அண்மைக்காலமாக நோயுற்றிருந்த ‘ராஜு அங்கிள்’ (ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை) நேற்று அதிகாலை (30.01.2019) மறைந்தார். என் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய ஆளுமைகளில் இவருக்குமோரிடமுண்டு. இவர் அம்மாவின் பிரியத்துக்குரிய கடைசி செல்லத்தம்பி. எம் பால்ய காலத்தில் எமக்கு மகிழ்ச்சியளித்த ஆளுமைகளிலொருவராக விளங்கிய இவர், அக்காலகட்டத்தில் என் வாசிப்பனுவத்தைத் தூண்டுவதிலும் பங்களித்துள்ளார். உடல்நிலை படிப்படியாகச் சீர்குலைந்து , உறுப்புகளொவ்வொன்று ஒவ்வொன்றாகச் செயலிழந்து , இருப்பின் முடிவினை அண்மித்த நிலையிலும் நிலைகுலையாது , தன் உடல் வேதனையெதனையும் வெளிப்படுத்தாது , வழக்கம்போல் அனைவருடனும், சிரித்த முகத்துடன் உரையாடிக்கொண்டிருந்த இவரது உள உறுதிமிக்க ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது. இறுதியில் நோயுற்று உடல் தளர்ந்தாலும் , முழுமையான , திருப்திகரமானதொரு வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கின்றார் என்னும் உணர்வே எனக்கு ஏற்படுகின்றது. அண்மையில் கூட இவரைப்பற்றிய பதிவொன்றினை ‘மறக்க முடியாத ஆளுமை ராஜு அங்கிள்’ என்னும் தலைப்பிலிட்டிருந்தேன். அதில் இவருடனான என் பால்ய காலத்து அனுபவங்களைக் குறிப்பாக வாசிப்பனுவங்களை விபரித்திருந்தேன். இவர் எவ்வகையில் என் பால்ய காலத்து வாசிப்பனுவங்களுக்கு உதவிருக்கின்றார் என்பதையும் அப்பதிவில் விபரித்திருந்தேன். அதனை அவர் நினைவாக மீண்டுமிங்கே பதிவிடுகின்றேன்.
பார்வைக்கு: 2 Feb., 2019 Saturday 4 PM – 8 PM @ OGDEN Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, Ontario M1S 1T3
இறுதிக்கிரியை: 3 Feb. 2019 9AM – 11AM @ OGDEN Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, Ontario M1S 1T3
தகனம்: 3 Feb., 2019 12 PM. @ St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7
மறக்க முடியாத ஆளுமை ‘ராஜு அங்கிள்’
என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களைப்பற்றி எண்ணியதும் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக என் நினைவில் நிற்பவர் ‘ராஜு அங்கிள்’ என்றழைக்கப்படும் ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை. இவர் என் அம்மாவின் கடைக்குட்டித்தம்பி. அவருக்கும் அம்மாவுக்குமிடையில் பதினெட்டு வயது வித்தியாசம். ஆச்சி பதின்ம வயதிலிருந்தே இல்லறபந்தத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர். அதன் விளைவு இவ்வயது வித்தியாசம். அம்மா இவரைத் தன் தம்பி என்று பார்த்ததை விடத் தனது இன்னுமொரு மகன் போன்றே எப்பொழுதும் கருதி வந்தாரென்று நான் உணர்வதுண்டு. அம்மாவின் இளமைக்காலப்புகைப்படமொன்றில் அம்மாவுடன் காற்,சட்டையுடன் இவரிருந்த புகைப்படமொன்றினைப் பார்க்கும் எவரும் அவ்விதமே கருதுவர். இவர் அம்மாவுக்கு மட்டுமின்றி அம்மம்மா, அம்மாவின் ஏனைய சகோதர, சகோதரிகள், அம்மப்பா யாவருக்குமே செல்லப்பிள்ளைதான். குறிப்பாக அம்மப்பாவின் மிகுந்த பிரியத்துக்குரிய கடைக்குட்டி பையனாக இருந்ததால், அவருடன் எப்பொழுதும் அவரது ‘நாஷ்’ காரில் இவர் திரிவார். சில சமயங்களில் அதில் நண்பர்களுடன் நகரை வலம் வருவதுண்டு. அம்மாவின் இன்னுமொரு தங்கையின் திருமணத்தின் போது அக்காரில் யாழ்நகரில் எங்களையெல்லாம் ஏற்றி விரைவாக ஓட்டிச்சென்றது இன்னும் ஞாபகத்திலுள்ளது. அம்மப்பாவின் இறுதிக்காலத்திலும் கூட எந்நேரமும் அவருடன் அவரது மரணம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்தவர் இவர். அம்மா எவ்விதம் இவரைத் தம்பி போன்று கருதாமல், மகன் போன்று கருதினாரோ அவ்வாறே நாங்களும் இவரை மாமா முறையென்றாலும் கூட அவ்வாறு கருதுவதில்லை; எங்களது நண்பர்களிலொருவரைப்போன்றுதான், மூத்த அண்ணர்களிலொருவரைப்போன்றுதான் கருதினோம்; பழகி வந்தோம். அவரும் எங்களுடன் அவ்விதமே மிகவும் இயல்பாகப் பழகி வந்தார்; வருகின்றார்.