– சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் (கொழும்பு) முகவரியிட்டு, சுயாதீன இளம் ஊடகவியலாளரும், சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான அ.ஈழம் சேகுவேரா என்பவர், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த மடல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையில் (04.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று) பிரசுரமாகியிருந்தது. அதன் முழுவிவரம்: –
அமைச்சர் அவர்களே! முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பாக,
தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் ஊடாக ‘முன்னாள் போராளிகள்’ கால்நடைகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள விண்ணப்பிக்கும் போது, அந்த உதவித்திட்டத்தில் உள்ள நிர்வாக ஒழுங்குபடுத்தல் குறைபாடுகள் காரணமாக ‘குறித்த வாழ்வாதார உதவித்திட்டமே போராளிகளை நிரந்தர கடனாளிகளாக ஆக்கிய’ துன்பியல் நிலைமைகள் தொடர்பாகவும், மிகவும் மோசமான இந்த இடர்நிலைமைகளை களைந்து அவர்களது ‘வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றுத்தீர்வுகள்’ தொடர்பாகவும், தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.
*** ஒரு இலட்சம் ரூபாய் (100,000) நிதி ஒதுக்கீட்டுக்குள் வாழ்வாதாரத்துக்கான கால்நடைகளை (மாடுகள்,ஆடுகள்,கோழிகள்) தெரிவுசெய்யுமாறு பயனாளிகளுக்கு பணிக்கப்படுகின்றது.
பயனாளிகளும் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு கால்நடைகள் அமையும் வரை அலைந்து திரிந்து, பண்ணையாளர்களை தேடிக்கண்டறிந்து, தமக்கு பொருத்தமான கால்நடைகளை இனங்கண்டபின்னர், அரசாங்க கால்நடை வைத்தியரை தமது சொந்தச்செலவில் அழைத்துச்சென்று, கால்நடைகளுக்கு காது இலக்கத்தகடு இட்டு, தங்கள் அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டத்துக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள படிவத்தை பூரணப்படுத்தி, பண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்த பின்னர், குறித்த கால்நடைகளை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு, ‘மூன்று மாத காலம் வரை’ காத்திருக்குமாறு கச்சேரி உத்தியோகத்தர்களால் கூறப்படுகின்றது.
யாராவது ஒரு நபர் கூடிய சீக்கிரம் தனது செலவுக்கு பணம் தேவைப்படும் (நோய், விபத்து, சத்திரசிகிச்சை, வெளிநாட்டு பயணம், உயர்கல்வி, புதிய தொழில் முனைப்பு, கடன் பிரச்சினை) சந்தர்ப்பங்களில் மாத்திரமே, கைக்குத்தேவையான பணத்தை புரட்டுவதற்கு பல வழிகளிலும் முயன்று எதுவும் கைகூடிவரவில்லை என்றானபோது, ‘தன்னிடம் உள்ள அசையும் அசையா சொத்துகள் – துரவுகளை விற்பது’ எனும் இறுதித்தீர்மானத்துக்கு வருவார். ஆனால் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தங்கள் அமைச்சின் உதவித்திட்டத்தின் போது ‘மூன்று மாத காலம் வரை காத்திருக்குமாறு’ பண்ணையாளர்களிடம் கூறுமாறு பயனாளிகளிடம் சொல்லப்படுகின்றது.
‘அவசர பணத்தேவை காரணமாக, அவ்வளவு காலத்துக்கு தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கூறும் பண்ணையாளர்கள், கூடிய சீக்கிரம் தமக்கு பணம் தந்து உதவக்கூடிய வேறு நபர்களுக்கு கால்நடைகளை விற்று, துரிதகதியில் தமது பண நெருக்கடி பிரச்சினையை சமாளித்துக்கொள்கிறார்கள்.