‘ இத்தாலியின் பலர்மோ நகரில் வாழ்கின்ற செல்விகள் செந்தூரன் சந்தியா, அன்ரன் ரோமன் பிரிஸ்ரிக்கா, ஜெயக்குமார் பிரவீனா, அமலராசா அஸ்வின், சிறிகரன் ஸ்ரெவானியா ஆகியோரின் பரதநாட்டிய அரங்க நிகழ்வு ஒரே மேடையில் இடம்பெறுவது பெரும் மகிழ்வைத் தருகின்றது. சிறந்த குருவான ‘நர்த்தன கலாபவன நடனப்பள்ளி’யின் அதிபரான ஸ்ரீமதி லோஜினி திஷரூபனின் பெருமுயற்சியும்; அரங்க நர்த்தகிகளின்;; பெற்றோர்களின் ஒற்றுமையான செயற்பாடுகளுமே இத்தகைய ஒருங்கிணைந்த வெற்றிக்குக் காரணம். நடன நங்கைகளை டிப்ளோமாவரை பயிற்சியளித்து அரங்கேற்றி அந்த மேடையிலேயே பட்டம்பெற வைப்பது என்பது இலகுவான செயலன்று. யாழ்பல்கலைக்கழகத்தில் நாட்டியத்தில் பட்டம் பெற்ற நாட்டியக் கலைமாமணி லோஜினி திஷரூபன் பதினான்கு வருடங்களுக்கு மேலாக பலர்மோவில் நடனப்பள்ளியை நடாத்திய நீண்ட அனுபவமும் பரதக் கலையை வளர்ப்பதில் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் இவை எடுத்துக் காட்டுகின்றது’ என்று பலர்மோ நகரில் உள்ள மிகப் பெரும் அரங்கில் இடம்பெற்ற பரதநாட்டிய அரங்க – பட்டமளிப்பு நிகழ்வில், லண்டனில் இருந்து பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த லண்டன் கீழைத்தேய பரீட்சை நிறுவனத்தின் தலைவி ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் குறிப்பிட்டார்.
அன்புள்ள அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்க உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வணக்கம். எமது சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 08-04-2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் கவிதா மண்டலம் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளோம். நடைபெறும் இடம் கிளேய்ட்டன் பொது நூலகம் (Clayton Community Centre Library Meeting Room – 9-15, Cooke Street , Clayton, Victoria – 3168 ) . சங்கத்தின் உறுப்பினர்களான கவிஞர்களும் மெல்பனில் வதியும் இதர கவிஞர்களும் பங்குபற்றலாம். கலந்துகொள்ள விரும்பும் கவிஞர்கள், தமது கவிதையை அல்லது தமக்குப்பிடித்தமான கவிதையை இந்நிகழ்ச்சியில் சமர்ப்பித்து கலந்துரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தங்கள் கவிதையை 5 முதல் 7 நிமிடத்திற்குள் சமர்ப்பிக்கலாம். தங்கள் வருகையை தாமதமின்றி உறுதிப்படுத்தவும். நன்றி.
அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அம்மா எழுந்து விடுவா எவ்வித அலாரமும் இல்லாமல். குருமண்காட்டுப் பிரதேசத்தித்தின் சேவல்கள் ஆங்காங்கே தம் காலைக்கச்சேரிப் போட்டியினை ஆரம்பித்துவிடும் கூவல் ஒலிகள் தவிரப் பெரிதாக வேறெவ்வித ஒலிகளுமற்ற காலைப்பொழுதில் அம்மா அந்த அதிகாலை நேரத்தில் எழுந்து விடுவதற்குக் காரணமுண்டு. குழந்தைகள் நாம் ஐவர். வவுனியா மகாவித்தியாலயத்துக்கு நடந்து செல்ல வேண்டும். அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் படிப்பித்துக்கொண்டிருந்தார். ‘நவரத்தினம் டீச்சர்’ என்றால் தெரியும். அனைவருக்கும் காலை, மதிய உணவு தயாரித்து, அவற்றை உணவுக்`கேரியரி`ல் அல்லது வாழை இலையில் பார்சல்களாகக் கட்டி, பாடசாலை தொடங்குவதற்குள் அனைவரையும் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் ‘றோட்டி’ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு. அவரது கணவர் சட்டத்தரணி. மகன் இறம்பைக்குளக் ‘கான்வென்’டில் படித்துக்கொண்டிருந்தார். அவர்களை இறக்கிவிட்டு அனைவரும் மகா வித்தியாலயம் செல்வோம்.
அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் ‘றோட்டின்’ ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.
இன்று (மார்ச் 26) அம்மாவின் நினைவுகள் அதிகமாக எழுகின்றன. அவருடன் வாழ்ந்த இனிய பொழுதுகள் நினைவிலெழுகின்றன. இனிமையான பொழுதுகள் அவை. காரணமுண்டு: இன்று அம்மாவின் நினைவு நாள். இருப்புள்ளவரை இருக்கப்போகும் நினைவுகள். காலம் மாறி விட்டது. காட்சிகள் மாறி விட்டன. ஆனால் நினைவுகள் மாறுவதில்லை. நிலையாக இருந்து விடுகின்றன. நினைவுகளின் தோய்தல்கள் மானுடப்பிறப்புக்கு இன்பம் சேர்க்கின்றன. அம்மா பற்றிய நினைவுகளும் அவ்விதமான நினைவுகள். இருப்புக்கு இன்பம் சேர்க்கும் நினைவுகள்.
– சுயவசியம் பற்றி அ.ந.க.வின் இந்நூலைப் படிப்பதற்கு முன்னர் எனக்குத் தவறானதொரு எண்ணமிருந்தது. அது தவறானது. தவறான செயல்களுக்குப் பயன்படுவது. இவ்விதமான தவறான எண்ணங்களைக் கொண்டிருந்த எனக்கு அ.ந.க.வின் சுயவசியம் பற்றிய இந்த அத்தியாயம் சுயவசியம் என்றால் என்ன? அது பற்றிய உளவியல் அறிஞரும் , மருத்துவருமான எமில் கூ அவர்களின் கருத்துகள் எவை போன்ற விடங்களையெல்லாம் மிகவும் தர்க்கரீதியாக அறியத்தந்த அத்தியாயம் இந்த அத்தியாயம். இந்த அத்தியாயத்தைப்படித்ததுமே எனக்கு முதன் முதலில் சுயவசியம் என்னும் இத்தத்துவத்தை எவ்விதம் மானுடராகிய நாம் எம் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயனுள்ள வகையில் பாவிக்க முடியும் ? என்னும் விளக்கம் ஏற்ப்ட்டது. எவ்விதம் விளம்பரதாரர்கள், உணர்ச்சி வெறியினைத்தூண்டு சுய இலாபம் அடையும் அரசியல்வாதிகள், மத போதர்கள் மற்றும் முனிவர்கள் எல்லாரும் பாவிக்கின்றார்கள் என்பது பற்றிய அறிவு பூர்வமான புரிதல் ஏற்பட்டது. மானுடர் ஒருவர் எவ்விதம் சுயவசியம் என்னும் இக்கோட்பாட்டினை மிகவும் இலகுவாகக் காதல், கல்வி போன்ற விடயங்களுக்கெல்லாம் ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த முடியுமென்றெல்லாம் பற்றிய அறிவினை இந்த அத்தியாயம் புரிய வைத்தது.
இவ்விதமாக மிகவும் ஆரோக்கியமான சுயவசியமென்னும் இக்கோட்பாட்டினை எவ்விதம் பாவிக்கலாம்? அதற்குரிய விதிகளெவை? போன்ற விடயங்களையெல்லாம் மிகவும் எளிய, துள்ளு தமிழ் நடையில் அ.ந.க விபரித்திருக்கின்றார் அ.ந,க. இத்தத்துவத்தை அ.ந.க விளங்கப்படுத்தும் மொழி நடையே வாசிக்கும்போது ஒருவருக்கு இன்பத்தைத் தந்து விடுகின்றது. அவர் கூறுவதை இலகுவாக, தர்க்கரீதியாகப் புரிய வைத்து விடுகின்றது. தமிழில் மிகவும் எளிமையுடன் கூடிய ஆழத்துடன் சுயவசியம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரையாக அ.ந.க.வின் சுய வசியம் பற்றிய இக்கட்டுரையினைக் கூறுவதில் எனக்குத் தயக்கமேதுமில்லை. வாசித்துப் பயனடையுங்கள் நண்பர்களே! – வ.ந.கிரிதரன் –
சுயவசியம் செய்வதெப்படி?
நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும்
முன்னேறி முன்னேறி வருகிறேன் நானே?
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எமில் கூ வகுத்துத் தந்த மந்திரம்தான் மேற்கண்ட வசனம். இந்த வசனம் சோர்வைப் போக்கிச் சுறுசுறுப்பை அளிக்கும். நம்பிக்கையின்மையை ஒழித்துத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். பயத்தை ஒழித்து வீரத்தைத் தரும். மனக் குழப்பத்துக்குப் பதில் மன அமைதியை வளரச் செய்யும். தோல்விக்குப் பதில் வெற்றியையும், வெட்கத்துக்குப் பதில் ஆண்மையையும், வறுமைக்குப் பதில் செல்வத்தையும், நோய்க்குப் பதில் தேகாரோக்கியத்தையும், திறமை இன்மைக்குப் பதில் திறமையையும், அழகின்மைக்குப் பதில் அழகையும் தரும். ஆம், வாழ்க்கையில் ஒரு மனிதன் அடைய விரும்பும் எல்லாவற்றையும் தரவல்ல அதியற்புத மந்திரம் இது என்று சொன்னுல் அது மிகையாகாது. பகவான் புத்தர் “தம்ம பத’த்தில் பின்வருமாறு கூறினர்:-
“நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ அந் நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.”
ஆகவே சரியான எண்ணங்கள் நமக்கு நல்ல வாழ்க்கையைத் தரும். பிழையான எண்ணங்கள் அதற்கேற்ற பலன்களையே தரும். “நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும் முன்னேறி முன்னேறி வருகிறேன் நானே? “என்ற வார்த்தைகளில் நாம் காண்பதென்ன? சுபிட்ச மான எதிர்காலத்தை நோக்கி என்னால் முன்னேற முடியும், முன்னேறிக் கொண்டிருக்கிறேன் என்ற தன்னம்பிக்கை அந்த வசனத்தை முற்றிலும் ஊடுருவி நிற்பதை நாம் காண்கிறோம். இதைத் திரும்பத் திரும்பச் சொல்பவன் மனதில் தன்னம்பிக்கை நிறைந்த அந்த எண்ணம் சிலை மேலெழுதிய எழுத்துப்போல் பதித்து விடுகிறது. பின்னர் அந்த எண்ணம் புத்தர் சொல்லியுள்ளதுபோல எம் வாழ்க்கையையே உருவாக்கி விடுகிறது.
சுயவசியம் செய்வதென்பது ஆக்கபூர்வமான கருத்துகளை எமது உள்மனதில் விதைப்பதுதான். இதற்கு நாம் அனுஷ்டிக்கும் முறை பழைய காலத்தில் மந்திரங்களை உச்சாடனம் செய்து மந்திர சக்தி பெற நமது முன்னேர்கள் அனுஷ்டித்த அதே முறையாகும். ஜபம், தவம், என்பனவே அவை, திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்-ஆயிரம் முறை, இரண்டாயிரம் முறை ஒரு மந்திரத்தை ஜபிப்பதன் மூலம் ஒரு குறித்த தெய்வத்தின் அருளைப் பெற்று மந்திர சக்திகளைத் தம் வசமாக்கிக் கொள்ள முடியும் என்று அக் காலத்தில் நம்பப்பட்டது. இவ்விதமாக மேற்கொள்ளப்படும் முயற்சிக்கே தவம் என்று பெயர். இவ்வித மந்திரோச்சாடனத்தையே உருவேற்றுதல் என்ற வார்த்தை யாலும் அழைத்தார்கள். ‘ எமில்கூவின் வசிய முறையும் உருவேற்றுதலை அடிப்படையாகக் கொண்டதுதான்.
“நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும்
முன்னேறி முன்னேறி வருகிறேன் நானே?”
இதுவே மந்திரம். இதை உச்சாடனம் செய். முழு நம்பிக்கையுடன், உணர்ச்சியோடு, உள்மனதில் அது இறங்கத்தக்க முறையில் உச்சாடனம் செய். அது உன் வாழ்க் கையை மாற்றும். சகல விதத்திலும் படிப்படியாக மலர்ந்து மணம் வீசும் நல்வாழ்வை நீ பெறுவாய் என்கிறார் கூ.
இந்நூலில் சுயவசியம், சுயமந்திரம் என்ற வார்த்தைகளை நான் Auto Suggestion என்ற சொல்லுக்காக இதுவரை உபயோகித்து வந்திருக்கிறேன். ஆயினும் உண்மையில் Suggestion என்ற வார்த்தைக்குச் சொல்லிக் கொடுத்தல், அதுவும் அதிக அழுத்தமின்றிச் சொல்லிக் கொடுத்தல், அதுவும் அதிக அழுத்தமின்றி இலேசான முறையில் சொல்”லிக் கொடுத்தல் என்றுதான் பொருள். குறிப்பாயுணர்த்தி ஏற்கும்படி செய்தல். காரண காரியங்களைத் தர்க்கரீதியாகக் காட்டிக்கொண்டு நிற்காமல் உணர்ச்சிமயமான ஒரு நிலையில், நனவு மனம் தன் சக்தியை ஒரளவு அல்லது முற்றாக இழந்து ஒரு கனவு நிலையில் சஞ்சரிக்கும் நிலையில் “ஒரு கருத்தை எடுத்துச் சொல்லி ஏற்கச் செய்தல் என்பது தான் Suggestion என்ற வார்த்தையின் பொருள். இதை இவ்வாறு இங்கு விபரமாகக் கூறவேண்டியிருப்பதற்குக் காரணம் தமிழ் மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உள்ள காரணம். தமிழ் மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உள்ள சொல் வேற்றுமைகளேயாகும். ஒருமொழியிலுள்ள கருத்தை இன்னேர் மொழியில் எடுத்துக் சொல்ல முயலும்போது சில சமயங்களில் இவ்வித இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. உதாரணமாகத் தமிழில் ஊடல் என்ற வார்த்தை இருக்கிறதல்லவா? இதை ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லச் சரியான வார்த்தைகள் இல்லாததால் Love Quarrel, Temporary Variance என்ற வார்த்தைகளைத் திருக்குறளை மொழி பெயர்த்த ஜி. யு போப் போன்றவர்கள் உபயோகித்திருக்கிருர்கள். Suggestion என்ற ஆங்கில வார்த்தை இத்தகைய ஒரு இடர்ப்பாட்டையே தமிழில் ஏற்படுத்துகிறது. ஒரு சில அறிஞர் கருத்தேற்றம் என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனராயினும், Suggestion என்ற ஆங்கில வார்த்தைக்கு நான் கொடுத்திருக்கும் விளக்கத்திலுள்ள பொருளின் முழுமையில் ஒரு பங்கு தானும் அதில் இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் ஒருவர் உணர்ச்சி வசமாகி மயங்கி இருக்கும். நிலையில் அவர் மனதில் கருத்துகளை ஏற்றுதல் இலகுவான காரியம் என்பது தமிழ் மக்கள் அறிந்திருந்த ஒன்று தான். உதாரணமாக பஞ்சணை மெத்தையில் தன் மனைவி யோடு கொஞ்சிக் குலாவியிருக்கும் கணவன் அன்புக்கும், இன்பத்துக்கும் அடிமையாகிவிட்ட ஒருவன், அவ்வேளையில் அவன் மனம் தேனுண்ட வண்டுபோல் மயங்கிக் கிடக்கிறது. சாதுரியமான பெண் இச்சூழ்நிலையை நன்கு உபயோகித்துத் தனக்கு வேண்டிய விஷயங்களை எல்லாம் அவனை ஏற்றுக் கொள்ளும்படி செய்து விடுகிறாள். இதனைத் தான் “தலையணை மந்திரம்’ என்ற வார்த்தையில் நாம் குறிக்கிறோம். அதாவது படுக்கை அறையில் கணவனின் மயக்க நிலையை உபயோகித்து அவனுக்குப் போதிக்கப்படும். புத்திமதிகள் இவ்வார்த்தையால் குறிக்கப்படுகின்றன.
