ஏற்பாடாகியுள்ளது. ஏற்கனவே 32 நடுகளின் 1098 கவிஞர்களை உள்ளடக்கிய ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலின் வெளியீட்டினைத் தொடர்ந்தே இப்பணியும் முன்னெடுக்கப்படுகின்றது.  ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக அனைத்து நாடுகளிலும் பணி மேம்படுத்துநர்களும், ஓவியச் சேகரிப்பாளர்களும் இயங்குவர். ஓவியப் பெருநூலின்   வெளியீட்டு விழாவானது பணி முன்னெடுப்புக் குழுமத்தினரால்   தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.

‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூலிற்கான ஓவியங்கள் கீழ்வரும் முறைமைகளுக்கு ஒப்ப சேகரிக்கப்படும்.

Continue Reading →

ஆய்வு: கற்றல் கற்பித்தலில் செயற்கை அறிவின் எதிர்காலம் (The Future of artificial intelligence in learning )

முனைவர் துரை.மணிகண்டன், தலைவர் தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9முன்னுரை
கல்வி என்பது மனிதனை மனிதனாக்க உருவாக்கப்பட்ட ஒரு அறிவு திறவுகோல் என்பதாகும். இன்றைய கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. கற்றலின் கோட்பாடுகளில் ஆதிகாலத்தில் குருகுலக் கல்வி செயல்பட்டது. அடுத்துத் திண்ணைப் பள்ளிக்கூடம் முறை கையாளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடக் கல்வி படிப்படியாக வளர்ந்து இன்று விஞ்ஞானக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி என நீண்டு சமையல் கல்வி, ஏன் கொத்தனார் கல்வி, சித்தாள் கல்வி என இது வளரும். பயன்பாட்டு கல்வியின் தேவை இன்று இந்திய அளவிலும், உலக அளவிலும் செயல்பட்டுக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. கல்வியின் நோக்கம் மனிதச் சமூகத்தை ஒழுங்கான பார்வைக்கும், பாதைக்கும் அழைத்துச் செல்லவேண்டும் என்பதே ஆகும்.

செயற்கை அறிவு
தான் கற்றுக்கொண்ட விஷயங்களை எந்திரத்துக்கு, ஒரு கம்ப்யூட்டருக்குக் கற்றுக் கொடுத்துத் தன்னைப் போலப் புத்திசாலித்தனம் நிறைந்ததாக அதை மாற்ற மனிதன் முயற்சி செய்கிறான். இது தான் ‘செயற்கை அறிவு’ திட்டத்தின் விளக்கம் என்கிறோம்.

இயற்கையாக நம் மூளையின் செயல்பாடுகளை ஒரு இயந்திரப் பொறிக்குக் கற்றுக்கொடுத்து அதை இயற்கையாகச் செயல்படுத்த வைக்கும் முயற்சியே செயற்கை அறிவாகும். இஃது இன்றைய கணிப்பொறியின் வளர்ச்சியால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மாற்றம்.

செயற்கை அறிவின் பல்துறைப் பயன்பாடுகள்
செயற்கை அறிவின் ஆராய்ச்சியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணிதமேதை ஆலன் டூரிங் (Alan Turing) அதிகமாக ஈடுபட்டவர். இவர் 1947 ம் ஆண்டு இது தொடர்பாகப் பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். கணினி நிராலாக்கம் மூலம் செயற்கை அறிவு கொண்ட எந்திரங்களை உருவாக்க முடியும் என்று ஆலன் டூரிங் நம்பினார். அவரது கருத்துக்களை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மனிதனின் எண்ணச் செயல்களில் பிரதிபிம்பம் மற்றும் மனிதனால் படைக்கப்பட்ட (மனித அறிவு கொண்ட) எந்திரம்தான் “செயற்கை அறிவு” எதை வேண்டுமானாலும் கற்றறியும் திறன், காரணங்களை அறியும் திறன், மொழிகளைக் கையாளும் திறன் மற்றும் தன் எண்ணங்களைத் தானே ஒழுங்குபடுத்தும் திறன் போன்ற திறமைகளைக் கொண்டதுதான் ‘செயற்கை அறிவு’ ஆகும்.

