அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் படைப்புக்கள் உள்ளடங்கிய பெருந்தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
கவிஞர் மு. செல்லையா ஈழகேசரிக்காலப் படைப்பாளிகளில் ஒருவர். சைவப்பெரியார் கா. சூரனின் மாணாக்கர் பரம்பரையின் முதல் வித்து. அவரிடம் சமயம், மொழி, இலக்கியம், ஆகியவற்றைக் கற்றதோடல்லாமல் தமிழில் விசேட தேர்ச்சி பெறும்பொருட்டு கரவெட்டிப் பண்டிதர் திரு க. மயில்வாகனம் உபாத்தியார் அவர்களிடம் இலக்கண இலக்கிய நூல்களையும் சமய அறிவுக்கு அடிப்படையாக புராணத்தையும் சைவப்பெரியார் அவர்களின் வழிகாட்டலிலேயே கற்றுத்தேர்ந்தார். பிற்காலத்தில் மதுரைப் பண்டிதர் பரீட்சைக்காக பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களிடமும் வித்துவான் ந. சுப்பையாபிள்ளையவர்களிடமும் பாடங்கேட்டார்.
1927 ஆம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து கொண்டு வெளியேறினார். தேவரையாளிச் சமூகத்தின் மத்தியில் இருந்து தோன்றிய முதலாவது பயிற்றப்பட்ட சைவஆசிரியன் என்ற பெருமையும் பெயரும் கவிஞர் அவர்களுக்கே உரியது. பண்டிதர், ஆசிரியர், தலைமையாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், சோதிடர், சமூக விடுதலை விரும்பி, சமூக முன்னோடி ஆகிய பல்பரிமாண ஆளுமை மிக்கவர். சைவசமய அபிமானியாகவும் காந்தீயக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தின்மீது ஆராக் காதல் கொண்டு கதர் உடையணிந்து காந்தியவாதியாகவே தன் வாழ்வை மேற்கொண்டவர்.
இப்பெருந்தொகுதியின் பதிப்பாசிரியர்களாகிய கலாநிதி சு. குணேஸ்வரன் மற்றும் திரு மா. செல்வதாஸ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கவிஞர் மு. செல்லையாவின் படைப்புக்களைத் தேடிக் கண்டடைந்து 632 பக்கங்களில் பெருந்தொகுதியாக்கியிருக்கிறார்கள்.