பாணர் குறித்த செய்திகள் சங்கப் பாக்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன. இப்பாணர் மூன்று வகையினர் என்று கூறிய அறிஞர் பெருமக்கள், மண்டைப்பாணர் என்றொரு வகையையும் கூறியுள்ளனர். பாணர் மரபில் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனரா? மண்டை என்பது பாணர்க்கு மட்டும் உரிய ஒன்றா? மண்டை என்பது யாழ்க்கருவி போல் இசைக்கருவியா? மண்டைப்பாணர் என ஏன் அழைக்கின்றனர்? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. எனவே, ‘மண்டைப் பாணர் என்றொரு வகையினர் சங்கக் காலத்தில் இருந்தனரா?’ என்னும் சிக்கலை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
மண்டை என்பது என்ன?
மண்டை என்பது சங்கக்கால இரவலர்கள் உணவு பெற்று உண்பதற்காக வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்னரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்து பாடி முடித்த பின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ளனர். அரண்மனைக்காரர்களும் அம்மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவலர்களின் உண்கலமாக இருந்துள்ளது எனப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறியுள்ளன. இதனைப் பின்வரும் தலைப்பின் கீழ் காணலாம்.
புறநானூற்றில் மண்டை இடம்பெறும் சூழல்
புறநானூற்றுப் பாக்கள் பல செய்திகளை எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் மண்டை என்பதைக் குறித்து சில பாடல்கள் கூறியுள்ளன. அவற்றினை இப்பகுதியில் எடுத்துக்காட்டி ஆராயப்பட்டுள்ளன. விறலியை ஆற்றுப்படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கி காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமான்ஞ்சி உள்ளான். அவன்பால் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார். இதனை,
“ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரன்முத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே” -புறம்.103
– முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான “முல்லை நிலமும் நந்திக்கடலும்” எனும் நூல் வெளியீடு! | இடம்: செல்லமுத்து பதிப்பகம் | காலம்: மார்ச் 25, 2018 பிற்பகம் 3 மணி –
முல்லை மண் பெற்றெடுத்த முத்துக்களில் ஒன்றாக அண்ணன் முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான “முல்லை நிலமும் நந்திக்கடலும்” எனும் நூலானது 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலை கொஞ்சும் வல்லை கரையோரம் செல்லமுத்து வெளியீட்டகத்தின் குழந்தையாக பிரசவிக்க இருக்கிறது. கவிக்காதலர்களை அழைப்பதில் செல்லமுத்து வெளியீட்டகத்துடன் அண்ணனுடன் தம்பியாக பெருமைகொள்கிறேன்.
ஊனநிலை வந்தாலும் ஊக்கமதை இழந்திடாமல்
தானெடுத்த முயற்சிதனில் சாதனையைப் படைத்துநின்ற
இங்கிலாந்தின் விஞ்ஞானி இணையில்லா ஸ்டீபன்தனை
எல்லோரும் வியந்துநின்று இதயத்தால் வாழ்த்துகிறார் !
பேசாத நிலையினிலும் பெருங்கருத்தை வெளியிட்டார்
பேராசிரியாய் இருந்து பெரும்பொறுப்பை நிருவகித்தார்
பெருங்குறைகள் தனக்கிருந்தும் பேதலிக்கா மனமுடனே
பேரண்டம் தனையாய்ந்து பெருமைதனைப் பெற்றுநின்றார் !