Continue Reading →

எழுத்தாளர் அகஸ்தியர் நினைவுச்சிறுகதை (நினைவு தினம் – டிசம்பர் 08) : பிறழ்வு

எழுத்தாளர் அகஸ்தியர்அதிகாரத்துவம் கல்வித் தரத்தை ஒரே மட்டத்தில் அமைத்தபோது. அதன் ‘தரப்புள்ளி’களில் ‘குல்லா’  மாட்டி. ‘இனப்பாகுபாடு’ வைத்த,  தமிழ் மாணவர் சிரங்களையே கொய்கின்ற ‘தரப்படுத்தல்’ வாளை  வீசியபோது, அது தன் இனத்துக்கு விட்ட சவாலெனக் கருதி, இவன்போல் சக மாணவ உலகமே கெம்பியது.

மேசை கொள்ளாமல் சிதறுண்டு கிடக்கிற புத்தகங்கள் – கொப்பிகள் – நோட்ஸ் தாள்களை ஒழுங்கு பண்ணி அழகாக வரிசைப் படுத்தவும் அவன் மனசு ஏவுகிறதில்லை – நேரமில்லை.

ஒரே கரிசனையோடு வாசிப்பு.

புத்தகம் விரித்தால், ‘போல்ட்பென்’ எடுத்தால் அததிலேயே ஆழ்ந்துவிடுகிற போக்கு.

‘எலாம்’ வைத்த மணிக்கூடு ‘கிணிங்’கிட்டால் புரைகிற தேகம் எப்பன் சிலும்பும். நிலை குலைந்து தலை நிமிர்த்தும்போது மணிக்கூட்டை நுணாவின கண்கள் சாடையாக அறையை மேயும்.

சுருட்டி மூலைப்பாடத்தே கிடக்கிற பாய் கும்பகர்ணனை நினைவு படுத்தி வெருட்டும் – அசையான்.

அத்தோடு நேர சூசிப்படி அடுத்த கொப்பி – புத்தகம் எடுபடும் -விரிபடும்.

எரிகிற விளக்கு அணைகிற சாயல் மண்டி வருகிற இருளாக உணர்த்துகிறபோதுதான், அம்மா, லாம்புக்கு எண்ணெய் விட்டுக் கொளுத்தித் தாங்கோ என்ற குரல் கீறலாகக் கமறி வரும்.

படிக்கவென்று குந்தினால் ஒரே இருக்கை – கதிரை புண்டுவிட்டது. அதன் கவனிப்பும் இல்லை. பிரப்ப நார் பிய்ந்து சிலும்பாகிக் குழிபாவிய  நிலையிலும் குறாவி இருந்து ஒரே வாசிப்பு – வைராக்கியத்தோடு.

முழு விஸ்வாசத்தோடு  தன்னை மாய்த்து என்னைப் படிப்பிக்கிற அம்மாவுக்கு – பெண் பிறவிகளுக்கு நான்தான் ஒரு ஆறுதல்’.

எப்பவும் அவன் மனசில் ஒரு குடைவு.

மைந்தன் படிப்பில் மூழ்குகிற கோலத்தை,  அவள் – தாயானவள், கதவை நீக்கிவிட்டு வயிறு குதற – நெஞ்சு புரைய,  ஒரு தவிப்போடு கண்ணூனிப் பார்ப்பான்.

அவளை மீறி எழும் பெரும்மூச்சு இதயத்துள் கழித்து அடங்கும். சிலவேளை கொட்டாவியோடு கண்ணீர் சிதறும்.

அவள் இடையறாது சொல்லிக்கொள்வாள்.

மூண்டு பெண் குஞ்சுக்க இது ஒரு ஆண் தவ்வல். அஞ்செழுத்தும் தேப்பன்தான். மேலைக்கு நல்லாப் படிச்சு ஒரு ‘ஆளா வந்திட்டுதெண்டா – இதை ஒரு ‘ஆளாக்கி’ப்போட்டனெண்டா, நிம்மதியாக கண்மூடியிடுவன்.

ஆதங்கம் அந்தரிப்பாக அவள் நெஞ்சு குதிக்கும்.

எந்த நேரமும் – நெடுக, நெடுக இப்படித்தான்.

‘இந்த முறை கட்டாயம் ‘கம்பசு’க்கு எடுபடுவன்’ என்ற திட மனம் அவன் நெஞ்சில் வஜ்ஜிரம் பாய்ச்சியிருக்கிறது.

Continue Reading →