அறிஞர் அ.ந.கந்தசாமியின் முதலாவது சிறுகதையினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எழுத்தாளர் செங்கை ஆழியான் தொகுத்து பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு – கிழக்கு மாகாணம், திருகோணமலை) வெளியிட்டிருந்த ‘ஈழகேசரிச் சிறுகதைகள்’ தொகுப்பு நூல் உள்ளடக்கியுள்ள ‘குருட்டு வாழ்க்கை’ என்னும் சிறுகதைதான் அது. 17.5.1942 ஈழகேசரிப்பிரதியில் வெளியான சிறுகதை இது. இதனை எழுதியபோது அ.ந.க.வுக்கு வயது பதினேழு. இதுவே அவரது முதலாவது சிறுகதை என்று செங்கை ஆழியான நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் சிறுகதை வெளியாகியுள்ள பக்கத்தில் அ.ந.க ‘சிப்பி’ என்னும் புனைபெயரில் ‘பகல் வெள்ளி’ (1941) என்னுமொரு சிறுகதையினையும் ஈழகேசரியில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ‘பகல்வெள்ளி’யே அ.ந.க.வின் முதலாவது சிறுகதையாகவிருக்க வேண்டும். ‘குருட்டு வாழ்க்கை’ வெளியான ஆண்டு 1942. ‘பகல் வெள்ளி’ வெளியான ஆண்டு 1941. அ.ந.க.வின் பிறந்த ஆண்டு 1924 என்பதால் (ஆகஸ்ட் 8, 1924) இச்சிறுகதை வெளியானபோது அவருக்கு வயது பதினேழு.
இச்சிறுகதையை வாசித்த போது இன்னுமொர் உண்மையினையும் அவதானிக்க முடிந்தது. அ.ந.க எழுதி தினகரனில் தொடராக வெளியான ஒரேயொரு நாவல் ‘மனக்கண்’. இந்நாவலின் கதையமைப்பும், ‘குருட்டு வாழ்க்கை’ சிறுகதையின் கதையமைப்பூம் ஒரே மாதிரியானவை. குருட்டு வாழ்க்கை சிறுகதையில் வரும் நாயகன் அம்மை நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இது போலவே மனக்கண் நாவலிலும் நாயகன் ஶ்ரீதர் கண் நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இரண்டிலுமே கண் பார்வை இழந்த நாயகர்களின காதலிகள் நாயகர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களின் பெற்றோர்கள் அவர்களது காதலிகள் என்று கூறி வேறு பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து வைத்து விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களுக்கு கண் சத்திர சிகிச்சை செய்து பார்வை திரும்புகின்றது. இரண்டிலுமே உண்மை அறிந்த நாயகர்கள் தாம் பெற்ற பார்வையினைத் தாமே பறித்து விடுகின்றார்கள். அவ்விதம் செய்வதன் மூலம் காதலிகள் அல்லாத மனைவியர்களுடன் குடும்பத்தை நடாத்த அவர்களால் முடிகின்றது. ஆனால் குருட்டு வாழ்க்கை சிறுகதை இந்நிலையுடன் நின்று விடுகின்றது. மனக்கண் நாவலிலோ கதை மேலும் தொடர்கின்றது. மனக்கண் நாவலில் நாயகன் தன்னை மணந்து கொண்ட பெண்ணைப்பற்றி மேலும் சிந்திக்கின்றான். அவளது தியாகத்தின் அளவை உணர்ந்துகொள்கின்றான். மீண்டும் கண் பார்வையைப் பெற விரும்புகின்றான். செல்வந்தரும், செருக்கும் மிக்க அவனது தந்தையார் இறுதியில் தன் கண்களைக் கொடுத்து அவனைக் காப்பாற்றி மறைந்து விடுகின்றார்.
குருட்டு வாழ்க்கை சிறுகதையைப்பற்றிக் குறிப்பிடுகையில் செங்கை ஆழியான் ‘ஈழகேசரித் தொகுப்பு நூலில் ‘நல்லதொரு சினிமாப்பாணிக் கதை. ஆனால் வாசித்ததும் வலிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். மனக்கண் நாவலின் இறுதியில் அ.ந.க எழுதிய முன்னுரையில் அ.ந.க ஏன் அவ்விதமானதொரு சுவை மிகுந்த கதையினைப் பின்னினார் என்பதற்கும், தான் நாவலில் பாவித்த சுவையான நடையினைப்பற்றியும் விளக்கம் தந்திருக்கின்றார். அதில் அவர் பின்வருமாறு கூறுவார்: